முதல் பக்கம் | ஆசிரியருக்கு மடல் | முந்தைய இதழ்கள் | தேவதை | திரிசக்தி | முகவரி

 Untitled Document

எழுதுவதெல்லாம் எழுத்தல்ல
கதவைச் சாத்து... கழுதை போகட்டும்..!




வாடிக்கையாளர் : ஏங்க சாமி பீடி இருக்கா?

கடைக்காரர் : சாமி பீடி இல்ல. வேணும்ன்னா சாமி சி.டி. இருக்கு தரட்டுமா?

ஏதாவது ஒரு டுபாக்கூர் காரணத்தைச் சொல்லி இந்த வாரமும் எழுதுவதற்கு ‘ஜூட்’ விட்டு விடலாம் என்று பார்த்தால் பரமஹம்ஸ நித்யானந்தர் படு வேகமாக ‘செயல்பட்டு’ நம்மையும் செயல்பட வைத்து விட்டார்.

அடச்சே... எழுதவைத்து விட்டார்.

“மரம் அமைதியை விரும்பினாலும் காற்று விடுவதா-யில்லை” என்று மாமேதை மாவோ சொன்னது இத்தகைய ‘புண்ணியவான்களை’ நினைத்துத்தான் போலிருக்கிறது.

சூரியன் சாய்ந்ததில் இருந்தே ஏகப்பட்ட தொலை-பேசி அழைப்புகள். ஏகப்பட்ட எஸ்.எம்.எஸ்.கள் தொலைக்-காட்சியைப் பார்க்கச் சொல்லி.

சரி எப்படியாவது பார்த்துத் தொலைப்போம் என்று அடித்துப் பிடித்துச் சென்று தொலைக்காட்சியைப் பார்த்தால் அதில் ஸ்வாமி நித்யானந்தர் ஏதோ ஒரு நடிகைக்கு அந்தரங்கமாய் அருளாசி வழங்கிக் கொண்டிருந்த காட்சி அமோகமாய் ஓடிக் கொண்டிருந்தது.

பார்க்கப் பார்க்க பக்தி மார்க்கம் கட்டிலில் கால் பரப்பிக் கிடப்பது பட்டென்று புரிந்தது.

அன்று கொலை வழக்கில் ஒரு ஜெயேந்திரர். நேற்று கருவறை லீலைகளில் தேவநாத குருக்கள். இன்று காற்றாய் வரும் நடிகை-களுக்காக கதவைத் திறந்து வைத்திருக்கும் ஒரு நித்யானந்தர்.

பேஷ்... பேஷ்... ரொம்ப சூப்பர்.

இப்போதெல்லாம் பெண்களில் பாதிப்பேர் வீட்டிலேயே கும்பிட ஆரம்-பித்து விட்டார்கள். இந்த சாமியார்கள் புராணம் இதே மாதிரி தொடர்ந்தால் நாளை ஆண்கள் கதியும் அதோகதி ஆகிவிடக் கூடிய வாய்ப்புகள் அநேகம் இருக்கிறது.

மாதம் ஒரு சாமியாரோ, ஒரு பாதிரியாரோ இப்படி ஏடா-கூடமாக மாட்டிக் கொண்டாலும் புற்றீசல் மாதிரி மீண்டும் ஒரு புது போக்கிரி கிளம்புவது மட்டும் நின்றபாடில்லையே ஏன் என்பதுதான் கேள்வி.

போன ஆட்சியில் ஒரு சாமியார் கைது செய்யப்பட்டால் அடுத்து வருகிற ஆட்சியில் அந்த ஆசாமிக்கு ரத்தினக் கம்பள வரவேற்பு. இப்போதிருக்கிற ஆட்சி காலத்தில் ஒருவர் கம்பி எண்ண அனுப்பி வைக்கப்-பட்டால் அடுத்து வருகிற ஆட்சிக் காலத்தில் அதே ஜென்மத்துக்கு ராஜமரியாதை. இதை மிகச் சரியாக புரிந்து வைத்திருக்-கிறவர்கள் கடவுளின் ஏஜென்ட்டுகளும், அரசியல் ஏஜென்ட்டுகளும்தான்!

