முதல் பக்கம் | ஆசிரியருக்கு மடல் | முந்தைய இதழ்கள் | தேவதை | திரிசக்தி | முகவரி

 Untitled Document

கமிஷன்... கடத்தில்... பலாத்காரம்..!
அதிரடி புகாரிவ் ஐ.ஜி.




ஐநூறு கோடி ரூபாய் மோசடியில் சிக்கித் தவிக்கிறது திருப்பூர். இந்த மோசடியை செய்துவிட்டு, தப்பித்துக் கொண்டிருக்கிறது ‘பாசி போரக்’ நிறுவனம். ஆனால், மோசடி செய்த நிறுவன இயக்குனர்களை மிரட்டி 10 கோடி ரூபாயை போலீஸார் ‘லபக்கி’விட்டார்கள். இதுதான் நமக்கு கிடைத்த திடுக் தகவல்.

இந்தத் தகவல் உண்மையா என்று எமது நிருபர் குழு இரண்டு வாரங்களாக சுற்றித் திரிந்து விசாரித்தது. அதில் கேள்விப்பட்ட அத்தனையும் தலை சுற்ற வைக்கும் ரகம் அந்த அளவுக்கு மக்களின் பணம் மோசடி, நிதி நிறுவனத்தின் பெண் இயக்குனர் கடத்தல், போலீஸாரே பணம் பறித்த கொடுமை அதற்கும் மேலாக, மோசடி நிறுவனத்தின் பெண் இயக்குனரை பலாத்காரம் செய்த விவகாரம் என்று நீண்டது குற்றப்பட்டியல்.

முதலில் முன்னுரைக்கு வருவோம். திருப்பூரில் நான்கு வருடங்களாக செயல்பட்டு வந்த நிறுவனம் ‘பாசி போரக் டிரேடிங்’. இந்த நிறுவனம் திருப்பூரில் மட்டுமின்றி கோவை மாவட்டத்தில் இருக்கும் வேறு சில ஊர்களில் தனது கிளையை பரப்பிக் கொண்டது. ‘ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், மாதா மாதம் 15 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். இது வட்டி மட்டும் தான். பதினான்கு மாதங்கள் முடிந்தவுடன் செலுத்திய தொகை முழுவதும் திரும்பக் கிடைக்கும்’ என்று அறிவிப்பை நம்பி ஆயிரக்கணக்கானோர் முதலீடு செய்தனர்.

முதலீடு செய்யும் பணத்தில் வெளிநாட்டு முதலீடு செய்வதாக முதலில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், கம்பெனிகாரர்கள் ஆன் லைன் வியாபாரத்தில் ஈடுபடுவதாக தெரிந்தது. இரண்டு வருடங்களாக நன்றாக செயல்பட்டுக் கொண்டிருந்த இந்நிறுவனத்தில் திடீர் சிக்கல். முதலீட்டாளர்களுக்கு கொடுத்த செக், வங்கியில் போட்டதும் பணமின்றி திரும்ப வந்தது.

இதற்கிடையில், கம்பெனியில் வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்டு முறையிட்டுப் பார்த்தனர். விரைவில் பணம் வழங்கப்படும் என்ற வழக்கமான பதில் வந்தது. சிலர் திருப்பூர் மாவட்ட குற்றப்பிரிவுக்கு போக, ‘வாங்க... வாங்க.... நீங்க வருவீங்கன்னு தெரியும். யாருமே புகார் கொடுக்கலை. இருந்தாலும் நாங்களே முந்திக்கிட்டு எப்.ஐ.ஆர். போட்டு வச்சிட்டோமே...’ என்றனர் போலீஸார்.

‘யாருமே புகார் கொடுக்காமல் போலீஸார் எப்படி எப்.ஐ.ஆர். போட்டனர்?’ என்று வாடிக்கையாளர்கள் குழம்பிக் கொண்டிருந்தனர்.

‘இங்கே இருந்துதான் போலீஸாரின் தகிடுத்தங்கள் ஆரம்பிக்கின்றன’ என்று நம்மிடம் விளக்க வந்தனர் வக்கீல்கள் பன்னீர்செல்வமும், சிவப்பிரகாஷும்.

