அன்றைய தி.மு.க., இன்றைய தி.மு.க. என்ன வித்தியாசம்?

ஜே.ஜெயக்குமார், நாட்டரசன்கோட்டை.
குமரிப் பெண்ணின் உள்ளத்தில் குடியிருக்க என்ன செய்யவேண்டும்?
முதலில் கிரெடிட் கார்டு வாங்கவேண்டும். அப்புறமென்ன குஷால்தான். (உங்களுக்கல்ல!)
மு.மதிவாணன், அரூர்.
பட்டத்து யானையின் தும்பிக்கையில் மாலையைக் கொடுத்து மன்னரை அந்த காலத்தில் தேர்ந்தெடுத்ததைப் போல, இப்போதும் தேர்ந்தெடுத்தால்?-
எந்த யானை என்று சொல்லிவிடுங்கள். கரும்புடன் சென்று ‘கண்டுக்கறேன்’.
எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.
இன்றைய தேசத்தைத் தூய்மைப்படுத்த யாரை உயிர்ப்பிப்பது பொருத்தமாக இருக்குமென்று நினைக்கிறீர்கள்?
பாவம் அப்படிப்பட்ட தலைவர்களை எல்லாம் உயிர்ப்பித்து அவர்களின் தூய்மையைக் கெடுத்துவிடாதீர்கள், ப்ளீஸ்!
ச.ஆ.கேசவன், இனாம் மணியாச்சி.
கவலை இல்லாத மனிதனின் முகவரி என்ன?
கடமை இல்லாத மனிதனின் முகவரிதான்!
பா.சண்முகவேல், சிவகங்கை.
தேசிய நலனுக்காகக் குரல்கொடுக்கும் கம்யூனிஸ்ட்களின் வழிவந்த அச்சுதானந்தன், முல்லைப் பெரியாறு விஷயத்தில் நடந்து கொள்ளும் முறையும், அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் தமிழ்நாடு கம்யூனிஸ்ட்களின் நடவடிக்கையும் உமக்கு எரிச்சலைத் தருகிறதா, இல்லையா?
சில கொள்கைகளில் தேசிய நலனுக்காகக் குரல் கொடுக்கும் கம்யூனிஸ்ட்களின் குரல் மாநில அரசியலுக்கு வரும்போது, தொண்டைக் கட்டி குரல் மாறுவது புதிதில்லை. ‘எப்பாடுபட்டாவது’ தன் மாநிலத்தின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கொள்கையில் தமிழர்களைத் தவிர மற்றவர்கள் உறுதியாக இருக்கிறார்கள். இதையெல்லாம் பார்த்தாவது நமக்கு புத்தி வந்தால் சரிதான்.
சா.செல்வஜான்சன், கன்னங்குளம்.
** அண்ணா வழி நடத்திய தி.மு.க.வுக்கும் கலைஞர் வழி நடத்தும் தி.மு.க.வுக்கும் என்ன வேறுபாடு?

அவர் கட்சியை தன் பிடியில் வைத்திருந்தார். இப்போது கட்சி ‘சன்’(கள்) பிடியில்.
எம்.கே.அருள்ராஜா, முனியங்குறிச்சி.
உடம்பை நல்லபடியாக வைத்துக்கொண்டு சிலர் பிச்சையெடுக்கக் காரணம் என்ன?
தொடர்ந்து உடம்பை நல்லபடியாக வைத்துக் கொள்வதற்காகத்தான்.
இரா.ஆறுமுகம், சின்னசேக்காடு.
பணம்தான் ஆட்சி, பதவிகளை நிர்ணயிக்கும் என்றால் ஜனநாயகம் எதற்கு?
புரியாமல் பேசாதீர்கள். ஜனநாயகத்தை வைத்துத்-தானே அந்தப் பணத்தைச் சம்பாதிக்கிறார்கள்?
ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.
சம்பள உயர்வு, இலவசங்கள் மூலம் எதிர்க்கட்சியினர் காணாமற் போய்விட்டதாக மக்களிடையே ஒரு பிரமை ஏற்பட்டுவிட்டதே?
இன்று இனிக்கும் இலவசங்களே அளவுக்கு மிஞ்சி கசக்கும்போது, கா(ஆ)ட்சிகள் மாறலாம்.
எல்.மோகனசுந்தரி, கிருஷ்ணகிரி-1.
தனியார் பணி, சொந்தத் தொழில், அரசு வேலை& இதில் எது பெஸ்ட்?
உழைப்பை நம்பினால் முதலிரண்டிலும் முன்னேறும் வாய்ப்பு பிரகாசம். மூன்றாவதில் உழைப்பவர்களும் குறைவு. அப்படி உண்மையாக உழைப்பவர்கள் முன்னேறும் வாய்ப்பும் அதைவிட குறைவு.
