முதல் பக்கம் | ஆசிரியருக்கு மடல் | முந்தைய இதழ்கள் | தேவதை | திரிசக்தி | முகவரி

 Untitled Document

குறைவான நிறைகள்; நிறைவான குறைகள்!
-சாமானியர்களைத் தாக்கும் மத்திய பட்ஜெட்




கடந்த நாடாளுமன்ற தேர்தல் வாக்குறுதியில், “சாமானிய மக்களின் நலனுக்காக இவ்வரசு செயல்படும்” என யு.பி.ஏ. கூட்டணி அறிவித்தது. அந்த கொள்கையின் அடிப்படையில் கடந்த பிப்ரவரி 26&ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2010-11-ம் ஆண்டிற்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளதா? & என்று கேட்டால், நிதிநிலை குறித்த ஆழ்ந்த ஞானம் இல்லாத சாமானியனிடம் இருந்து கூட ‘இல்லை’ என்ற பதில்தான் வரும். அந்த அளவிற்கு சாமானிய மக்கள் மீது இந்த நிதிநிலை அறிக்கையின் மூலம் பெரிய பளு சுமத்தப்பட்டுள்ளது.

“எல்லா நிதிநிலை அறிக்கையின் நோக்கமும் மறைமுக வரி, நேர்முக வரியை விட மிக மிகக் குறைவாக இருக்க வேண்டும் என்பதே” என்று ஆடம் ஸ்மித் போன்ற முதலாளித்துவ பொருளாதார நிபுணர்கள் கூட வகுத்துள்ளனர். ஆனால் இந்த நிதிநிலை அறிக்கை அந்த கோட்பாட்டை அப்பட்டமாக மீறியுள்ளது. ஏனெனில் நேர்முக வரி வசதி படைத்தவர்களை மற்றும் ஊதியம் பெறுபவர்களை பாதிக்கிறது. ஆனால் மறைமுக வரியோ எவ்வித சமூக பாதுகாப்பும் இல்லாத சாமானிய மக்களின் தலையில் இடியாய் இறங்குகிறது.

இந்நிதிநிலை அறிக்கையில் நிறுவனங்களின் மீது போடப்படும் கார்பரேட் வரியின் மீதான சர்சார்ஜ் 10 சதத்தில் இருந்து 7.5 சதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. ஆண்டு வருமானத்தின் மீதான வரி 26 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு குறைக்கப்பட்டுள்ளது. 10 சதம் வரிக்கு உட்படுத்தப்பட்ட 1.6 லட்சம் முதல் 3 லட்சம் வரை இருந்த வருமான எல்லை 5 லட்சம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. 20 சதம் வரிக்கான வருமான வரம்பு 5 லட்சத்திலிருந்து 8 லட்சத்திற்கும், 30 சதத்திற்கான வருமான வரம்பு 8 லட்சத்திற்கும¢ உயர்த்தப்பட்டுள்ளது. மேட் (விகிஜி) வரியை 15ல் இருந்து 18 சதத்திற்கு உயர்த்தியதால் கூடுதலாக வரும் என எதிர்பார்க்கப்படும் ரூ.46ஆயிரம் கோடி, வருமான வரியில் தரப்படும் ரூ.26 ஆயிரம் கோடிக்கான சலுகையை அளித்துவிடும்.

ஆனால் கச்சா எண்ணெயின் மீதான இறக்குமதி வரியை 5 சதம் உயர்த்தியதும், பெட்ரோலியப் பொருட்களின் மீதான வரியை 10 சத கலால் வரியையும், பெட்ரோல், டீசல் மீது லிட்டருக்கு ரூ.3 கலால் வரியையும் உயர்த்தியதன் மூலம் சுமார் 70 ஆயிரம் கோடி ரூபாய் மறைமுக வரியாக உயர்த்தப்பட்டுள்ளது. இது எல்லா பொருட்களின் விலையையும் கடுமையாக உயரச் செய்து ஏற்கெனவே விலைவாசி உயர்வால் நொந்து போயிருக்கும் சாமானிய மற்றும் நடுத்தர மக்களை மேலும் நோகச் செய்யும்.