‘‘இந்த நிறுவனத்தில் ஏஜென்டுகள் மூலமாகவே உறுப்பினராக முடியும். இதற்காக ஏஜென்டுகளுக்கு 20 சதவிகித கமிஷன் கிடைத்தது. தங்களுக்கு கிடைக்கும் கமிஷனுக்காக கல்லூரி பேராசிரியர்கள், டாக்டர்கள், என்ஜினியர்கள் என பலரும் ஏஜென்டுகளாக மாறினர். அவ்வளவு ஏன் இந்த ஊரின் தாசில்தார் கூட ஏஜென்டாகி இருந்தார் என்றால் பாருங்கள். அவ்வளவு பேரும், அப்பாவி மக்களின் பணத்தை வாங்கி வந்து இங்கே கொட்டினார்கள்.

பணம் கிடைக்காத சிலர் போலீஸாரை அணுகிய போது தான், மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸார், பாசி நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்திருப்பது தெரிந்தது. இந்த வழக்கைப் பதிவு செய்தவர் இன்ஸ்பெக்டர் சண்முகய்யா. இந்த நிதி நிறுவனம், ரிசர்வ் வங்கியின் அனுமதியின்றி செயல்பட்டு வந்திருக்கிறது. இந்த நிலையில், போலீஸார் போட்ட எப்.ஐ.ஆர். மூலம் நிறுவனத்தின் இயக்குனர்களான கதிரவன், மோகன்ராஜ், கமலவள்ளி ஆகியோர் முன் ஜாமீன் பெற்றுவிட்டனர். ஜாமீன் கொடுத்த ஐகோர்ட் என்ன சொல்லியது? ‘வாடிக்கையாளர்களுக்கு பணம் தர போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தான் அறிவுறுத்தியது.

ஆனால், இந்த வழக்கை விசாரித்த டி.எஸ்.பி. ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர்கள் மோகன்ராஜ், சண்முகய்யா, ஆகியோர் சிக்கலில் சிக்கிக் கொண்டார்கள். இவர்களில் மோகன்ராஜ், சண்முகய்யா இருவரும் கமலவள்ளியை கடத்திய வழக்கு தொடர்பாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். டி.எஸ்.பி. ராஜேந்திரன் ஊட்டிக்கு டிரான்ஸ்பர் செய்யப்பட்டார்.

ஐநூறு கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்து, வாடிக்கையாளர்களை தவிக்க வைத்திருக்கும் பாசி நிறுவனத்தின் இயக்குனர்களை மிரட்டி பத்துக் கோடி ரூபாயை சுருட்டி உள்ளார்கள் போலீஸார். இந்த விஷயத்தில் ஐ.ஜி. ஒருவரும் சம்பந்தப்பட்டுள்ளார். இந்த விஷயத்தை வெளியே கொண்டு வராமல் நாங்கள் ஓயமாட்டோம்’’ என்று சொல்லி முடித்தனர்.

வக்கீல்களின் இந்த குற்றச்சாட்டு நம்மை அதிர வைத்தது. இது தொடர்பாக, திருப்பூர் மாவட்ட குற்றப்பிரிவையே இரண்டு நாட்கள் சுற்றிச் சுற்றி வந்தோம்.

அவர்கள் தரப்பில் சொன்ன தகவல்கள் நம்மை மலைக்க வைத்தன.

‘‘பாசி நிறுவனத்தில் சிக்கல் வந்ததுமே, போலீஸார் தயாராகி விட்டார்கள். அந்த நிறுவனத்தின் இயக்குனராக இருந்த கதிரவனை முதலில் போலீஸார் அழைத்து வந்தனர். ஏதோ ஒரு திட்டத்தை வகுத்துக் கொடுத்தனர். ‘பொருளாதார நெருக்கடியில் சிக்கிக் கொண்டிருக்கிறோம். வாடிக்கை-யாளர்களுக்கு பணம் தர சில காலம் தாமதமாகும். கோர்ட் சொன்னது போல, நாங்கள் விரைவில் பணத்தை திரும்ப கொடுத்துவிடுகிறோம்’ என்று சொல்லிவிட்டு அவர் சென்றுவிட்டார். அவரை போலீஸாரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. காரணம், அவர் பிரபல பத்திரிகையில் 20 வருடங்கள் நிருபராக இருந்தவர்.

தங்கள் கனவு பலிக்கவில்லையே என்று காத்திருந்த போலீஸாருடன், வெளிநாட்டு தூதரக பிரமுகர் ஒருவர் மூலம், ஜாக்பாட் அடிக்கத் தொடங்கியது. ஹாலந்து நாட்டுக்கு, இந்தியாவின் சார்பில் ஒருவருக்கு கௌரவ அந்தஸ்து அளிக்கப்பட்டிருந்தது. அந்தப் பதவியை வைத்துக் கொண்டிருந்த அண்ணாச்சி ஒருவர், தமிழ்நாடு போலீஸில் ஐ.ஜி.யாக இருந்தவருக்கு நெருக்கமானவர்.

