எண்ணத்தைச் சொல்லுகிறேன்
தமிழனுக்கு பாடம் நடத்திய எருமைகள்!

வனவிலங்குகளின் இயல்பு தொடர்பான செய்திப் படங்களை, ஆவணப்படங்களை எப்போதுமே ஆர்வத்துடன் பார்ப்பவன் நான். அவற்றைப் பார்க்கும்போது சில சமயங்களில், மனிதனை விட மிருகமே பரவாயில்லை என்று தோன்றுவதுண்டு. ஆனால், சென்ற வாரம் நேஷனல் ஜியாகிரபிக் சேனலில் பார்த்த ஆவணப் படம் ஒன்று மனத்தை உலுக்கியெடுத்துவிட்டது.
வன விலங்குகளின் இயல்புகளை வீடியோவில் பதிவு செய்வதற்காக, தென் ஆப்பிரிக்கக் காட்டுப் பகுதி ஒன்றில் கேமிராவும் கையுமாக திரிந்துகொண்டிருக்கும் அந்தப் படப்பிடிப்புக் குழுவினர், அதிரடித் திருப்பங்களைக் கொண்ட அபூர்வக் காட்சி ஒன்று தங்கள் கேமிராவில் சிக்கும் என்று நினைத்துக் கூடப் பார்த்திருக்கமாட்டார்கள். ஜேம்ஸ்பாண்ட் திரைப்படத்தில் கூட அவ்வளவு திருப்பங்ளைப் பார்க்கமுடியாது. இன்றைய சூழ்நிலையில், அந்தப் படக்காட்சியை உள்ளது உள்ளபடி அப்படியே விவரிக்கவேண்டியது மிக மிக அவசியம்.
நான்கு எருமை மாடுகளும் ஒரு எருமைக் கன்றுக்குட்டியும் நதிக்கரையோரம் நடந்து வருகின்றன. சற்றுத் தொலைவில் ஐந்தாறு சிங்கங்கள் தங்களுக்காகக் காத்திருப்பதை அவை அறியவில்லை. என்றாலும் வலுவான வளைந்த கொம்புகளைக் கொண்ட பலமான எருமை ஒன்று மற்றவற்றுக்கு முன்பாக நடந்து வருகிறது, ஆபத்து ஏதாவது இருக்கிறதா என்று சுற்றுமுற்றும் பார்த்தபடியே. தூரத்தில் வரும் எருமைகளைப் பார்த்துவிடும் சிங்கங்கள், இரை இன்னும் கொஞ்சம் அருகில் வரட்டுமே என்று பதுங்குகின்றன. ஓரளவு நெருக்கத்தில் வந்தபிறகுதான், முன்னால் வருகிற எருமை சிங்கங்களைக் கவனிக்கிறது. உடனேயே அது பின்வாங்க, மற்ற எருமைகளும் பின்வாங்க, சிங்கங்கள் எழுந்துகொள்கின்றன. இப்போது உயிர்ப் பயத்தில் எருமைகள் ஓடத் தொடங்க, சிங்கங்கள் விரட்டுகின்றன.

நாலைந்து சிங்கங்கள் பெரிய எருமைகளை விரட்ட, ஒரு சிங்கம், மிகுந்த சூழ்ச்சித் திறனுடன், எருமைக் கன்றுக்குட்டி மீது பாய்ந்து அதன் ஓட்டத்தைத் தடுக்கிறவிதத்தில் நதியில் தள்ளிவிடுகிறது. பெரிய எருமைகளை விரட்டிவிட்டுத் திரும்பும் மற்ற சிங்கங்களும் அதனுடன் சேர்ந்துகொள்கின்றன. நதிநீரில் விழுந்த எருமைக் கன்றை ஆறு சிங்கங்களும் சேர்ந்து கரைக்கு இழுக்கின்றன. அப்படியொரு அவல நிலையிலும் உறுதியாய் நின்று, நதியிலிருந்து உடனே வெளியே வந்துவிடாமல் கூடியவரை எதிர்ப்பு காட்டுகிறது அந்தக் குட்டி எருமை.
