கண்ட்ரோல் ரூமிலிருந்து ஏட்டு ஏகாம்பரம்
‘நொந்த துர’ போலீஸார்!
எய்ட்ஸ் விழிப்புணர்வுக்காக தமிழகம் முழுவதும் ‘தில்லுதுர’ விளம்பரம் சக்கை போடு போட்டுவருகிறது. ஆனால், கோவை போலீஸாருக்கு என்ன பிஸியோ... இந்த விளம்பரத்தின் நோக்கம் அவர்களுக்கு புரியாமல் போய்விட்டது.
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த ‘தில்லுதுர’ விளம்பரத்தை அப்பகுதி போலீசார், ஏதோ அனுமதியில்லாமல் வைக்கப்பட்டிருக்கும் சினிமா போஸ்டர் என நினைத்து இரவோடு இரவாக, அனைத்தையும் பிடுங்கி ஜீப்பில் ஏற்றிச் சென்றுவிட்டனர். மறுநாள் காலை அப்பகுதி வழியாக வந்த சில மாநகராட்சி அதிகாரிகள் பேனர்கள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்து அதே ஆர்.எஸ்.புரம் போலீஸில் புகார் கொடுத்தனர். புகாரைப் பார்த்ததும்... அரசு விளம்பரம் என்பது கூடத் தெரியாமல் பேனர்களை கொண்டு வந்த போலீசார் என்ன செய்வது என்று முழித்துள்ளனர். அதன் பின் மெதுவாக மாநகராட்சி அதிகாரிகளிடம் நடந்ததை கூறி புகாரை பெறாமல் அசடு வழிந்துள்ளனர். ‘தில்லு’துரைகள் போல பேனர்களை அகற்றிய போலீஸார், நொந்த துரைகளாக மாறி அதே இடத்தில் பேனர்களை திரும்பக் கட்டிக் கொண்டிருந்ததுதான் ஹைலைட்.
தெளிய வைத்த அதிகாரி!
கோபி சப் டிவிஷன் இன்சார்ஜ் அதிகாரி ஒருவர் சில நாட்களுக்கு முன் « பாலீசாருடன் கோபி பஸ் நிலையத்தில் இரவு வலம் வந்திருக்கிறார். அப்போது பெண்கள் அதிகம் பேர் நின்றிருந்த பகுதியில் குடிமகன் ஒருவன் தன்னிலை மறந்து ‘பிளாட்’ ஆகிக் கிடந்திருக்கிறான். போலீஸார் எழுப்ப முயல அசால்ட்டாக புரண்டு படுத்திருக்கிறான் குடிமகன். கொஞ்சமும் சட்டை செய்யால் இருந்த அவன் மீது தண்ணீரை போலீஸார் வாரி இறைத்தும் அசைவு இல்லை. பொறுமை இழந்த அந்த அதிகாரி கையில் வைத்திருந்த பிரம்பால் அவனை பலமாக பதம்பார்க்க ஆரம்பிக்க... வலிதாங்காமல் தள்ளாடி எழுந்தான்.
‘எவன்டா என்னை எழுப்பினது?’ என்றபடி அவரை பார்த்து ஏக(ப்பட்ட) வசனங்களை வீச சுற்றி இருந்த பொதுமக்கள் அதிகாரியைப் பார்த்து சிரித்துவிட்டனர். ‘ஆக்ஷன் எடுத்தாலும் சிரிப்பீங்க. ஆக்ஷன் எடுக்காட்டா திட்டுவீங்க’ என பப்ளிக் மீது நியாயமாக கோபம் காட்டிய அந்த அதிகாரி குடிமகனை தனியாக அழைத்துப்போய் ‘தெளிய’வைத்து அனுப்பினாராம்.
பெட்டிக்கடையையும் விடாத போலீஸ்!
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே காப்பனாமங்கலத்தைச் சேர்ந்த மகாலிங்கம், மாவட்ட வருவாய் அலுவலர் ஜான் லூயிஸிடம் கொடுத்த புகாரின் சாராம்சம் இதுதான். ‘‘ஊனமுற்ற நான் பெட்டிக்கடை வைத்து வாழ்க்கையை ஓட்டி வருகிறேன். எனது கடை அருகே டாஸ்மாக் மதுபான கடை வந்துள்ளது. மது ஒழிப்பு போலீஸ் படையைச் சேர்ந்த காசிராமன், சங்கர் என்ற இரண்டு ஏட்டுகள் என்னிடம், ‘உனது கடையில் கார வகைகள், தண்ணீர் பாட்டில் வைத்து விற்க வேண்டுமானால் மாத மாமூலாக ஆயிரம் ரூபாய்- தரவேண்டும் என்று மிரட்டி வருகின்றனர். என்னை தாங்கள்தான் காப்பாற்ற வேண்டும்’’ என்பதே அந்த புகார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார் வருவாய் அலுவலர். மது ஒழிப்பு ஒழிப்பு போலீஸாருக்கு லஞ்ச ஒழிப்பு போலீஸார்தான் தேவை!
