முதல் பக்கம் | ஆசிரியருக்கு மடல் | முந்தைய இதழ்கள் | தேவதை | திரிசக்தி | முகவரி

 Untitled Document

அலெக்ஸ் & பாண்டியன்
கலைஞரின் திடீர் கோபம்!




பாண்டியன் அறையை திறந்து கொண்டு வாட்ச்மேன் ஓடி வந்தார்.

‘‘சார். நம்ம ஆபீஸ் வாசல்ல சாமியார் ஒருத்தர் நிக்கறார். உங்களை பார்க்கணும்னு சொல்றார்’’

‘‘அது சாமியார் இல்லை. நம்ம அலெக்ஸ் தான். உள்ளே விடுங்க’’

‘‘சார். நானே கொஞ்சம் ஏமாந்துட்டேன்’’ என்று வாட்ச்மேன் வழிய, அலெக்ஸ் அலுவலகத்திற்குள் நுழைந்தார்.

‘‘என்ன அலெக்ஸ். சி.டி. கிடைச்சிடுச்சா’’

‘‘சி.டி.யை நம்ம பத்திரிகை நண்பர்களே கொடுத்துட்டாங்க. ஆனா, நித்யானந்தரை பற்றி சில விஷயங்களை சேகரிக்கணுமே. அதுக்காகதான் இந்த ‘கெட்டப்’. ஆனாலும், நித்யானந்தாவின் பக்தர்கள் நம்பவே மறுக்கிறார்கள்’’ ‘‘நித்யானந்தா சிக்க வைத்த பின்னணியில் கர்நாடக அரசியல்வாதிகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக முன்னாள் பிரதமர் தேவகவுடா தான் இதற்கு காரணம் என்று சுவாமியின் பெங்களூரு பக்தர்கள் கொந்தளிக்கிறார்கள். சமீபத்தில் 75 ஏக்கர் பரப்பளவிலான திராட்சை தோட்டத்தை தேவகவுடா வாங்க பேரம் பேசிக் கொண்டிருக்க, ஒரே நாளில் அந்த தோட்டத்தை நித்யானந்தாவின் ஆசிரமம் வாங்கிவிட்டது. அதன் பிறகு, வேறு ஒரு பண்ணையையும் தேவ கவுடா விலை பேசி முடிக்க, அதைவிட கூடுதல் தொகை கொடுத்து ஆசிரமத்தார் வாங்க, கவுடாவுக்கு கோபம் வந்துவிட்டதாம். உடனே, ஆசிரமத்தில் நடக்கும் சில பல விஷயங்களை அரசல் புரசலாக தெரிந்து வைத்திருந்த தேவகவுடாதான், அவரது சீடர்களை சில லட்சங்களுக்கு விலைக்கு வாங்கி, இந்த அசிங்கத்தை அம்பலப்படுத்தினார் என்று சொல்லப்படுகிறது’’

‘‘ரஞ்சிதா எப்படி?’’

‘‘குடும்ப வாழ்க்கையில் பிரிந்து வாழும் ரஞ்சிதா சில டி.வி. சீரியல்களில் நடிக்கத் தொடங்கினார். டி.வி. இயக்குனர் ஒருவர் மூலமாக நித்யானந்தாவிடம் அறிமுகம் கிடைத்தது. அந்த அறிமுகத்தில், சாமியாரிடம் நெருங்கினார் ரஞ்சிதா. ஒரு கட்டத்தில் தானே டெலி பிலிம் எடுக்க பைனான்ஸ் தேவைப்பட்டது. அதற்காக, நித்யானந்தாவிடம் போய் கேட்டதுமே ஒரு கோடியை கொட்டினாராம். அடுத்து ஒரு படம் தயாரிக்கப் போகிறேன் என்று சொன்னதுமே, ஐந்தரை கோடியும் திரண்டு வந்ததாம். கடைசியாக ஒன்று சொல்கிறார்கள். சாமியார் தொடங்க இருந்த டி.வி. சேனலுக்கு, ரஞ்சிதா தான் நிர்வாகியாக இருக்கப் போகிறார் என்று பக்தர்களில் ஒருவர் மட்டும் மனம் திறந்தார்’’

‘சாமியாருக்கு முதன் முதலில் நெருக்கமாக இருந்தவர் வலம்புரிஜான் என்கிறார்களே?’’