ஆனால்... அரளியைச் சாப்பிடு ஆஸ்த்துமா போகட்டும்... கடப்பாரையைக் கடி கண்ணு தெரியட்டும்... என்று அட்வைஸ் மழையை அள்ளிவிட்ட இந்த நித்யானந்தனோ மற்றவர்கள் மாதிரி இல்லை போலிருக்கிறது. இல்லாவிட்டால் அவரே எழுதுவாரா இப்படி?

“ஆசைகள் இல்லாமல் வாழ்வது என்பது சாத்தியமே இல்லை. வாழ்வதற்கு ஆசைகள் அடிப்படையான பிராணன் போன்றது. உயிர் போன்றது. இயங்கும் எந்தவொரு மனிதருக்கும் ஆசை என்பது தவிர்க்க முடியாத ஒரு பாகம். ஆசையை அடையும் சக்தியைப் பெறுவதே ஆன்மீகம். எருமை மாட்டுக்குத்தான் ஆசைகளே இருக்காது. காலையில் எழுந்தவுடன் சாப்பிடும். அதன்பின் படுத்துக் கொள்ளும். மழை பெய்தாலும் சரி, வெயிலடித்தாலும் சரி, அப்படியே இருக்கும்.” என்று பொட்டில் அடித்த மாதிரி அவரே எழுதியிருக்கிறார்.

ஆக... பரமஹம்ஸ நித்யானந்தர் தான் ஒரு எருமை மாடு இல்லை என்று நிரூபிப்பதற்காகப் படுக்கையில் புரண்டதற்குபோய் இப்படியா பிராணனை வாங்குவது?

‘‘எருமை மாட்டுக்கு ஆசைகள் இல்லையென்று சொன்னது எருமை மாடுகளை அவமதிக்கும் செயல்” என்று புளூகிராஸ் நண்பர்கள் அவர் மீது வழக்கோ... அல்லது ‘‘அவரைச் சுற்றியுள்ள எருமைகளுக்கும் மரபணு சோதனைகள் நடத்தி ‘எருமைகள் அவரால் எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை’ என்று டாக்டர்கள் சர்டிபிகேட் தந்தால்தான் அவரை வெளியே விடுவோம்” என்று நாளை எவரும் போராட்டமோ நடத்தாமல் இருக்க, தூணிலும் இருக்கும்... நடிகையின் துகிலிலும் இருக்கும்... அந்த ஆண்டவன் அருள் புரியக்கடவாராக.

கதவைச் சாத்து... கழுதை போகட்டும்!

மத்திய அரசு இந்தியாவில் இன்னமும் பண்டமாற்று முறைதான் இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறதோ என்னவோ?

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று துண்டு போட்டுத் தாண்டி சத்தியம் செய்கிறார்கள் மன்மோகன்சிங்கும், பிரணாப் முகர்ஜியும். என்னவோ ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் மக்கள் அரிசியைக் கொடுத்து கோதுமையை வாங்கிக் கொள்வதைப் போலவும்... காய்கறிகளைக் கொடுத்து உப்பும்,சர்க்கரையையும் பரிமாறிக் கொள்வதைப் போலவும் பினாத்துகிறார்கள்.

எந்தப் பொருளாக இருந்தாலும் ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்குப் பயணப்பட்டால்தான் பரிவர்த்தனையே நடக்கும். அப்படிப் பயணப்பட வேண்டுமென்றால் லாரிகளில் டீசலுக்கு பதிலாக தண்ணீரை நிரப்பிக் கொண்டு ஓட்டமுடியாது. அப்படிப்பட்ட மகத்தான தொழில் நுட்பத்தையும் இந்த மேதைகள் நமக்குக் கண்டுபிடித்துத் தரவில்லை.

அப்படியிருக்கையில் டீசல் விலை உயர்ந்தால் லாரி வாடகை உயரும்... லாரி வாடகை உயர்ந்தால், அதில் பயணப்படும் கட்டுமானப் பொருட்கள் தொடங்கி உயிரைக் காப்பாற்றக் கூடிய மருந்துகள் வரைக்கும் அத்தனை பொருட்களது விலையும் கட்டாயம் உயரும் என்பது அஞ்சாங்கிளாஸ் படிக்கும் பையனுக்குக் கூடத் தெரியும். ஆனால் உலக வங்கியிலேயே குப்பை கொட்டிய இந்த ‘மகாமேதை’ மன்மோகன் சிங்குக்குத் தெரியாமல் போனது எப்படி?