அப்போதுதான், யாருமே எதிர்பார்க்காத இன்னொரு திருப்பம் அரங்கேறுகிறது. நதி நீரில் வேகமாக நீந்திவரும் பெரிய முதலை ஒன்று, கரைக்கு இழுக்கப்படும் கன்றுக்குட்டியின் கால்களைக் கவ்வி, அதை நதிக்கு இழுக்கிறது. அந்த அப்பாவிக் கன்றுக்குட்டியைத் தனக்கு இரையாக்க முயலும் முதலை நதியில். அதைத் தங்களுக்கு இரையாக்க முயலும் சிங்கங்கள் கரையில். இந்த விதியின் விளையாட்டில் நசுங்கி நாசமாகிக் கொண்டிருக்கிறது அந்த அப்பாவிக் கன்றுக்குட்டி.
மூர்க்கத் தனமாக இழுக்கும் சிங்கங்-களுக்கும் முதலைக்கும் இரைக்காக நடக்கும் இந்தப் போட்டியில் மெஜாரிட்டிக்குத் தான் வெற்றி. முதலையிடமிருந்து எருமைக் கன்றைப் பிடித்து இழுத்துக் கரை சேர்த்து விடுகின்றன சிங்கங்கள். தோல்வியுடன் நதிக்குள் திரும்புகிறது முதலை.
கன்றுக்குட்டியைக் கொன்று ருசி பார்க்கத் தயாராகும் சிங்கங்கள், அதைச் சுற்றி உட்கார்ந்து கொள்கின்றன. அவலக் குரல் எழுப்புகிறது அந்த அபலை. அப்போது தான் எதிர்பாராத அடுத்த திருப்பம் நிகழ்கிறது. ஓடிப்போன எருமைகளின் தலைமையில் அணிவகுத்துவரும் எருமைக் கூட்டம் ஒன்று சிங்கங்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது. (‘அணிவகுத்து’ என்ற வார்த்தை சுவாரஸ்யத்துக்காகச் சேர்க்கப்பட்டதல்ல. உண்மையாகவே, ஒரு அணிவகுப்பு மாதிரிதான் இருக்கிறது அவற்றின் வருகை.)
நூற்றுக்கும் மேற்பட்ட எருமைகள் வந்திருந்தாலும், சிங்கங்களை நெருங்க அஞ்சுகின்றன. சிங்கங்களை நோக்கி முன்னேற முற்படும் ஓரிரு எருமைகளும், அதே வேகத்தில் பின்வாங்குகின்றன. இந்த அச்சம்தானே சிங்கங்களின் பலம்.
சில நொடிகள் பதற்றத்துடன் நகர, துடித்துக் கொண்டிருக்கிறது கன்றுக்குட்டி. அதன் அவலக் குரல் ஏற்படுத்துகிற சீற்றத்தால் உந்தப்பட்டோ என்னவோ, முதலில் ஓடிய பெரிய எருமைகளில் ஒன்று சிங்கங்களின் மேல் பாய்கிறது. சிங்கங்களில் முதலாவதாக இருக்கும் சிங்கம் ஓரளவு அச்சத்துடன் அந்தக் கூட்டத்திலிருந்து விலக, அந்தப் பெரிய எருமை அதை விரட்டுகிறது. கொஞ்ச தூரத்துக்கு கோபத்தோடு அதை விரட்டிச் சென்றுவிட்டு திரும்பிவருகிற அந்த எருமை, கன்றுக்குட்டியைப் பற்றியுள்ள இன்னொரு சிங்கத்தைத் தன் கொம்புகளால் முட்டித் தூக்கி அடிக்கிறது. தரைக்கு மேல் ஆறேழு அடி உயரத்துக்கு மேல் தூக்கியெறியப்பட்டுக் கீழே விழும் அந்தச் சிங்கம் அச்சத்தால் ஓட்டம் பிடிக்க, நிறைய எருமைகள் அதைத் துரத்திச் செல்கின்றன.