‘‘ஆமாம். அவர் தான் சாமியாரை பெரிய அளவில் விளம்பரப்படுத்தியது. சாமியார் எழுதிய தொடருக்கு ‘கதவை திற.. காற்று வரும்’ என்ற தலைப்பையும் எழுதி, சாமியாருக்காக சில காலம் கட்டுரைகளையும் எழுதியவர் வலம்புரியார்தான். முதலில் ஈரோட்டில் மடம் தொடங்கினார். அங்கிருந்து சேலம். பிறகு பெங்களூரு என்று சாமியாரின் எல்லை விரிந்து கொண்டே போனது. பெங்களூருவில் அவர் பெண் பக்தைகளிடம் நடந்து கொண்டதை கண்டு, முகம் சுளித்த வலம்புரிஜான் ஒதுங்கிக் கொண்டார். ஆனால், சில சித்து வேலைகளினாலும், மெஸ்மரிசத்தினாலும் எல்லா தரப்பினரையும் சாமியார் கவர்ந்திருந்தார். தன்னை காண வரும் முக்கிய பிரமுகர்களுக்கு, திடீரென சாலையில் யானை வருகிறது என்று சொல்வார். அச்சாலையில் சில நொடிகள் யானை நிற்பது போல தெரியுமாம். இதைக் கண்டுதான் பல வி.ஐ.பி.கள் சாமியாருக்கு அடிமைகளாக மாறிவிட்டார்களாம்’’

‘‘சரி சாமியின் கதி... விதிவிட்ட வழி... அது போகட்டும். சமீப-காலமாக ஆற்காட்டார் தென்படுவதில்லையே?’’

‘‘உடல்நலக்குறைவால் வீட்டிலேயே ஓய்வெடுத்து வருகிறார். வயிற்றில் கட்டி இருக்கிறதாம். அதை பயாப்சி எடுத்துப் பார்த்திருக்கிறார்கள். பயப்படும்படியாக இல்லையென்றாலும், ஆற்காட்டார், சொத்து விஷயங்களை உயில் எழுதும் பணியில் மும்முரமாகிவிட்டாராம். கடந்த வாரத்தில் தம்பிகளை அழைத்து தனித்தனியாக பேசி இருக்கிறார். அடுத்து, தனது குடும்பத்தினற்கும் உயில் விவரங்களை தெளிவாக எழுதி வைத்துவிட்டாரம். ‘மார்ச் 13ம் தேதியன்று சட்டசபை கட்டட திறப்பு விழாவுக்கு வந்தால் போதும், அதுவரை ஓய்வெடு’ என்று கலைஞர் சொல்லியிருக்கிறாராம்’’

‘‘வரும் ஜூன் மாதம் வரை அவர் ஓய்வில் இருக்கப் போவதாக சொல்லப்படுகிறதே?’’

‘‘டாக்டர்கள் அப்படி அறிவுறுத்தியதாக சொல்லப்படுகிறது. அதுவரை அவரது மின்துறை பொறுப்பை யார் கவனிப்பது என்றும் கலைஞர் தனது சகாக்களிடம் ஆலோசித்தார் என்றும் சொல்கிறார்கள். காரணம், கோடைக் காலம் ஆரம்பித்திருப்பதால், மின்தடை அதிகமாகிவிட்டதாம். சென்னையைத் தவிர்த்து, மற்ற ஊர்களில் மாலையில் இரண்டு மணி நேரம் மின்தடை இப்போதே செய்யத் தொடங்கிவிட்டார்கள். இது இன்னும் நாளுக்கு நாள் அதிகமானால், மக்களிடையே கெட்ட பெயர் வரும் என்பதால். வேறு ஒருவருக்கு கொடுக்க வேண்டிய நிர்பந்தம் இருப்பது உண்மைதானே. இந்த நிலையில், மின்துறையை அடைய, பொன்முடி ரொம்பவே பிரியப்படுகிறாராம். அதே நேரத்தில் கலைஞரிடம் யாரும் இதுபற்றி பேசமுடியவில்லை. காரணம், கலைஞர் சில நாட்களாக ஆழ்ந்த வருத்தத்தில் இருப்பதாக சீனியர்கள் சொல்கிறார்கள். என்ன காரணம் என்பது தான் தெரியவில்லை?’’