இது போதாது என்று, உணவுப் பொருட்கள் மற்றும் உரத்திற்கு தரப்பட்ட மானியங்கள் வெட்டப்பட்டுள்ளன. ஏற்கெனவே கடந்த நிதியாண்டில் 20 சதம் உயர்ந்துள்ள உணவுப் பொருட்களின் விலை இந்த நடவடிக்கையின் மூலம் மேலும் உயரும். ஏற்கெனவே 8.5 சதமாக இருக்கக் கூடிய பணவீக்கம் பெட்ரோல், டீசல் விலைஉயர்வாலும், மானியக்குறைப்பாலும் மேலும் கடுமையாக உயரும் வாய்ப்புள்ளது. ஆனால் இந்த உயர்வை 0.41 சதத்திற்குள் வைக்க முடியும் என்று பிரதமரும் நிதியமைச்சரும் மாறிமாறிக் கூறி வருவதை எந்த அளவுக்கு நம்ப முடியும்?

“மானியங்களைத் தொடர்ந்து வழங்க முடியாது, அவ்வாறு வழங்கினால் வளர்ச்சி விகிதம் குறைந்து விடும், வெளிநாட்டு மூலதனம் வருவது தடைபடும். எனவே மானியங்களை குறைத்ததில் இருந்தும், பெட்ரோல், டீசல் விலைஉயர்வில் இருந்தும் அரசு ஒருபோதும் பின்வாங்காது” என்று பிரதமர் கூறியுள்ளார். தங்கள் அணியில் உள்ள, மத்திய அரசில் பங்குபெறும் தி.மு.க.வும், திரிணாமுல் காங்கிரசும் தெரிவித்துள்ள எதிர்ப்புக்கு பதிலாகத் தான் பிரதமர் இந்தக் கருத்தைக் கூறியுள்ளார். பெட்ரோல், டீசல் விலைஉயர்வுக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் கொல்கத்தாவில் ஆர்ப்பாட்டம் நடத்தி தனது கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியது. அந்த அளவிற்கு தைரியம் இல்லாத தி.மு.க. டீசல் விலையையாவது குறைக்கச் சொல்லி வேண்டுகோள் விடுத்துள்ளது. ஆனால் எதற்கும் மத்திய அரசு செவிசாய்க்கவில்லை.

காங்கிரஸ் கூட்டணிக்கு மக்களவையில் வெறும் 276 இடங்கள் மட்டுமே உள்ள நிலையில் திரிணாமுல் மற்றும் தி.மு.க. ஆதரவு இல்லாது இந்த நிதிநிலை அறிக்கையை நிறைவேற்ற முடியாது, அவ்வாறு நிறைவேற்ற முடியாத போது, இந்த அரசு கவிழும் வாய்ப்புள்ளது என்பது காங்கிரசுக்குத் தெரியும். ஆனால் நிதிநிலை அறிக்கை மீதான இறுதி முடிவு எடுக்க ஏப்ரல் வரை அவகாசம் உள்ளதால் அதற்குள் இவ்விரு கட்சிகளையும் சமாதானப்படுத்தி விடலாம் என்ற நம்பிக்கை காங்கிரசுக்கு உள்ளது. அதை பிரணாப் முகர்ஜி வெளிப்படையாகவே கூறியுள்ளார். 2011ல் சட்டப்பேரவை தேர்தலை சந்திக்கவிருக்கும் இவ்விரு கட்சிகளும் வெளிப்படுத்தும் எதிர்ப்பு நடவடிக்கைகள் வெறும் நாடகமே என்பதும் காங்கிரசுக்குத் தெரியும். அரசுக்குத் தரும் ஆதரவை இப்பிரச்சினைக்காக திரும்ப பெறும் துணிச்சலான முடிவை அவை ஒருபோதும் எடுக்க மாட்டா என்பதும் காங்கிரசுக்குத் தெரியும்.

