தோடடக் கலைத் தொழிலாளர்கள்!
-ஐம்பதாண்டுகளாக தினக்கூலி வாழக்கை

‘‘பூக்களை எல்லாம் நாங்கள் சிரிக்க வைக்கிறோம். ஆனால் எங்கள் வாழ்க்கை மட்டும் இன்னும் வசந்தத்தைக் காணாமல் வாடிக் கிடக்கிறது’’ -இந்த ‘புண்மொழி’க்கு சொந்தக்காரர்கள் தமிழகத் தோட்டக் கலைத் துறை தொழிலாளிகள்.
தமிழக விவசாயத் துறையின் தோட்டக் கலைத் துறைக்கு 54 பண்ணைகள் மற்றும் பல பூங்காக்கள் உள்ளன. இவற்றில் பல்லாண்டுகளாக தினக் கூலிகளாக வேலை பார்த்து வரும் ஆயிரக்கணக்கானோர் கடந்த பல ஆண்டுகள் போராட்டத்திற்கு பின் தற்போது தமிழ்நாடு தோட்டக் கலைத் துறை முகமைப் பணியாளர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.

பெயர்தான் நாகரிகமாக மாறியதே தவிர, தகுதிக்கேற்ற பணியோ, பணி நிரந்தரமோ, சம்பள உயர்வோ இன்று வரை கிடைக்கவில்லை என்பதுதான் இவர்களின் கவலை!
நீலகிரி மாவட்டத்தில் மட்டும் சுமார் ஆயிரத்து முன்னூறு பேர் தோட்டகலைத் துறையில் வேலை பார்க்கிறார்கள். ஊட்டி ரோஜா பூங்கா, தமிழக விருந்தினர் மாளிகை, குன்னூர் சிம்ஸ் பூங்கா, நஞ்ச நாடு பண்ணை, கோல்கிரைன் பண்ணை, காட்டேரி, பர்லியார், கல்லார், தேவாலா ஆகிய பண்ணைகளில் இவர்கள் பணியில் இருக்கிறார்கள்.
சிரித்துக் குலுங்கும் மலர்களுக்கிடையில் வேதனையோடு நம்மிடம் பேசினார்கள் தோட்டக் கலைத்துறை தொழிலாளிகள்.
‘‘கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது பத்து வருடங்களுக்கு மேல் தோட்டக்கலைத் துறையில் வேலை செய்பவர்களை பணி நிரந்தரம் செய்ய அரசு ஆணை வெளியிட்டது. அதன்படி பணி நிரந்தரத்தோடு எங்களுக்கு சத்துணவு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் வழங்கவும் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில், அடிப்படை சம்பளம் ஆயிரத்து முன்னூறு, பஞ்சப்படி, பயணப்படி வழங்கவும் அப்போதைய அரசு உத்தரவிட்டிருந்தது.
ஆனால் அதன் பின் ஆட்சிக்கு வந்த தி.மு.க. அரசு அதற்கான எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. நாங்கள் நடத்திய போராட்டங்களுக்குப் பின் கடந்த 2007&ம் ஆண்டு நடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் வேளாண்மைத் துறை மானிய கோரிக்கையில், அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், ‘தோட்டகலை துறை பணியாளர்கள் படிப்படியாக பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள், ஊதியம் உயர்த்தப்படும், தகுதிக்கேற்ற பணி வழங்கப்படும், சத்துணவு ஊழியர்களுக்கு இணையான சம்பளமும் சலுகைகளும் வழங்கப்படும்’ என்று உறுதியளித்தார். ஆனால் நான்கு ஆண்டுகள் ஆகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் தமிழக அரசால் எடுக்கப்பட்டவில்லை. அதனால் இன்றும் தினக்கூலியாகத்தான் இருக்கிறோம்.
ஒவ்வொரு ஆண்டும் மலர் கண்காட்சியை கவர்னர் திறந்து வைக்க வரும் போதெல்லாம் அவரிடம் எங்கள் கோரிக்கையை முன் வைக்கிறோம். அதே போல் அமைச்சர்களிடமும் முன் வைக்கிறோம் ஆனால் கடந்த ஐம்பது ஆண்டுகளாக எந்த பலனும் இல்லை’’ என்றவர்கள் பெருமூச்சோடு தொடர்ந்தனர்.
‘ ‘கடந்த ஆண்டு மட்டும் 35 தோட்டப் பணி-யாளர்களை வாய்மொழி உத்தரவாக ரிட்டயர்மெண்ட் கொடுத்து வீட்டுக்கு அனுப்பினார்கள். அவர்கள் பிச்சை எடுக்காத குறையாக வாழ்ந்து வருகிறார்கள். நாளை எங்களுக்கும் அதே நிலைதான். விவசாய துறையில் வேலை பார்த்து ஓய்வு பெறுபவர்களுக்கு குடும்ப நல ஓய்வூதியமாக 400 ரூபாய் வழங்கப்படுகிறது, மற்ற துறையில் இருந்து ஓய்வு பெறுபவர்களுக்கு 700 ரூபாய் வழங்கப்படுகிறது. விவசாய துறைக்கு கீழ் வரும் எங்களுக்கு மட்டும் எதுவும் வழங்கப்படுவதில்லை.
தோட்ட பணியாளர்கள் 90 சதவிகிதம் பேர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள். அவர்களுக்காக குரல் கொடுக்க எந்த அமைப்பும் முன் வருவதில்லை. நாங்களே எங்கள் போராட்டங்களை நடத்தி வந்தோம். தற்போது அதற்கும் உரிமை இல்லை. போராட்டங்கள் செய்பவர்களை வேலை செய்ய அனுமதிப்பதில்லை, அல்லது வேறு ஊரில் உள்ள தோட்டங்களுக்கு மாற்றப்படுகிறார்கள். இதனால் தற்போது நாங்கள் யாரும் துணிந்து போராடுவதில்லை. எல்லாம் வயிற்று பிழைப்புக்குத்தான்.