மன்னிப்பு கேட்ட ஏட்டு!
நாகர்கோவில் மையப் பகுதியில் இருக்கும் அண்ணா பேருந்து நிலையத்தில் ‘அந்த’ மாதிரி பெண்களுக்கான இடமே போலீஸ் அவுட் போஸ்ட் கூண்டுதான். இது தெரியாமல் பஸ் ஏற வந்த ஒரு குடும்பப் பெண்மணி போலீஸ் கூண்டு அருகே நின்றுள்ளார். இதை கோட்டார் காவல்நிலையத்தில் பணிபுரியும் ஏட்டுகள் பார்த்திருக்கிறார்கள்.
‘நம்ம இடத்தில் நிக்கிற பொண்ணு அந்த மாதிரி பொண்ணுதானே?’ என நினைத்த (அடப்பாவி போலீஸே) ஒரு ஏட்டு மாமூலுக்காக அப்பெண்ணின் பின்பக்கத்தில் தன் லத்தியால் தட்டியிருக்கிறார். இதையடுத்துத் திரும்பிய அந்த பெண் கொந்தளிக்க பொதுமக்களும் அவருக்கு ஆதரவாகத் திரண்டனர். அந்த ஏட்டு மன்னிப்பு கேட்கவும்தான் பிரச்னை முடிவுக்கு வந்தது.
ஆயுதப்படை அலாரம்!
நாமக்கல் மாவட்ட ஆயுதப் படையில் பணியாற்றிய ரவி என்ற காவலர் சமீபத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். உடன் வேலை செய்யும் ஆயுதப் படை காவலர்கள்தான் அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்து உரிய நேரத்தில் காப்பற்றினர். தற்கொலை முயற்சிக்கு என்ன காரணம் என துருவியபோது... ‘‘ஆயுதப் படைப் பயிற்சி சொல்லி கொடுக்க வரும் ஒரு எஸ்.ஐ.தாங்க காரணம். கெட்ட, கெட்ட வார்த்தைகளால வகுப்புங்குற பேர்ல அவரோட வறுத்தெடுப்புக்கு பயந்தே பல பேர் அவரது வகுப்புக்கு போகமாட்டாங்க. ஆனா இவர் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு தற்கொலைக்கே போயிட்டாரு. மாவட்ட எஸ்.பி.க்கு தகவல் சொல்லியும் அவர் நடவடிக்கை எதுவும் எடுக்கலை. அவர் மட்டும் அங்கே தொடர்ந்து இருந்தால் இது மாதிரி பல சம்பவங்கள் நடக்கும்’’ என்று அபாய அலாரம் அடிக்கிறார்கள் ஆயுதப்படை வட்டாரத்தில்.
ரெய்டுக்குள் ரெய்டு!
விருதுநகர் மாவட்டம் திருவில்லிப்புத்தூரில் அடுத்தடுத்து மங்காத்தா சூதாட்ட கிளப் ரெய்டுகள் அதிரடியாக நடந்துவருகின்றன. பொதுமக்களும் ‘போலீஸ் சூப்பரப்பு’ என புகழ்பாடாத குறையாக பேசிவருகின்றனர். ஆனால்... ‘‘என்னதான் ரெய்டு நடத்தி லட்சக்கணக்கான பணத்தைக் கைப்பத்தினாலும் அதிகபட்சம் முப்பதாயிரத்துக்கும் மேல கணக்கு காமிக்கமாட்டாங்க. பாக்கியெல்லாம் போலீஸ்காரங்களுக்குக் கூட்டுப் பங்கு. ரெய்டுக்குள்ளயே ரெய்டு அடிக்கும் இந்த தகவலெல்லாம் மாவட்ட அதிகாரிகள் வரைக்கும் போய்க்கிட்டுதான் இருக்கு. என்ன பண்றது? எங்களுக்கு மேல இருக்காங்களே’’ என ரகசியம் காக்க முடியாமல் ‘மங்காத்தா’ தரப்பினரே மலைத்துப் போகின்றனர்.
‘
|