“குதிரை கீழே தள்ளியதோடு குழியும் பறித்தது” என்பது போல விவசாயம் மற்றும் கிராமப்புற வளர்ச்சிக்கான திட்ட ஒதுக்கீட்டையும் அரசு குறைத்துள்ளது. ஒட்டுமொத்த தேசிய உற்பத்தி 12.5 சதமாக உள்ள நிலையில் கிராமப்புற வளர்ச்சிக்கான ஒதுக்கீடு வெறும் 6.3 சதம் தான் உயர்த்தப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உத்தரவாத திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு வெறும் 2.5 சதம் தான் உயர்த்தப்பட்டுள்ளது. உணவுப் பற்றாக்குறை நிலவும் சமயத்தில் விவசாயத்திற்கு கூடுதலாக 900 கோடி தான் ஒதுக்கப்பட்டுள்ளது. சாலை விரிவாக்கத்திற்கு சென்ற ஆண்டு ஒதுக்கப்பட்ட 23 சதம் 13 ஆகவும், ரயில்வே வளர்ச்சித் திட்டங்களுக்கு சென்ற ஆண்டு ஒதுக்கப்பட்ட 46.3 சதம் வெறும் 6 சதமாகவும், ஒட்டுமொத்த திட்டச்செலவு 37 சதத்தில் இருந்து 6 சதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் வருமான வரிச்சலுகை, கிராமப்புற செலவினத்தைப் போல் 5 மடங்கு அதிகமாக தரப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளின் மூலம் நுகர்வோரின் கைகளில் கிடைக்கும் பணம் சென்ற ஆண்டை விட 1 லட்சத்து 80 ஆயிரம் கோடி குறையும். இந்நிலையில் வளர்ச்சி விகிதம் சென்ற ஆண்டு இருந்த 7.2 சதத்தில் இருந்து இந்த ஆண்டு 8.2 சதமாக உயரும் என்பது எவ்வாறு ஈட்டப்படும் என்பது விளங்கவில்லை. திட்டமில்லா செலவுகளுக்கும் மிகக் குறைவான தொகையே ஒதுக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி அளவான 12.5 சதம் அளவிற்கு திட்டமில்லாச் செலவை வைத்தால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பட்ஜெட் பற்றாக்குறைத் தொகையான ரூ.5 லட்சத்து 80 ஆயிரம் கோடிக்கு மேல், கூடுதலாக ரூ.1 லட்சத்து 99 ஆயிரம் கோடி எகிறிவிடும். நிதிப்பற்றாக்குறையும் சாமானிய மக்களின் மீது தான் விடியும். எனவே பட்ஜெட் பற்றாக்குறையை குறைத்துக் கொண்டே போக வேண்டும் என்று பொருளாதார நிபுணர்களும், இந்த அரசும் அறிவித்துள்ள கொள்கை மீறப்பட்டுள்ளது.

ஆனால் வருவாய்க்கு இந்த அரசு என்ன செய்யப் போகிறது என்பது விளங்கவில்லை. மத்திய அரசு உருவாக்கியுள்ள கட்டுமானத் திட்டப்பணிகளுக்கான நிதி மூலம் ஒரு லட்சம் கோடி வருமானம் ஈட்டப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் சென்ற ஆண்டு இந்நிதி மூலம் வெறும் 12 ஆயிரம் கோடி தான் கிடைத்தது என்பது வரலாறு. அதேபோல் வரியற்ற வருமானம் 74 ஆயிரத்து 577 கோடி வரை கிடைக்கும் என்று பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. இதில் ரூ.49 ஆயிரத்து 780 கோடி தொலைதொடர்புத்துறை மூலம் ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை ஏலமிடுவதன் மூலம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்ற ஆண்டு இந்த வகையில் 48 ஆயிரத்து 335 கோடி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வெறும் 13 ஆயிரத்து 795 கோடி தான் கிடைத்தது. இந்த ஆண்டு எவ்வளவு கிடைக்கும் என்பது அவர்களுக்கே வெளிச்சம். எதிர்பார்த்த அளவு கிடைக்காவிட்டால் பட்ஜெட் பற்றாக்குறை மேலும் அதிகரிக்கும்.

அடுத்ததாக இதர வருவாய் என்ற தலைப்பில் அரசு பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதன் மூலம் ரூ.40 ஆயிரம் கோடியை திரட்ட அரசு முடிவு செய்துள்ளது. சென்ற ஆண்டு ரூ.26 ஆயிரம் கோடி திரட்டப்பட்டது. அப்படியென்றால் இந்த ஆண்டு அரசின் சொத்தை மேலும் அதிகமாக விற்கப்போகிறார்கள். முன்னோர் சேமித்து வைத்த சொத்தை விற்று காலம¢ தள்ளும் உதவாக்கரை பிள்ளைகளின் நிலையில் நமது அரசு இருப்பது பரிதாபமானது. இவ்வாறு அரசு சொத்தை விற்காவிட்டால் வேறு என்ன வழி. அதற்கு நமது அரசின் முன் உள்ள ஒரே வழி வெளிநாட்டு நிதிநிறுவனங்களிடம் இருந்து வட்டிக்கு கடன் வாங்குவது தான். ஏற்கெனவே வெளிநாட்டுக் கடன் 35 சதம் என்ற அளவில் உள்ளது. இதுவே ஆபத்தான நிலை. இது மேலும் அதிகமானால் நமது பொருளாதாரம் தறிகெட்டுப் போய்விடும்.

