தென்னவனுக்கு வலைவீசும் அ.தி.மு.க.!

முன்னாள் அமைச்சர் கடலாடி சத்தியமூர்த்தி அ.தி.மு.க.வில் இருந்து விலகி, சில நாட்களுக்கு முன் மு.க.அழகிரி முன்னிலையில் தி.மு.க.வில் சேர்ந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி,
‘‘ஆயிரத்துக்கும் அதிகமான ராமநாதபுரம் மாவட்ட அ.தி.மு.க.வினர் விரைவில் தி.மு.க.வில் சேருவார்கள். 2011 சட்டமன்ற தேர்தலுக்கு முன்னரே தென்மாவட்ட அ.தி.மு.க. கூடாரம் காலியாகிவிடும்’’ என கிண்டலடித்தார்.
இது அ.தி.மு.க. தலைமைக்கு உஷ்ணத்தை ஏற்படுத்தி விட... ‘அழகிரிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கும் விதமாக, தி.மு.க.வில் அதிருப்தியில் இருக்கும் முன்னாள் அமைச்சர் தென்னவனை அ.தி.மு.க.வுக்கு இழுக்கப்போகிறார்கள்’ என்ற செய்தி தென்மாவட்டங்களில் பரவி வருகிறது.
இதன் பின்னணியை அ.தி.மு.க.-வினரிடமே கேட்டோம்.
‘‘1980&ல் திருவாடனை ஒன்றியச் செயலாளராக அ.தி.மு.க.வில் முக்கிய நபராக அடியெடுத்து வைத்த தென்னவன், 1985-1986-ல் எம்.ஜி.ஆரால் ராமநாதபுரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ஆக்கப்பட்டார். ராமநாதபுரம் தென்னவன், சிவகங்கை கண்ணப்பன், புதுக்கோட்டை ரகுபதி, விருதுநகர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்., திருநெல்வேலி கருப்பசாமி பாண்டியன் என அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் தி.மு.க. பாணியில் குறுநில மன்னர்களாக பவனி வந்த காலம் அது.
பிறகு அ.தி.மு.க. ஜா., ஜெ என உடைய, தென்னவன் ஜெ. அணியில் இருந்தார். 1991 சட்டமன்ற தேர்தலில், ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் வேட்பாளராக நின்றார். அகமுடையார் இனத்தவர்களின் கோட்டையான ராமநாதபுரத்தில் மைனாரிட்டி சமூகமான பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்த தென்னவன் ஜெயித்தார்.
சட்டமன்றத்தில் நடந்த விவாதத்தின்போது, கனிமொழியைப் பற்றி சிலேடையாக தென்னவன் பேச... அதனால் கவரப்பட்ட ஜெயலலிதா, 1993-ல் தென்னவனை செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சராக்கினார். இதே நேரத்தில்தான் சத்தியமூர்த்தியும் வணிகவரித்துறை அமைச்சரானார்’’ என நிறுத்திய அவர்கள் தொடர்ந்தனர்.