எஸ்.ஜெயகாந்தன், புன்செய்புளியம்பட்டி.
இளைஞர்களுக்கு வழிவிடும் காலம் வந்து விட்டது. ஆனால், அவர்களை செம்மைப் படுத்த நாங்கள் இன்னும் சில காலம் பதவியில் இருக்க வேண்டிய தேவை இருக்கிறது என இ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளது பற்றி?
இந்தக் கால இளைஞர்கள் உருப்படியாக பணியாற்றுவார்கள் என்ற நம்பிக்கை-யிருந்தது. ‘தன்னைப் போலவே’ அவர்களையும் செம்மைப் படுத்தி-விடுவார்களோ இவர்கள் என்று கவலையாக இருக்கிறது. பாவம் இளைஞர்கள் -போதாத காலம்.
பொருநை பாலு, திருநெல்வேலி.
விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை ஆண்களிடம் இருக்க வேண்டுமா? பெண்களிடம் இருக்க வேண்டுமா?
மெகா சீரியல்களைப் பார்த்தால் கணவனையோ மனைவியையோ வேறு ஒருவரிடம் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை ஆண்கள் பெண்கள் இருவரிடமும் பெருகி வருவதைக் கண்டு ‘களிக்க’ முடிகிறது.
சா.சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம்.
பொய்சொல்லும் பழக்கம் மக்களிடையே எப்படித் தோன்றியது?
உண்மையை மறைக்க நினைத்தபோது!
நென்மேலி ஆர்.நந்தகுமார், தி.மலை.
சீதையை இராவணன் கவர்ந்து சென்றதை வைத்துதான், ‘பாரியாள் ரூபவதி சத்ரு’ என்ற பழமொழி ஏற்பட்டதா? அல்லது இவ்வாறு கூறப்படுவதற்கு வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கிறதா?
இராமாயணத்திற்கு முன்னால் நடந்ததாகக் கொள்ளப்படும் அகலிகை கதையின் நீதியும் இதுதான். இந்த விஷயத்தால் வம்பை எதிர்கொண்ட ஆண்களின் சலிப்பில் விளைந்த வார்த்தைகள்.
உ.பாலசுப்பிரமணியம், தேப்பெருமாநல்லூர்.
சீனியருக்குப் பிடித்த விளையாட்டு எது?
விளையாட்டான கேள்விகளுக்கு சீரியஸாகவும், சீரியஸான கேள்விகளுக்கு விளையாட்டாகவும் பதில் சொல்லும் விளையாட்டு.
அ.சுகுமார், காட்டுக்கானூர்.
பின்புலம் பலமாக இருந்தும் சில ‘வாரிசுகள்’ சோடை போவது ஏன்?
பெருங்காயம் இருந்த டப்பாவில் எவ்வளவு நாள் வாசனை இருக்கும்? பல வாரிசுகள் உச்சியில் ‘கனத்தால்’ உருப்படாமல் போய்விடுகிறார்கள்.
கே.ஏ.நமசிவாயம், பெங்களூர்.
நன்கு படித்த பெண்கள்தான் விவாகரத்து வேண்டி இன்று குடும்ப நல கோர்ட்படி ஏறுகிறார்கள். படிப்பு, இல்லறவியலைத் துறக்க வைத்து விடுகிறதா?
கோர்ட் படி தெரிவதற்கு படிப்பு காரண-மாயிருக்கிறது. ஆணோ பெண்ணோ... படித்தவர்களுக்கு சகிப்புத்தன்மை குறைந்துவருவதும் இதற்கு அடிப்படைக் காரணம்.
ஆர்.ஸ்டெபினா, புதுகை.
நல்லவன் தோற்றுப்-போனால் அதற்கு என்ன அர்த்தம்?
நல்லதிற்கு காலமில்லை என்று.
மா.ராசன், தி.நகர்.
ஓர் ஆட்சியின் அதிகார -மையங்கள் எப்படி உருவாகின்றன?
அநேகமாக ஆறாவது விரலாய். ஒட்டியும் ஒட்டாமலும் இருந்துகொண்டு ஆடும். அதனால்தான் இந்த விரலுக்கு அதிர்ஷ்ட விரல் என்று பெயர்.
எம்.கருணாகரன், மேற்குமாம்பலம்.
பொதுநலத் தொண்டர்கள் என்று கூறிக்கொள்ளும் பல அரசியல்வாதிகள் ஏதாவது ஒரு விதத்தில் சுயநலவாதி-யாகவேதான் இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் இல்லாத அரசியல் அமைப்பை உருவாக்க முடியாதா?
