முதல் பக்கம் | ஆசிரியருக்கு மடல் | முந்தைய இதழ்கள் | தேவதை | திரிசக்தி | முகவரி

 Untitled Document

பயத்தில் பயணகள்; பரிதவிப்பில் தொழிலாளர்கள்!
-கவனிப்பாரா அமைச்சர்நேரு?




கன்னியாகுமரியிருந்து அவசர வேலைக்காக ஒரு டவுன் பஸ்ஸில் ஏறினார் அந்த பெரியவர். கிளம்பிய பேருந்து கொஞ்ச தூரத்திலேயே மூச்சு வாங்கி முடங்க... அதில் இருந்த பயணிகளை இன்னொரு பஸ்ஸில் ஏற்றிவிட்டனர். பின்பக்கம் கண்ணாடி இல்லாமல் விளம்பரதாரர் போர்டை வைத்து மறைத்த நிலையில் உதவிக்கு வந்தது அந்த பஸ். பயணிகளை ‘ஃபுல்லாக’ ஏற்றிக்கொண்டு இரண்டு பக்கமும் வயல்வெளிகள் உள்ள ரோட்டில் சென்ற அது எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிடுவதற்காக ரோட்டோரத்தில் இறங்கியது. அவ்வளவுதான் அதுவும் கிளம்பவில்லை.

இப்படிப்பட்ட பாதி வழியில் படுத்தி எடுக்கும் பஸ் சம்பவங்கள் கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு பழகிப் போய்விட்டன.

சுற்றுலாவுக்குப் புகழ் பெற்ற குமரி மாவட்டத்தில் இப்படி சொத்தை பஸ்கள் அதிகம் ஓட காரணம் என்ன?

‘‘கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 10 பணிமனைகளில் இருந்து தினமும் சுமார் 850 பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆனால் இதில் அதிக பஸ்கள் வெளிமாவட்ட பதிவு எண்களை தாங்கித்தான் ஓடுகின்றன. இதற்குக் காரணம்... கன்னியாகுமரி மாவட்டத்துக்கென்று ஒதுக்கப்படும் புதிய பஸ்கள் வட மாவட்டங்களுக்கு தாரை வார்க்கப்பட்டு அவற்றிற்கு பதிலாக பழைய பஸ்கள் இங்கே விடப்படுகின்றன. குறிப்பாக தர்மபுரி, திருச்சி, மதுரை, விழுப்புரம் மாவட்டங்களிலிருந்து தான் பெருவாரியான பழைய பஸ்கள் இங்கு ‘இறக்குமதி’ ஆகிறது.

ஒரு புதிய பஸ்ஸுக்கு பதிலாக இரண்டு அல்லது மூன்று பழைய பஸ்கள் கிடைப்பதால் இங்குள்ள அதிகாரிகள் மறுப்பு சொல்லாமல் வாங்கி விடுகின்றனர். அவை சில மாதங்களிலேயே பழுதடைந்து மக்களையும் ஊழியர்களையும் படுத்துகின்றன’’ என குமுறுகிறார்கள் போக்கு-வரத்து ஊழியர்களே!

பாரதிய அரசு போக்கு-வரத்து தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் சதாசிவ கிருஷ்ணதாஸ் நம்மிடம், ‘‘கடந்த 14 ஆண்டுகளாக நாகர்கோவில் அரசு போக்குவரத்து கழகத்தில் பராமரிப்பு ஊழியர்கள் நியமிக்கப்படவில்லை. மேலும், பழைய பஸ்களின் உதிரி பாகங்களையே பழுதான பஸ்களில் மாட்டுவதால் தினமும் 4 அல்லது 5 அரசு பஸ்கள் பழுதாகி நடுவழியில் பயணிகளை இறக்கிவிடுகின்றன. மேலும் ராணித் தோட்டம் பணிமனையில் புகழ்பெற்று விளங்கிய பஸ் கூண்டு கட்டும் பணியை தற்போது தனியாருக்கு வழங்கிவிட்டனர். இதுவும் பஸ்களின் உறுதியற்ற தன்மைக்கு மூலக்காரணம்’’ என்றார் விரக்தியோடு.