மேலும் பொருளாதார மந்தத்தில் இருந்து மீள பெரிய நிறுவனங்களுக்கு இதுவரை தரப்பட்டு வந்த ஊக்கத்தொகையை இந்த நிதியாண்டு முதல் நிறுத்த அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் அவற்றின் மூலம் வரும் வரி வருவாய் அதிகரிக்கும் என்று அரசு எதிர்பார்ப்பது ஏமாற்றத்தில் தான் முடியும். இவ்வாறு ஏராளமான யூகங்களையும், அதீத எதிர்பார்ப்புகளையும் ஆபத்துகளையும் உள்ளடக்கியதுதான் இந்த நிதிநிலை அறிக்கை. இதைத்தான் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, இந்த நிதிநிலை அறிக்கை மூலம் கடுமையான ஆபத்துகளை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

இந்த நிதிநிலை அறிக்கையில் நல்ல தகவல் எதுவுமே இல்லையா என்று நீங்கள் கேட்கலாம். எழுத்தறிவு மற்றும் பள்ளிக்கல்விக்காக சென்ற ஆண்டில் 39 ஆயிரத்து 553 கோடியாக இருந்த நிதி ஒதுக்கீடு இந்த ஆண்டு ரூ.47 ஆயிரத்து 777 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. உயர்கல்விக்கு ரூ.14 ஆயிரத்து 376 கோடியில் இருந்து ரூ.16 ஆயிரத்து 690 கோடியாகவும், பொது சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறைக்கு ரூ.18 ஆயிரத்து 238 கோடியில் இருந்து ரூ.22 ஆயிரத்து 300 கோடியாக உயர்த்தப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் ஒட்டுமொத்த திட்டமில்லாச் செலவை கூட்டாததால் இவை தவிர மற்ற சமூகநலத்துறைகளுக்கு ஒதுக்கப்படும் நிதி ரூ.35 ஆயிரத்து 146 கோடியில் இருந்து ரூ.29 ஆயிரத்து 455 கோடியாக குறைத்திருப்பது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

ஒட்டுமொத்தத்தில் நிறைகள் குறைவாகவும், குறைகள் நிறைவாகவும் உள்ள இந்த நிதிநிலை அறிக்கை விலைஉயர்வை கட்டுப்படுத்தாது. மாறாக அதை மேலும் அதிகரிக்கவே செய்யும். பணவீக்கம் எதிர்பார்த்த அளவை விட மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் மக்களின் எண்ணிக்கை மேலும் உயரும். ஆனால் வளர்ச்சி விகிதம் 7.2 சதத்தில் இருந்து 8.2 சதமாக, ஏன் இன்னும் கூடுதலாக அதிகரித்துள்ளது என்று கூட அரசு மார்தட்டிக் கொள்ளும். பொருளாதார உலகமயம் என்ற கேடுகெட்ட தத்துவத்தில் இருந்து விடுவித்துக் கொள்ள இந்த அரசு தயாராக இல்லை என்பது இந்த நிதிநிலை அறிக்கை மூலம் திட்டவட்டமாக தெரிகிறது!








கலை


Comments:

No Comments

Post a Comment
User Name:
E-mail:
Comments:
நிர்மூலமான நித்யானந்தா
கமிஷன்... கடத்தில்... பலாத்காரம்..!
தி.மு.க. vs காங்கிரஸ்
அடுத்த என்கவுன்ட்டர் ‘அட்டாக்’ பாண்டி-
தேர் திருவிழாவில் ஹீரோவான பி.ஜே.பி., எம்.எல்.ஏ.!
‘ஒரு ரூபாய் நாணய’ வேட்டைக் கும்பல்!
தோடடக் கலைத் தொழிலாளர்கள்!
குறைவான நிறைகள்; நிறைவான குறைகள்
கலைஞர் கட்டளை:
தென்னவனுக்கு வலைவீசும் அ.தி.மு.க.!
அமைச்சர்கள்... அங்கே அப்படி.!
பயத்தில் பயணகள்; பரிதவிப்பில் தொழிலாளர்கள்!
நிதியில்லாமல் நீதியில்லை!