இந்த லட்சணத்தில்... “2011 இல் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக அதிகரிக்கும்... அதைத் தொடர்ந்து இரட்டை இலக்கத்தை எட்டும்... 18 சதவீதத்தை எட்டியுள்ள உணவுப் பொருட்களின் விலை உயர்வு அப்படியே தொபுக்கடீர்ன்னு குறையும்... பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு பண வீக்கத்தை அதிக அளவுக்கு அதிகரிக்காது... ஒட்டுமொத்தமாக 0.4 சதவீதம்தான் பணவீக்கம் இருக்கும்...” என்று ஆளாளுக்கு அள்ளி வீசுகிறார்கள்.

‘‘கேட்கிறவன் காங்கிரஸ்காரன்னா... மன்மோகன்சிங்கே மார்க்சீயவாதி”ம்பாங்க போலிருக்கு. இதில் திரிணாமூல் ஒரு ஆர்ப்பாட்டம்... வழக்கம்போல் கலைஞர் புறாக் காலில் கட்டிவிட்ட ஒரு கடுதாசி.. என ஜமாய்க்கிறார்கள்.

‘‘தோழமைக் கட்சிகளை எப்படி சரிக்கட்டுவதென்று எங்களுக்குத் தெரியும்.” என்று ஏற்கெனவே ஈழப்பிரச்சனையில் சரிக்கட்டிய அனுபவத்தில் பட்டாசு கிளப்புகிறார் பிரணாப். விலைவாசியைக் குறைக்க கொடநாட்டில் முகாமிட்டிருக்கிற புர்ச்சித்தலைவியோ அடுத்த தேர்தல் கூட்டை மனதில் வைத்தபடி ‘பாம்பும் சாகாமல்... தடியும் உடையாமல்’ அறிக்கை விடுகிறார். அதே கணக்கில் இருக்கும் விஜயகாந்த் “மாநில அரசு நினைத்தால் குறைக்கலாம்” என்கிறார்.

கூட்டிக்கழித்துப் பார்த்தால் இவர்கள் எல்லோருமே ஒரே கட்சிதான் போலிருக்கிறது. ஈரத்துணியை வயிற்றில் கட்டிக்கொண்டு காலம் தள்ளப் போகிற மக்கள் மட்டும்தான் எதிர்க்கட்சி.

மொத்தத்தில்... பொருளாதாரமும் சரியாகப் போவதில்லை... விக்கிற விலையில் இருக்கிற தாரமும் தாக்குப் பிடிக்கப் போவதில்லை...

இப்படி ஒத்தை ஆளா காலம் தள்ளுவதற்கு பதிலாக பேசாமல் சுவாமி பாமரானந்தான்னு பேரை மாத்திகிட்டு ஒரு ஆசிரமம் போடறதுதான் சரி போலிருக்கிறது.

அப்புறம் என்ன... காசுக்குக் காசுமாச்சு.

.... -----------ஆச்சு.






பாமரன்


Comments:

No Comments

Post a Comment
User Name:
E-mail:
Comments:
நிர்மூலமான நித்யானந்தா
கமிஷன்... கடத்தில்... பலாத்காரம்..!
தி.மு.க. vs காங்கிரஸ்
அடுத்த என்கவுன்ட்டர் ‘அட்டாக்’ பாண்டி-
தேர் திருவிழாவில் ஹீரோவான பி.ஜே.பி., எம்.எல்.ஏ.!
‘ஒரு ரூபாய் நாணய’ வேட்டைக் கும்பல்!
தோடடக் கலைத் தொழிலாளர்கள்!
குறைவான நிறைகள்; நிறைவான குறைகள்
கலைஞர் கட்டளை:
தென்னவனுக்கு வலைவீசும் அ.தி.மு.க.!
அமைச்சர்கள்... அங்கே அப்படி.!
பயத்தில் பயணகள்; பரிதவிப்பில் தொழிலாளர்கள்!
நிதியில்லாமல் நீதியில்லை!