சூழ்நிலை தலைகீழாக மாறிவரும் தைரியத்தில் இன்னொரு எருமையும் தன் கொம்புகளால் முட்டி இன்னொரு சிங்கத்தைத் தூக்கியெறிகிறது. அந்தச் சிங்கமும் ஓட்டம் பிடிக்க, இப்போது எருமைகளிடமிருந்த அச்சம், மிச்சமிருக்கும் சிங்கங்கள் பக்கம் கட்சி மாறிவிடுகிறது. எருமைகள் நெருங்கிவர, மேலும் இரண்டு சிங்கங்கள் ஓடிவிடுகின்றன.

இதற்குள், மிச்சமுள்ள இரண்டு சிங்கங்களின் பிடியிலிருந்து கன்றுக்-குட்டியை மீட்டுவிடுகின்றன மற்ற எருமைகள். கடித்துக் குதறப்பட்டுள்ள கன்றுக்குட்டி, மிகுந்த சிரமத்துடன் நடந்துபோகிறது. ‘ஆபரேஷன் கன்றுக்குட்டி’ வெற்றிகரமாக நிறைவடைவதைப் பார்த்து, அந்தப் படப்பிடிப்புக் குழுவினர் நெகிழ்ச்சியுடன் நிற்கின்றனர். பார்க்கிற நாமும் நெகிழ்ந்து போகிறோம்.
பொதுவாகவே, எருமைகள் என்றாலே நமக்கு ஏளனம். கொஞ்சம் மந்தமாக இருப்பவர்களைத் திட்டுவதற்கு அதிகமாய்ப் பயன்படுத்துகிற வார்த்தை அதுதான். ‘எருமைமாடு’, ‘எருமை மாதிரி நிற்காதே’ இப்படியெல்லாம் திட்டுவதோ திட்டு வாங்குவதோ தமிழனுக்கு சர்வசாதாரணம். அந்த எருமைகள்தான் தமிழனுக்குப் பாடம் எடுத்துவிட்டுப் போகின்றன, இந்த ஆவணப் படத்தில்.
எருதுகள் சேர்ந்து சிங்கங்களை விரட்டும் கதைகள் தமிழில் உண்டு. அதே சமயம், கதைகளில் மட்டும்தான் அது சாத்தியம் என்ற உறுதியான நம்பிக்கையும் உண்டு. இந்தப் படத்தைப் பார்த்தவுடன், நாமெல்லாம் தமிழனா- என்கிற கேள்வி எழவில்லை. நாமெல்லாம் மனிதனா- என்கிற கேள்விதான் எழுந்தது.
தன்னுடைய தொப்புள்கொடி உறவு கண்ணெதிரில் செத்துக்-கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை எருமையால். யார் எக்கேடு கெட்டாலென்ன, நாம் பாது-காப்பாயிருந்தால் போதும் என்று அது போய்விடவில்லை. திரும்பி-வருகிறது. சிங்கத்தின் பலத்தைப் பார்த்துப் பயப்பட-வில்லை. சிங்கத்தின் இறை-யாண்மையில் எப்படித் தலையிடமுடியும் என்றெல்லாம் தயங்கவில்லை. உனக்கு எவ்வளவு தான் பலமிருந்தாலும், என் சொந்தத்தைக் கண்ணெதிரில் நீ கொல்லமுயன்றால் உயிரைக் கொடுத்தாவது தடுப்பேன் என்கிற அறம்சார் சினம் அந்த எருமைகளுக்கு இருந்தது. நம்மிடம் அதுதானே இல்லை என்கிற குற்ற உணர்ச்சியில் குறுகிப்போகிறது மனசு.