அந்த அண்ணாச்சி வகுத்துக் கொடுத்த திட்டத்தை ஐ.ஜி. செயல்படுத்தினார். அப்போது தான் ஆனைமலை இன்ஸ்பெக்டராக இருந்த மோகன்ராஜ், இந்த வழக்கை விசாரிப்பதற்காகவே, மாவட்ட குற்றப்பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதற்கு ஆதரவு அளித்தவர் அந்த ஐ.ஜி. அதன் பிறகு பாசி நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான கமலவள்ளி, திருப்பூரில் இருந்து கோவைக்கு அவரது எண்டேவர் காரில் கடத்தப்பட்டார். அவர் கடத்தப்படுவதை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது கார் டிரைவர், திருப்பூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அந்தப் புகாரில் இருந்த பெயர்களைப் பார்த்ததும் போலீஸார் அதிர்ந்துவிட்டனர். மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர்கள் மோகன்ராஜ், சண்முகய்யா பெயர்கள் அதில் இருந்தன. அந்த நேரத்தில், பொறுப்பு எஸ்.பி.யாக இருந்தவர் கண்ணன். அதனால், திருப்பூர் போலீஸாரால் இன்ஸ்பெக்டர்கள் பெயரை எடுக்க முடியவில்லை.

இன்ஸ்பெக்டர்கள் மீது எப்.ஐ.ஆர்(3068/2009) போட்டதை அறிந்த, இன்ஸ்பெக்டர்களுக்கு ஆதரவாக இருந்த ஐ.ஜி. ஆத்திரமடைந்தார். அவர்களை காப்பாற்றும் முயற்சியில் இறங்கினார். திருப்பூரில் கடத்தப்பட்ட கமலவள்ளி, விமானம் மூலம் சென்னை அழைத்துச் செல்லப்பட்டார். அங்கிருந்து, பாண்டிச்சேரிக்கு காரில் அழைத்துச் சென்று ஒரு வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார். இதற்கிடையில், பாசி நிறுவனத்தின் மற்ற இயக்குனர்களிடம், வெளிநாட்டு தூதர் என்று சொல்லி ஒருவர் பேசினார்.

‘நீங்கள் 25 கோடி ரூபாயை கொடுத்தால் தான் கமலவள்ளியை மீட்க முடியும்’ என்று பேரம் பேச, கடைசில் 10 கோடி ரூபாயில் பேரம் படிந்தது. ‘இந்தப் பணத்தைக் கொடுக்காவிட்டால், உங்களது முன் ஜாமீன் ரத்து செய்யப்படும். பிறகு நீங்கள் ஜெயிலில் களி தின்ன வேண்டியதுதான்’ என்று அந்த வெளிநாட்டு தூதர் மிரட்டினார்.

அதன் பேரில், பத்து கோடி ரூபாய் கைமாறியது. இதில் ஐ.ஜி. ஒருவருக்கு ஐந்து கோடி ரூபாயும், வெளிநாட்டு தூதர் இரண்டு கோடி ரூபாயும் எடுத்துக் கொண்டனர். மற்ற போலீஸ் அதிகாரிகள் தலா ஒரு கோடியும் எடுத்துக் கொண்டனர். அதன்பிறகே, கமலவள்ளி திருப்பூர் திரும்பினார்.

திடீரென, கமலவள்ளியை கடத்திய வழக்கு விசாரணையில், இன்ஸ்பெக்டர்கள் மோகன்ராஜ், சண்முகய்யா இருவரையும் டி.ஐ.ஜி. பாலநாக தேவி சஸ்பெண்ட் செய்துவிட்டார். டவுன் டி.எஸ்.பி. ராஜேந்திரனை ஊட்டிக்கு மாற்றிவிட்டார். இது அவர்களுக்கு பெரும் தலைவலியாகப் போய்விட்டது. உடனே, பாசி நிறுவனத்திடம் பணத்தை வசூலிக்க உத்தரவிட்ட ஐ.ஜி.யிடம் ஓடினர் இந்த அதிகாரிகள்.

‘தைரியமாக இருங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று அந்த ஐ.ஜி. சொல்லி அனுப்பியுள்ளார்.