‘‘ஒரே மாவட்டத்தைச் சேர்ந்த அதுவும் கடலாடி, ராமநாதபுரம் என அடுத்தடுத்த சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த தென்னவனும், சத்தியமூர்த்தியும் மந்திரியானவுடனேயே இருவருக்கும் இடையே ஈகோ யுத்தம் வெடிக்கத் துவங்கியது. தென்னவன்தான் முதன்முதலில் அ.தி.மு.க.வில் ஒன்றிய செயலாளர்களாக இருந்த மறைந்த சீனிக்கட்டி, ஆர். எஸ். மடை ராஜேந்திரன், கார்த்திக் ஹோட்டல் செ. முருகேசன் போன்றோருக்கு டாடா சுமோக்களை வாங்கி கொடுத்து, ஒன்றிய செயலாளர்களின் சுமோ பவனிக்கு வழி ஏற்படுத்தினார். இதுபோல தொண்டர்களையும் அதிரடியாகக் கவர்ந்ததால் அ.தி.மு.க.வினர் மத்தியில் தென்னவனுக்கு மரியாதை அதிகரித்தது.
இது சத்தியமூர்த்திக்கு உறுத்த கட்சி மற்றும் அரசு விழாக்களில் தென்னவனை ஓரங்கட்ட ஆரம்பித்தார். 1996-ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன், தென்னவனிடம் இருந்து மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டு, சத்தியமூர்த்திக்கு வழங்கப்பட்டது. இதனால் விரக்தி அடைந்த தென்னவன், மதுரை ரூட்டை பிடித்து 1997-ல் தி.மு.க.வுக்கு தாவினார். தன்னோடு அ.தி.மு.க.வில் இருந்து ரகுபதி, கே.கே.எஸ்.எஸ்.ஆர், கானா போன்றோரையும் தி.மு.க.வுக்கு கொண்டு-வந்ததில் முக்கியப் பங்கு வகித்தார் தென்னவன்.
ஆனால், தென்னவனால் தி.மு.க.வுக்கு கொண்டுவரப்-பட்டவர்கள் தி.மு.க.வில் எம்.ஏல்.ஏ., மந்திரி பதவி என உச்சாணிக் கொம்புகளில் இருக்க... தென்னவனுக்கு மட்டும் பதவிகள் மறுக்கப்பட்டன. 2006 சட்டமன்றத் தேர்தலில் காரைக்குடி தொகுதியை தென்னவன் கேட்டபோது தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டது.
தென்னவனின் ஜுனியரான ஜோன்ஸ் ரூசோவுக்கு கிட்டங்கி கழக சேர்மன் பொறுப்பு வழங்கப்பட்டது. ஆனால் தென்னவனுக்கோ... தி.மு.க.வில் மிகச் சாதாரணப் பதவியான இலக்கிய அணி துணைச் செயலாளர் பதவிதான் வழங்கப்பட்டது. ராஜகண்ணப்பன் ராஜினாமாவால் ஏற்பட்ட இளையான்குடி எம்.எல்.ஏ. இடைத் தேர்தலிலும் எம்.எல்.ஏ. சீட்டுக்கு மனு போட்டார் தென்னவன். அந்த வாய்ப்பும் மறுக்கப்பட விரக்தியின் விளிம்புக்கே சென்றுவிட்டார்.
கட்சி நிகழ்ச்சிகளில் மட்டும் பெயருக்கு தலையை காட்டியபடி இருந்த தென்னவனுக்கு அடுத்த அதிர்ச்சி சத்தியமூர்த்தி வடிவில் வந்திருக்கிறது. சத்தியமூர்த்தி டாமினேஷன் அதிகமாகிவிட்டது என்ற காரணத்தை காட்டி அ.தி.மு.க.வில் இருந்து வெளியேறிய தென்னவனுக்கு, தி.மு.க.வில் சத்தியமூர்த்தி சேர்க்கப்பட்டதில் அதிருப்தியாம். ‘இனியும் நாம் தி.மு.க.வில் தொடரத்தான் வேண்டுமா?’ என தீவீரமாக விவாதித்து வருவதாகவும் கேள்வி. இதைப் பயன்படுத்தி தென்னவனை மீண்டும் எங்கள் வசம் (அ.தி.மு.க.)கொண்டுவர தூண்டில் போடப்பட்டு வருகிறது. ராஜகண்ணப்பனைத்தான் இந்த ஆபரேஷனுக்காக தலைமை நியமித்திருக்கிறதாம்’’ என அன்று முதல் இன்று வரை விளக்கினார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.
இது பற்றி ராமநாதரபுரம் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம்.
‘‘தென்னவன் விரக்தியில் இருப்பது உண்மைதான். அவர் கொடுத்து அனுப்பும் எந்த சீட்டும் உடனே காரியமாகி விடுகிறது. ஆனால் அவருக்கு தேர்தல் சீட் மட்டும் மறுக்கப்படுவதற்கு காரணமே சட்டமன்றத்தில் கனிமொழி பற்றி அவர் பேசிய சிலேடைப் பேச்சுதான்.

வரும் ஜூலையில் நடைபெறும் ராஜ்யசபா தேர்தலிலாவது தனக்கு தி.மு.க. சார்பில் எம்.பி. பதவி வழங்கப்படும் என நம்பிக் காத்திருக்கிறார் தென்னவன். அதுவும் மறுக்கப்படும் பட்சத்தில், 2011 தேர்தலில் காரைக்குடி எம்.எல்.ஏ. சீட் என்ற உத்திரவாதத்தோடு, மீண்டும் அ.தி.மு.க.வுக்கே அவர் போகலாம் என்று பேச்சிருக்கிறது’’ என்றனர்.
சத்தியமூர்த்தி தி.மு.க.வில் சேர்க்கப்பட்ட தகவல் கிடைத்ததுமே மொரீஷியஸுக்குப் பயணமாகிவிட்டார் தெ
ன்னவன். அலையடிக்கும் ஹேஸ்யங்களுக்கு அவரிடமே விளக்கம் கேட்டோம்.
‘‘இப்படியுமா கதை கட்டி விடுறாங்க? 1997&-ல் நான் தி.மு.க.வில் இணைந்தது சரியான முடிவுதான் என்பதைக் காலம் கடந்தாவது சத்தியமூர்த்தி போன்றவர்கள் உணர்ந்து தி.மு.க.வுக்கு வந்திருப்பதில் எனக்கு மகிழ்ச்சிதான். நான் சத்தியமூர்த்திக்காக அ.தி.மு.க.வை விட்டு வெளியேறவில்லை. அவர் சொன்ன அதே மன்னார்குடி மாஃபியா கும்பலின் அட்டகாசம் பொறுக்காமல்தான் நானும் வெளியே வந்தேன்.
தி.மு.க.வில் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறேன். எனக்கென்று தொகுதி அமையாத காரணத்தாலேயே எம்.எல்.ஏ. சீட் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. என்னால் தி.மு.க.வுக்கு கொண்டு வரப்பட்டவர்கள் நல்ல இடத்தில் அமர்ந்திருப்பதை விட வேறென்ன எனக்கு பெருமை? மீண்டும் அ.தி.மு.க.வில் நான் சேருவேன் என்பதெல்லாம் கனவிலும் நடக்காது’’ என்றார் உறுதியாக.
ஆயினும், தென்னவனின் உறுதியைக் குலைக்க ராஜகண்ணப்பனின் ரகசிய முயற்சிகள் தொடர்கின்றன என்பதுதான் லேட்டஸ்ட் தென் மாவட்ட பொலிடிக்கல் ஹாட்!
படங்கள்: சி.கார்த்திக்
‘
கிஷோர்