26 மைலில் சிங்கள வெறியர்களால் விரட்டி விரட்டிக் கொல்லப்பட்டது தமிழினம். இங்கே தமிழர்களுக்கும் சேர்த்துப் பிரதமராயிருப்பவர், சிங்களர்களின் இறையாண்மையில் தலையிடமுடியாது என்றார். தமிழகத் தலைமையோ அப்பட்டமாகத் தன் பொறுப்பைத் தட்டிக்கழித்தது.
அங்கே தமிழினமே படுகொலை செய்யப்பட்ட-போது, மன்மோகன்சிங்கும் கருணாநிதியும் என்ன செய்துகொண்டிருந்தார்கள் என்பதை விட்டுத்தள்ளுங்கள். நாம் என்ன கிழித்தோம்? செத்துக் கொண்டிருக்கிற எங்கள் சகோதரர்களைக் காப்பாற்று என்று ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், ஊர்வலமெல்லாம் நடத்தத் தான் செய்தோம். இல்லையென்று சொல்லவில்லை. அந்த ஒருநாள் அல்லது அரைநாள் நாடகத்துக்குப் பிறகு நாம் என்ன செய்தோம்? முத்துக்குமார் போல், அந்தக் கொடுமையைத் தாங்க இயலாமல் தீக்குளித்துக் கொண்டோமா?
முத்துக்குமாரைத் தொடர்ந்து 14பேர் தீக்குளித்தபிறகு கூட, மத்திய அரசும் மாநில அரசும் அசைந்து கொடுக்கவில்லையே! அப்படியொரு சூழலில் என்ன செய்திருக்கவேண்டும் நாம்! நமது எண்ணிக்கை என்ன சிறிதா? ஏழு கோடி பேர்! அந்த எருமைகள் போல் நாம் அத்தனைப்பேரும் ஒன்றாய்த் திரண்டிருந்தாலே போதும், இந்திய அரசு நடுங்கியிருக்கும். இந்தியா நடுங்கியிருந்தால், இலங்கை ஒடுங்கியிருக்கும். இதுதானே யதார்த்தம்!
உலக வரைபடத்தில், ஆப்பிரிக்காவின் கொம்புபோல இருப்பது, எரித்ரியா என்கிற குட்டிநாடு. விடுதலைப் புலிகளை அரவணைத்த நாடு என்கிற அடிப்-படையில் தமிழீழத்தை மனப்பூர்வமாக அங்கீகரித்த முதல் நாடு என்கிற பெருமையைப் பெற்றிருக்கிறது அது. ஏகாதி-பத்தியங்களையும் அடக்குமுறைகளையும் எதிர்த்துப் போரிட்ட அனுபவத்தாலும், அந்த வேதனையை உணரமுடிந்ததாலும் புலிகளை ஆதரித்திருக்கிறது அது. உலக நாடுகளெல்லாம், சிங்கள அரசுக்கு ஆதரவாயிருந்தபோது, புலிகளுக்கு ஆதரவாக இருக்க 50 லட்சம் மக்களே கொண்ட அந்தக் குட்டி நாட்டுக்கு எவ்வளவு துணிவு இருந்திருக்க-வேண்டும்! எண்ணிக்-கையில் நாம் அவர்களைப் போல் 15 மடங்கு. ஆனால் அடங்கி, ஒடுங்கி, நடுங்கி உட்கார்ந்து கொண்டிருந்தோம். வெட்கித் தலை குனிய வேண்டிய விஷயம்.
சென்னையிலேயே இருக்கிறது இலங்கைத் தூதரகம். ஒரு பத்துலட்சம் பேர் ‘போரை நிறுத்து’ என்கிற முழக்கத்துடன் அந்தத் தூதரகத்தை முற்றுகையிட்டிருந்தால் அரசாங்கம் அவர்களை என்ன செய்திருக்கமுடியும்? அத்தனை பேரையும் அடித்து உதைத்து துப்பாக்கிச் சூடு நடத்திக் கலைத்-திருக்கமுடியுமா அரசால்? அப்படிச் செய்திருந்தால், கூட்டம் கலைந்திருக்காது, ஆட்சி தான் கவிழ்ந்திருக்கும்.