இந்த மோசடிகளுக்குப் பின்னால், கமலவள்ளியை மிரட்டி, அந்த போலீஸ் ஐ.ஜி.யும் பலாத்காரம் செய்திருப்பது அம்பலமாகியுள்ளது. அதுவரை பொறுத்திருந்த கமலவள்ளி, யாரோ கொடுத்த தைரியத்தில், மாஜிஸ்திரேட் முன்பாக நடந்த அனைத்து விவரத்தையும் வாக்குமூலமாக பதிவு செய்துள்ளார்’’ என்று திருப்பூர் போலீஸார் சொல்லி முடித்த போது, அவர்களுக்கு வியர்த்துக் கொட்டியது. நமக்கு வியப்பு தட்டியது.

எப்படியாவது கமலவள்ளியிடம் பேசிவிட முயற்சித்தோம். அவருக்குப் பதிலாக மற்றொரு இயக்குனர் மோகன்ராஜ் பேசினார்.

‘‘கமலவள்ளி பேசும் நிலையில் தற்போது இல்லை. அவரை தொந்தரவு செய்யாதீர்கள். என்ன நடந்தது என்பதை அவர் மாஜிஸ்திரேட் முன்பு சொல்லிவிட்டார். காவல்துறை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது எங்களுக்குத் தெரியாது. வாடிக்கையாளர்களுக்கு பணம் தரும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம். அவர்களுக்கு பின் தேதியிட்ட செக்குகளை வழங்கி வருகிறோம். இதற்கு மேல் எதுவும் கேட்காதீர்கள்’’ என்று மொபைல் போன் இணைப்பை துண்டித்துவிட்டார். இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட எஸ்.பி. அருணிடம் பேசினோம்.

‘‘திருப்பூருக்கு நான் வந்து சேர்ந்த பிறகு, இந்த விஷயம் தொடர்பாக 20 ஆயிரம் புகார்கள் வந்துள்ளன. நியாயமாக விசாரித்து, இதுவரை 3.75 கோடி ரூபாயை முதலீட்டாளர்களுக்கு வழங்கி இருக்கிறோம். தொடர்ந்து புகார்கள் வருவதால், பொருளாதார குற்றப்பிரிவுக்கு வழக்கு மாற்றப்பட்டிருக்கிறது. இரண்டு இன்ஸ்பெக்டர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விஷயம் இன்னும் விசாரணையில் இருக்கிறது’’ என்று முடித்துக் கொண்டார்.

பாசி நிறுவனத்தின் மோசடிக்குள் இத்தனை மோசடிகள் நடந்திருக்கிறது என்பதை சென்னையில் இருக்கும் காவல்துறை உயர் அதிகாரிகளே உறுதி செய்கின்றனர். ‘இந்த மோசடி குறித்து, தமிழகக் காவல்துறையின் எந்தப் பிரிவு விசாரித்தாலும் உண்மை வெளிவராமல் போய்விடும். காரணம், இந்த கடத்தல், பத்து கோடி ரூபாய் பறிப்பு, பலாத்காரம் என்ற விவகாரங்களின் பின்னணியில் ஐ.ஜி. ஒருவரே சம்பந்தப்பட்டிருக்கிறார் என்று போலீஸாரே நெத்தியடியாக சொல்கின்றனர். இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்தால் உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும் என்பது பாதிக்கப்பட்டவர்களின் எதிர்பார்ப்பு. உள்துறையை கையில் வைத்திருக்கும் கலைஞர் என்ன செய்யப் போகிறார்?






அஸ்வின்


Comments:

No Comments

Post a Comment
User Name:
E-mail:
Comments:
நிர்மூலமான நித்யானந்தா
கமிஷன்... கடத்தில்... பலாத்காரம்..!
தி.மு.க. vs காங்கிரஸ்
அடுத்த என்கவுன்ட்டர் ‘அட்டாக்’ பாண்டி-
தேர் திருவிழாவில் ஹீரோவான பி.ஜே.பி., எம்.எல்.ஏ.!
‘ஒரு ரூபாய் நாணய’ வேட்டைக் கும்பல்!
தோடடக் கலைத் தொழிலாளர்கள்!
குறைவான நிறைகள்; நிறைவான குறைகள்
கலைஞர் கட்டளை:
தென்னவனுக்கு வலைவீசும் அ.தி.மு.க.!
அமைச்சர்கள்... அங்கே அப்படி.!
பயத்தில் பயணகள்; பரிதவிப்பில் தொழிலாளர்கள்!
நிதியில்லாமல் நீதியில்லை!