சி.ஐ.டி.யு. போக்குவரத்துத் தொழிற்சங்கத் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான எஸ்.நூர்முகம்மது இதுபற்றி பேசியபோது,

‘‘குமரி மாவட்டம் மதுரை கோட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட பிறகுதான் ஓட்டை பஸ்கள் மாவட்டத்தில் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கு அடிப்படையான காரணம் பத்தாண்டுகளுக்கு மேலாக பஸ்களை பயன்படுத்திக் கொண்டிருப்பதும், பராமரிப்புப் பணியாளர்கள் நியமிக்காததும்தான்’’ என்றார் கொந்தளிப்போடு.

குமரி போக்குவரத்துக் கழகத்தின் இந்த லட்சணம் பற்றி குமரி போக்குவரத்து மண்டல பொது மேலாளர் ரவிவர்மாவிடம் பதில் கேட்டோம்.

‘‘குமரி மாவட்டத்தில் நல்ல நிலையில் உள்ள பஸ்கள்தான் ஓடுகின்றன’’ என டாப் கியரில் ஒரு உடான்ஸை விட்டவர், ‘‘ஒரு புதிய பஸ்ஸைக் கொடுத்துவிட்டு மூன்று பழைய பஸ்கள் வாங்குகிறோம் என்பதெல்லாம் தவறான குற்றச்சாட்டு. மாவட்டத்துக்கு கூடுதலா பஸ் தேவைப்படும் போது வெளிமாவட்டத்திலிருந்து நல்ல நிலையில் உள்ள பஸ்களைத்தான் வரவழைக்கிறோம்’’ என்றார்.

குமரியின் குமுறல் இருக்கட்டும். நெல்லையின் நெருக்கடிக்கு வருவோம்.

அரசின் தவறான கொள்கை முடிவுகளால் பஸ்கள் மட்டுமல்ல... கொள்கை முடிவுகளை அமல்படுத்தாததால் ஐ.டி.ஐ. முடித்துவிட்டு அரசுப் போக்குவரத்துக் கழக பராமரிப்புப் பணியாளர் வேலைக்காக காத்திருக்கும் பல்லாயிரம் பேருடைய வாழ்வும் கண்டமாகிக் கிடக்கிறது.

நம்மிடம் பேசிய சங்கரன்கோவில் சிவஞானம், “நான் 1991&ல் ஐ.டி.ஐ.யில் பிட்டர் படித்து விட்டு எம்ப்ளாய்மென்ட் ஆபீஸில் பதிந்திருக்கிறேன். கடந்த அ.தி.மு.க ஆட்சியில் வேலை வாய்ப்புகள் அடியோடு மறுக்கப்பட்டு வந்தன. ஆனால் தி.மு.க. அரசு வந்த பிறகு பல துறைகளில் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. குறிப்பாக போக்குவரத்துக் கழகங்களில் பல ஆயிரக்கணக்கான டிரைவர், கண்டக்டர் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. ஆனால் பராமரிப்பு ஊழியர்கள் பணியிடங்கள் மட்டும் இன்னும் நிரப்பப்படவில்லை.

2009 ஜூன் 8&ம் தேதி நாமக்கல் ராசிபுரத்தில் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை பணியாளர்கள் ஓய்வு இல்லம் மற்றும் புதிய அலுவலகங்கள் திறப்பு விழாவில் கலந்துகொண்ட போக்குவரத்துத் துறை அமைச்சர் நேரு, ‘அரசுப் போக்குவரத்துக் கழக பராமரிப்புத் துறை பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்’ என்று கூறினார். பல இடங்களிலும் இதுபோல் நம்பிக்கை அறிவிப்புகள் வெளியிட்டார். ஆனால் இன்னும் நடக்கவில்லை. நேரு சொன்னதைச் செய்தால் பல்லாயிரம் குடும்பங்கள் பசியாறும்’’ என்றார் பரிதாபமாய்.