‘‘சி.ஐ.டி. காலனி மீது ஏற்பட்டுள்ள கடும் கோபம் தான் அது’’ என்றார் பாண்டியன்.

‘‘குடும்பத்தில் இதெல்லாம் சாதாரணப்பா’’

‘‘நான்கு நாட்களாக சி.ஐ.டி. காலனி பக்கமே கலைஞர் செல்லவில்லை. இரவு தூக்கமும் கோபாலபுரத்தில்தான்’’

‘‘என்ன சொல்கிறீர்கள்?’’

‘‘கடந்த ஞாயிற்றுக்கிழமை, அதாவது பிப்.28ம் தேதி முதல், இதழ் அச்சேறும் வரை கலைஞர் சி.ஐ.டி. காலனிக்கு போகவில்லை. இரண்டு விஷயங்கள் சொல்லப்படுகிறது. ஒன்று, ராஜாத்தியம்மாள் யாருக்கோ செய்த சிபாரிசு கலைஞரை ஆத்திரமடையச் செய்துள்ளது என்பது. இரண்டாவது, மகள் செல்விக்கு எதிராக செயல்பட்டு வருவது. இரண்டில் எது உண்மை என்பது தெரியவில்லை. இது ஒரு புறம். கும்பகோணத்தில் பிரத்யங்காரா தேவி கோயிலில், ராஜாத்தியம்மாள் நடத்திய யாகம் தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது’’

‘‘என்ன யாகம் அது?’’

‘‘திருஷ்டி கழிக்கவும், எதிரிகளை முடக்கவும் என்று சொல்லப்படுகிறது. இதுதவிர 48 நாட்களுக்கு ராகு ஸ்தலத்திலும் விஷேச பூஜைகளுக்கு ராஜாத்தியம்மாள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு, பூஜைகள் நடந்து வருகின்றன. இந்த யாகத்தின் பின்னணிக்கு வேறு சில காரணங்களும் சொல்லப்படுகிறது. அதை லோக்கல் வி.ஐ.பி. ஒருவர் கோபாலபுரத்துக்கு தெரியப்படுத்திவிட்டாராம். கலைஞரின் கோபத்துக்கு அதுவும் ஒரு காரணம் என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தினர்’’ ‘‘ஸ்டாலின் பிறந்தநாளன்று ஏற்பட்ட குழப்பத்தால் தான் மயிலாப்பூர் போலீஸ் துணை கமிஷனர் மௌரியா மாற்றப்பட்டார் என்கிறார்களே. உண்மையா?’’

‘‘அது உண்மையாக இருக்க வாய்ப்பில்லை. ஆனால், ஸ்டாலின் பிறந்த நாளில் தென் சென்னையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலுக்கு, போலீஸாரை குறை சொன்னால் தப்பேயில்லை. அன்றைய தினம் தான் ப்ளஸ் டூ தேர்வு தொடங்கியது. ராஜா அண்ணாமலைபுரம், ஆழ்வார்பேட்டை பகுதி மாணவர்கள் ரொம்பவே அவதிப்பட்டனர். இது ஒரு பக்கம். ஸ்டாலின் வசிக்கும் தெரு மற்றும் அந்தத் தெருவை பக்கத்தில் இருக்கும் இரண்டு தெருக்களில் வசிப்பவர்களும் அலுவலக பணிகளுக்குச் செல்ல ரொம்பவே கஷ்டப்பட்டார்கள். துணை முதல்வராகி, முதல் பிறந்தநாள் வரும் போது, அறிவாலயம் அல்லது ஏதாவது ஒரு மண்டபத்தில் பிறந்தநாள் கொண்டாடி இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றார்கள் அங்கு வந்தவர்கள்’’ ‘‘அவரது அம்மாவே 20 நிமிடம் காத்திருந்து, வீட்டுக்குள் சென்றதாக சொல்கிறார்கள்’’

‘‘அதுதான் புரியவில்லை. பிறந்தநாளன்று காலை 6.15 மணிக்கு ஸ்டாலின் கோபாலபுரம் சென்று கலைஞரிடமும் தயாளுஅம்மாளிடமும் ஆசியும் வாழ்த்தும் பெற்றுவிட்டார். பிறகு ஏன் தயாளும்மாள் அங்கு வாழ்த்த வந்தார் என்பது தான் பலருக்கும் புரியவில்லை’’

‘‘மௌரியா விவகாரத்தை விட்டு வெளியே போகிறீர்களே?’’