போலீஸ் இல்லாத போலீஸ் ஸ்டேஷன்கள் அமைக்க முடியுமா?
எல்.ராஜேஸ்வரி, காவேரிப்பட்டணம்
ஓய்வுக்குப் பின் சீனியர் செட்டிலாக விரும்புவது எங்கே?
சொந்த கிராமத்தில் பாரதி பாடிய காணிநிலம் அட்மோஸ்பியரில்தான் என்று தீர்மானமாகிவிட்டது. ஓய்வு எப்போதென்றுதான் தெரியவில்லை.
க.கவிதா, செம்மங்குடி
எப்படிப்பட்ட தருணத்தில் இரந்துண்டு வாழ்வதில் தப்பில்லை?
எந்த விதத்திலும் உழைக்கவே முடியாத அளவு உடல் ஊனமுற்றவர்களின் விஷயத்தில் மட்டுமே ஒத்துக்கொள்ள முடியும்.
ஆர்.அஜிதா, கம்பம்
தோழர் உ.ரா.வரதராஜன் தற்கொலை செய்து கொண்டது பற்றி?
கொள்கை திடம் உள்ள ஒரு செயல்வீரரைக் கூட மன உளைச்சல் கோழையாக்கிவிடும் என்பதையே காட்டுகிறது. வருந்தத்தக்க & தவறான முடிவை எடுத்துவிட்டார் தோழர்.
ஜி.எம்.மஞ்சரி, கிருஷ்ணகிரி.
எந்தக் குழந்தையின் கேள்விக்காவது பதில் சொல்லத் தெரியாமல் விழித்த அனுபவம் உண்டா?
இன்றைய குழந்தைகளின் கேள்விகளுக்கு பதில் சொல்வது என்பது சில சமயங்களில் கஷ்டமாகவும் பல சமயங்களில் சங்கடமாகவும் ஆகிவிட்டது. கஷ்டமான கேள்வி வந்தால் ‘விடு ஜூட்’தான் சிறந்த வழி.
பி.பாலாஜிகணேஷ், கோவிலாம்பூண்டி.
சம்சாரியை விட சன்னியாசிக்கு பல இன்னல்கள் என்று கூறப்படுவது சரியா?
சௌகரியம் ஏற்படும் இடத்தில்தான் இன்னல்கள் வரும். இன்றைய சன்னியாசிக்கு பலவித சௌகரியங்கள் ‘அமைவதால்’ இன்னலும் ஜன்னலைத் திறக்காமலேயே உள்ளே வந்துவிடுகிறது.
ப.ராமகிருஷ்ணன், காயக்காடு
ஈசனே நெற்றிக் கண்ணைத் திறக்கும்போது சாதாரண மனிதனால் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியுமா?
நெற்றிக்கண் என்பதே ஞானக்கண்தான். கோபத்தைக் கட்டுப்படுத்துவதுதான் ஞானத்தின் விளைவாக இருக்கும்போது இந்த ஈசன் விஷயம் எங்கோ இடிக்கிறதே?
எஸ்.சீதாலட்சுமி, வேலூர்.
* சில பேரின் மௌனத்தைப் புரிந்துகொள்ள முடிந்தும், வார்த்தைகளைப் புரிந்துகொள்ள முடியவில்லையே ஏன்?
மௌனம் மனதின் கண்ணாடி& தெளிவாகத் தெரியும். வார்த்தைகள் கலைடாஸ்கோப் -எண்ணக் குலுக்கலில் கலைந்து தெரியும்.
கே.வெங்கடேசன், தோட்டப்பாளையம்.
பெண்களைப் பற்றிக் கூறப்பட்டுள்ள பொன்மொழிகளில் உங்களை மிகவும் கவர்ந்தது எது? ஏன்?
பொம்பளை சிரிச்சா போச்சு -
பொகையிலை விரிச்சா போச்சு இந்தப் பொன்-மொழி பாடல்.
இரண்டுமே ‘கிக்’ கொடுக்கும் விஷயம். ஆனால், கட்டுப்பாட்டில் இல்லாவிட்டால் உண்மையாகவே ‘கிக்’ கொடுத்துவிடும்.
மலைஅரசன், அருகந்தம்பூண்டி.
அனைவருக்கும் மண், பெண், பொன் ஆசைகள் இல்லாமல் போய்விட்டால் உலகம் எப்படி இருக்கும்?
கேள்வி கேட்பவர் மலையானந்தாவாகவும் பதில் சொல்பவர் சீனியரானந்தாவாகவும் இருக்கும்.