நடந்து முடிந்த இன அழிப்புக்கு முழுமுதல் காரணமான காங்கிரஸ் கட்சியின் அலுவலகமான சத்தியமூர்த்தி பவன் சென்னையில் இருக்கிறது. அங்கே போயாவது சாத்வீகமாக நியாயம் கேட்டிருக்கவேண்டாமா? சத்தியமூர்த்தி பவனுக்குப் போய், ‘இப்படியொரு இனப்படுகொலைக்குத் துணை போவது நியாயமா?’ என்று அங்கேயிருந்த காங்கிரஸ் நிர்வாகிகளிடம் கேட்கும் துணிச்சல் ஒரு பெண்கள் அமைப்புக்கு இருந்தது. மற்றவர்களுக்கு அந்தத் தைரியம் இல்லாது போனது ஏன்? சென்னையிலுள்ள ராணுவ அலுவலகத்துக்கே போய்ப் போராடும் துணிவு, பால்கனகராஜ் தலைமையிலான வழக்கறிஞர்களைத் தவிர வேறெவருக்கும் வரவேயில்லையே, ஏன்? மனசாட்சியைத் தொட்டுக் கேளுங்கள்... நடந்த இனப்படுகொலை தொடர்பான குற்றவாளிகள் பட்டியலில் ராஜபக்ஷே, பொன்சேகா, சோனியா, கருணாநிதி- ஆகியோரின் பெயர்களை அடுத்து நம் பெயர் இருக்கிறதா, இல்லையா?
திரைப்பட இயக்குநர் ஆர்.சி.சக்தியிடம் இதை விவரித்துவிட்டு, அவரது கருத்தினைக் கேட்டேன். எதிலுமே அவருக்கென்று ஒரு தனிப் பார்வை உண்டு. ‘‘தமிழனைத் தவிர வேறெந்த உயிரினமும் தன் கண்ணெதிரில் தன் இனம் கொல்லப்படுவதை அனுமதிக்காது என்பது இதிலிருந்து தெரிகிறது’’ என்றார் ரத்தினச் சுருக்கமாக. சுருக்கம்தான் என்றாலும் இதைவிட விரிவாக நாம் வேறென்ன சொல்லிவிட முடியும்?
பின் குறிப்பு: இந்தப் படத்தைப் பார்த்த பிறகு எனக்குள் எழுந்த கேள்வி ஒன்றுக்கு இன்னும் விடைகாண முடியவில்லை. கன்றுக்குட்டியை விட்டுவிட்டு சிங்கங்களிடமிருந்து தப்பி ஓடிய எருமைகள், மற்ற எருமைகளிடம் போய், ‘சேனைத் தலைவர்காள்! சிறந்த மந்திரிகாள்!’ என்று எந்த மொழியில் வசனம்பேசி படை திரட்டியிருக்கும்? எருமைகளின் மொழி செம்மொழியாயிருக்க வாய்ப்பே-யில்லையே! இதற்கான சரியான விடை தெரிந்தவர்கள் ‘தமிழக அரசியலு’க்குத் தகவல் கொடுங்கள்.
(குறிப்பிட்ட அந்தப் படக் காட்சியைப் பார்க்க விரும்புபவர்கள் வலையில் அதைத் தேடிப் பிடித்துவிடலாம். முகவரி: லீttஜீ://ஷ்ஷ்ஷ்.ஹ்ஷீutuதீமீ.நீஷீனீ/ஷ்ணீtநீலீ?ஸ்=லிஹி8ஞிஞிசீஞீ68ரிவி)
‘
புகழேந்தி தங்கராஜ்