தேர் திருவிழாவில் ஹீரோவான பி.ஜே.பி., எம்.எல்.ஏ.!
-ஒடுக்கப்பட்டவர்களின் ஏக்கத்தை போககிய சம்பங்கி
கடந்த 75 ஆண்டுகாலமாக ஏங்கிக்கிடந்த தலித் சமுதாய மக்களின் கனவும் பெரியாரின் ஆசையும் நிறைவேறியிருக்கிறது. அதுவும் ஒரு பி.ஜே.பி. எம்.எல்.ஏ.வால்! இங்கல்ல...கர்நாடகாவில்!
கர்நாடக மாநிலத்தின் கோலார் தங்கவயல் (கே.ஜி.எப்.) தொகுதியில் கடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பி.ஜே.பி.யின் எம்.எல்.ஏ. சம்பங்கிதான் அந்த சாதனைக்குச் சொந்தக்காரர்.
கே.ஜி.எப். பகுதி கர்நாடக மாநிலத்தில் இருந்தாலும், தமிழ்நாட்டின் எல்லைப் பகுதியில் இருப்பதால், அங்கு அதிகமாக வாழ்ந்து வருவது தமிழர்கள்தான். இந்திய அரசால் நடத்தப்பட்ட தங்கச் சுரங்கங்கள் இருந்த இந்தப் பகுதியில் இப்போது தங்கம் வற்றிப் போய்விட்டது. தற்போது எல்லா சுரங்கங்களும் மூடப்பட்ட நிலையில் அங்கு வேலைக்கு சென்ற தமிழ் குடும்பங்கள் அங்கேயே பல தலைமுறைகளாக கிடைத்த வேலைகளை செய்துகொண்டு வாழ்ந்து வருகின்றனர்.
ஆண்டாண்டு காலமாக கே.ஜி.எப். தொகுதிக்குள் எம்.பி., எம்.எல்.ஏ.க்களை முடிவு செய்யும் வலிமை, தமிழ்நாட்டைச் சேர்ந்த தலித் மக்களுக்கே உரியதாக உள்ளது. மக்கள் தொகையில் 75 சதவிகிதம் பேர் தலித்துக்கள் இருந்தாலும் அவர்களுக்கு சில உரிமைகள் கடந்த நூற்றாண்டின் முதல் பாதியிலிருந்தே மறுக்கப்பட்டு வந்தது. அதில் மிகவும் முக்கியமானது ராபர்ட்சன் பேட்டையிலுள்ள ஸ்ரீ பிரசன்ன பெருமாள் கோயிலில் நடைபெறும் தேரோட்டம்தான். தேரோட்டத்தின் போது தலித்துகள் தேரின் வடத்தை தொட்டுக்கூட பார்க்க முடியாது.
தேரை வடம் பிடித்து இழுப்பதற்காக, தலித்துகள் தவித்த காலம் 75 வருடங்களுக்கு மேல். வருடந்தோறும் 12 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவை நாயுடு, முதலியார், ரெட்டியார், மலையாளி என வெவ்வேறு சமூக மக்கள் ஒவ்வொரு நாளும் தேர் இழுத்து திருவிழா நடத்தி வருகிறார்கள்.
இதை அவரவர் சார்ந்த சமுதாயம் சார்பாக நோட்டீஸ் அடித்து பேனர் வைத்து...என கே.ஜி.எப். பகுதியே கோலாகலப்படும். கடந்த காலங்களில் பலமுறை முயற்சி செய்தும் கடந்த ஆண்டுவரை தேர் இழுக்க, தலித் மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், பி.ஜே.பி. எம்.எல்.ஏ. சம்பங்கி தனது முயற்சியால், தேரை தலித் மக்கள் சார்பாக இழுத்துக் காட்டிவிட்டார்.
இதற்காக தனித்தனியே செயல்பட்டு வந்த தலித் அமைப்புகள், அம்பேத்கர் மன்றங்கள் என அனைவரையும் ஒன்றிணைத்து விழா நடத்த கமிட்டி அமைத்து, கோயிலை நிர்வகிக்கும் அறநிலையத்துறையிடம் தேர் இழுக்க தலித்துகளுக்கு அனுமதி வேண்டி கோரிக்கை வைத்தார் சம்பங்கி.
விழா நடக்கும் 12 நாட்களுக்கும் இதர சமுதாய மக்களுக்கு தேர் ஒதுக்கியாகிவிட்டது என்று பதில் கிடைத்தது. ஆனால் கடும் வற்புறுத்தலின் பேரில், கடந்த பிப்.26&ம் தேதியன்று எம்.எல்.ஏ. தலைமையில் தலித் மக்கள் தேர் இழுப்பது என முடிவாகியது.