பிரிட்டிஷ் காலத்தில் உருவாக்கப்பட்ட பூங்காக்களில் 25 பைசா சம்பளத்துக்கு வேலைக்கு சேர்ந்தவர்களும் இன்று ஊட்டி தாவரவியல் பூங்காவில் வேலை பார்க்கிறார்கள். இந்த ஆண்டு அவர்கள் ஓய்வு பெறவுள்ளனர். அதுவும் வெறும் கையோடு. அதே நேரம்... ஊட்டி தாவரவியல் பூங்காவின் ஆண்டு வருமானம் ஐந்து கோடி ரூபாய்க்கும் மேல். இதில் ஒரு பங்கை செலவிட்டாலே தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தோட்ட தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்து ஊதியம் வழங்கலாம்.
தமிழகத்தில் எங்கு அரசு விழாக்கள் நடந்தாலும் நாங்கள் தான் மேடை அலங்காரம், பூ அலங்காரம் போன்ற பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறோம். தற்போது கோவையில் நடக்கவிருக்கும் உலக தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்காக, கோவையில் சாலையோர பூங்கா, புதிய பூங்காக்கள், பழைய பூங்காக்களை சீரமைப்பது போன்ற பணிகளை நாங்கள் தான் செய்து வருகிறோம். சென்னையிலும் இந்தப் பணிகளைச் செய்கிறோம். அதற்கும் எங்களுக்கு தினக்கூலிதான்.
கோடிக் கணக்கில் வருவாய் கொட்டும் தோட்டக் கலைத் துறையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு, தினம் 150 ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் பல ஆண்டுகளுக்கு முன் அரசுக்கு பரிந்துரைத்தும் தோட்டக்கலை துறையில் இருந்து எந்த பதிலும் இல்லை. இந்த ஆண்டு அரசு அறிவித்த ஆயிரம் ரூபாய் பொங்கல் கருணைத் தொகையையும் இது வரை வழங்கப்படவில்லை. அதே போல் மலைப் படி (ஹில் அலவன்ஸ்), வீட்டு வாடகை, பயணப்படி என எதுவும் எங்களுக்குக் கிடையாது. ஆண்டுக்கு பல கோடி ரூபாய் ஈட்டிவரும் இந்த கோடீஸ்வர துறைக்கு பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்கக் கூட ஏன் முடியவில்லை?’’ என சோகமாக முடித்தார்கள்.
இவர்களின் சோகங்கள் பற்றி தமிழக தோட்டக் கலைத்துறையின் உதவி இயக்குனர் பிரகாசத்திடம் கேட்டோம்.
‘‘அரசு ஆணைப்படி படிப்படியாக தோட்டத் தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டு வருகிறார்கள். பணிநியமனம் தொடர்பான கோப்புகள் கடந்த இரண்டாண்டுகளாக தமிழக அரசிடம் நிலுவையில் உள்ளன. பணி நிரந்தரம் செய்யப்பட்டவர்கள், இனி நிரந்தரம் செய்யப்படுபவர்களுக்குத்தான் பென்ஷன் உள்ளிட்ட சலுகைகள் கிடைக்கும்’’ என்றார்.
இவ்வளவு துயர்களுக்கிடையிலும்... வரும் மே மாதம் நடைபெற உள்ள 114 - வது மலர் கண்காட்சிக்கான வேலைகளிலும் மும்முரமாக இறங்கிவிட்டார்கள் இந்த தொழிலாளர்கள். தோட்டக் கலைத் தொழிலாளர்களின் வாட்டத்தைப் போக்க வேண்டியது கலா ரசிகரான கலைஞரின் கடமையன்றோ?
படங்கள்: எம்.குமரேசன்
‘
யுவ்ராஜ்
|