நெல்லை பழைய பேட்டையைச் சேர்ந்த மணியோ... “1992-93ல் ஐ.டி.ஐ. படித்த பலர் அரசுப் போக்குவரத்துத் துறையில் அப்ரண்டிஸ் பயிற்சி பெற்று அதில் தேர்ச்சியும் பெற்று வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளோம். இதற்கு முன்னாள் அப்ரண்டிஸ் பயிற்சி முடித்தவர்கள், அரசு போக்குவரத்துக் கழகத்திலேயே உடனுக்குடன் பணி நியமனம் செய்யப்பட்டனர். ஆனால் நாங்கள் தேர்ச்சி பெற்ற வருடம் முதல் இன்றுவரை போக்குவரத்துத் துறையில் பணி நியமனம் வழங்கப்படவில்லை. எங்களில் பலர் 40- வயதை தாண்டிவிட்டனர். தமிழகம் முழுதும் அவர்களில் பலருக்கு நல்ல வேலையில்லை. இந்த ஆட்சியில் எப்படியும் வேலை கிடைத்து விடும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்’’ என்றார். இது குறித்து சி.ஐ.டி.யு.வின் நெல்லை மாவட்ட பொதுச் செயலாளர் பி. முத்துகிருஷ்ணன் நம்மிடம், “20 ஆயிரம் அரசுப் போக்கு-வரத்து கழகப் பேருந்துகளில் தினமும் 1 கோடியே 50 லட்சம் பயணிகள், 30 லட்சம் மாணவர்கள் பயணிக்கின்றனர். அவர்கள் அனைவரின் பாதுகாப்புக்கும் அரசுதான் பொறுப்பு. இதில் பராமரிப்பு ஊழியர்களின் பங்கு முக்கியமானது. 15 ஆயிரம் பேருந்துகள் இருந்த போது பராமரிப்பு ஊழியர்களின் எண்ணிக்கை 17 ஆயிரமாக இருந்தது. இப்போது 20 ஆயிரம் பேருந்துகள் உள்ள நிலையில், ஊழியர்களின் எண்ணிக்கையோ 12 ஆயிரமாகக் குறைந்து விட்டது.

இந்த நிலையில், பேருந்துகளில் நடைபெறும் பராமரிப்புப் பணிகளை ஒப்பந்த அடிப்படையில் செய்ய அரசு டெண்டர் கோரியுள்ளது. காண்ட்ராக்ட் முறை புகுத்தப்பட்டால் பேருந்தின் பராமரிப்பு மோசமாகும். எனவே பராமரிப்பு பிரிவிற்கு புதிய பணியாளர்களை வயது வரம்பில் தளர்வு செய்து நியமிக்கவேண்டும்’’ என்றார்.

மக்கள் கேட்காமலேயே... இலவச டி.வி., இலவச கேஸ் அடுப்பு, இலவச வீடு என்று அள்ளிக் கொடுக்கிற அரசு 18 வருடங்களாகப் போராடும் இந்த இளைஞர்களுக்கு வேலை கொடுத்து அவர்கள் வாழ்விலும், அரசு பஸ் பயணிகள் வாழ்விலும் ஒளியேற்றுமா?

படங்கள்: ஏ.எஸ்.அருண்






ஜவஹர் & ஜனனி


Comments:

No Comments

Post a Comment
User Name:
E-mail:
Comments:
நிர்மூலமான நித்யானந்தா
கமிஷன்... கடத்தில்... பலாத்காரம்..!
தி.மு.க. vs காங்கிரஸ்
அடுத்த என்கவுன்ட்டர் ‘அட்டாக்’ பாண்டி-
தேர் திருவிழாவில் ஹீரோவான பி.ஜே.பி., எம்.எல்.ஏ.!
‘ஒரு ரூபாய் நாணய’ வேட்டைக் கும்பல்!
தோடடக் கலைத் தொழிலாளர்கள்!
குறைவான நிறைகள்; நிறைவான குறைகள்
கலைஞர் கட்டளை:
தென்னவனுக்கு வலைவீசும் அ.தி.மு.க.!
அமைச்சர்கள்... அங்கே அப்படி.!
பயத்தில் பயணகள்; பரிதவிப்பில் தொழிலாளர்கள்!
நிதியில்லாமல் நீதியில்லை!