அதன்படியே போஸ்டர் அடித்து ஊர் முழுக்க ஒட்டப்பட்டது. விழா நாளன்று சென்னையிலிருந்து ‘கானா’ உலகநாதனை அழைத்து பாட்டு கச்சேரி ஏற்பாடுகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, 26&ம் தேதி அன்று சம்பங்கி தலைமையில், வெங்கடேச பெருமாள் கோயிலுக்கு சென்று தேரில் வைக்க வெங்கடேச பெருமாள் சிலையை கொண்டுவர முயற்சித்தார்கள்.
சாமி சிலையை எடுக்க, நிர்வாகம் அனுமதி மறுக்கவே, தலித் மக்களின் கோயிலின் உள்ளே இருந்த கெங்கையம்மன் சிலையை கொண்டுவந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் வைக்கப்பட்டது. பிறகு தேர் புறப்பட்டு நகர் முழுக்க ஊர்வலமாக வந்தது. ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தேரோட்டத்தில் கலந்துகொண்டனர். இந்த விழாவில், மாநில அமைச்சர்கள் நான்கு பேரும் பல எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொண்டனர்.
‘இந்த தேர் திருவிழா வாய்ப்பு குறித்து என்ன நினைக்கிறீர்கள்’ என்று தேர் திருவிழாவுக்கு வந்த கல்லூரி விரிவுரையாளர் கோபிநாத் என்பவரை சந்தித்துக் கேட்டோம். ‘எங்களது வாழ்நாளில் இந்த தேர் திருவிழா மறக்க இயலாத ஒரு பொன்னாள். இந்த வாய்ப்பு எங்களுக்கு கிடைக்குமா என ஏக்கமாகவே இருந்தது. எங்களது சமூகத்துக்கு இப்படி ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்ததால், பல ஆத்மாக்களை சந்தோஷப்படுத்தியுள்ளது. சுருங்கச் சொன்னால் இந்த விழாவால் இறைவனே சந்தோஷப்பட்டிருப்பார்’’ என்றார் நெகிழ்ச்சியுடன்.
இது குறித்து சம்பங்கி எம்.எல்.ஏ.விடம் பேசினோம்.
‘‘எனது தொகுதியில் பெரும்-பான்மையாக வசிப்பது தலித் மக்கள் தான். அவர்களது ஓட்டுக்களை வாங்கி வெற்றி பெற்ற நான் அவர்களுக்கு ஏதாவது நன்மை செய்ய நினைத்து இதைச் செய்தேன். இதை நான் செய்யாவிட்டால் எம்.எல்.ஏ.வாக இருந்து பயனில்லை. இந்த நிகழ்ச்சி நடைபெறக்கூடாது என சிலர் முயற்சி செய்தார்கள். ஏன் சில தலித் அமைப்பினரே கூட தடையாக இருந்தனர். எல்லா தரப்பையும் சமாதானப்படுத்தி சம்மதிக்க வைத்தேன். அனைத்து தரப்பினரும் தேர் திருவிழாவை கொண்டாடுவது போல தலித்துகளும் கொண்டாடவேண்டும் என்ற காரணத்தினால் இந்த விழாவை நடத்திக் காட்டினேன்’’ என்றார் உணர்ச்சி வசப்பட்டவராய்!
இத்தேரோட்டம் நடந்தால் சாதி ரீதியிலான பிரச்னைகள் வரும் என்று பலரும் பயமுறுத்திய நிலையில், அதையும் மீறி ஒடுக்கப்பட்ட மக்களை நிமிரவைக்கும் வகையில் இதை நடத்திக்காட்டிய சம்பங்கி அங்கே ஒரு ஹீரோவாக பேசப்பட்டு வருகிறார்.
ஒரு தொகுதியின் எம்.எல்.ஏ. தனது முயற்சியால் தேர் திருவிழாவை நடத்தினாலும் அரசு கட்டுபாட்டிலுள்ள அறநிலையத்துறை சாமி சிலையை தராமல் இருந்தது தான் இந்த விழாவில் ஓர் குறையாக இருந்தது. ஆனாலும், முதல் கட்ட முயற்சியில் ஒடுக்கப்பட்ட மக்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்பது தான் சந்தோஷப்பட வேண்டிய விஷயம்.
படங்கள்: சுனில்
‘
பி.ஆர்.ஆனந்த்ராஜ்
|