‘‘வருகிறேன். மௌரியாவின் தம்பி ஏ.ஜி.பாபு. இவரும் ஐ.பி.எஸ். அதிகாரி. தற்போது கிருஷ்ணகிரி எஸ்.பி.யாக இருக்கிறார். பாபுவின் மாமனார் மடிப்பாக்கம் வேலாயுதம். முதலில் அ.தி.மு.க.வில் இருந்த அவர், தற்போது விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தில் இருக்கிறார். ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு, சில நூறு கோடிகளை கையில் வைத்திருக்கிறார். ஆந்திராவைச் சேர்ந்த ரேகிண்டோ நிறுவனத்துக்கு சென்னைக்கு அருகே, 178 கோடி ரூபாய்க்கு நிலத்தை விற்றார். அந்த நிலம் வாங்கிய பிறகுதான், அதில் இருந்த வில்லங்கம் தெரிந்தது. பணத்தை திரும்ப கேட்டது அந்த நிறுவனம்.

இவர் பணம் தர மறுக்க, கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதில், இதுவரை 120 கோடி ரூபாய் செட்டிலாகிவிட்டது. இன்னும் 58 கோடி ரூபாய் பாக்கி. இந்த விவகாரத்தை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. இந்த வழக்கில்தான் ஐ.பி.எஸ். அதிகாரிகள் துக்கையாண்டி, மௌரியா, பாபு ஆகியோரின் பங்கு என்ன என்பதை விசாரிக்குமாறு ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. அது தொடர்பாக, சில தினங்களுக்கு முன்பாக மௌரியாவை சி.பி.ஐ. விசாரித்ததாம். அந்த விசாரணைக்கு பிறகே அவர், பழனி பட்டாலியனுக்கு மாற்றப்பட்டதாக சொல்லப்படுகிறது. நீங்கள் சாமியார் வேஷத்தை கலைத்துவிட்டு வாருங்கள். சாப்பிடலாம்’’ என்றார் பாண்டியன். வேஷத்தை கலைக்க அலெக்ஸ் அவரது அறைக்குள் சென்றார்.



கொள்கைகளுக்கான வாரிசு!
மு.க.ஸ்டாலின், கலைஞரின் உடைமைகளுக்கான வாரிசு அல்ல... கொள்கைகளுக்கான வாரிசு என்ற உண்மையை முரசறைந்து அறிவித்திருக்கிறது ‘ஸ்டாலின் & மூத்த பத்திரிகையாளரின் பார்வையில்’ என்ற தலைப்பில் பத்திரிகையாளர் சோலை எழுதிய புத்தக வெளியீட்டு விழா!

எதிரும் புதிருமான பத்திரிகை அதிபர்கள் பக்கத்துப் பக்கத்தில் அமர்ந்திருக்க... அவர்களின் தொழில் போட்டி போலவே துணை முதல்வரை பாராட்டுவதிலும் போட்டி நிலவியது.

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக துணைவேந்தர் சபாபதி மோகன், அவசர நிலைக் காலத்தில் மு.க.ஸ்டாலின் சிறையில் ஒன்பதாம் நம்பர் பிளாக்கில் பட்ட சித்ரவதைகளைச் சொன்னபோது எதிரே அமர்ந்திருந்த உதயநிதி ஸ்டாலினின் கண்களில் நீர் கோர்த்திருந்தது.

ஸ்டாலினைப் பாராட்டிவிட்டு, ‘பெரியார் பற்றி ஆங்கிலத்தில் இதுவரை முழுமையான வரலாற்று ஆய்வு நூல் வெளிவரவில்லை. இனியாவது வரவேண்டும்’ என்றார் ‘இந்து’ ராம்.

இதற்குப் பின் பேசிய நடிகர் கமல்ஹாசன், ‘‘பார்த்தீர்களா பெரியாரின் மகத்துவத்தை... ‘மவுன்ட் ரோடு மகாவிஷ்ணு’வின் வாயாலேயே அவரைப் பற்றிய ஆங்கில ஆய்வு நூல் வெளிவரவேண்டும் என பேசவைத்திருக்கிறார். அவரது முன்மொழிதலை நான் வழிமொழிகிறேன். என்னை சிலர் கலைஞர் பாராட்டு விழாக்களின் நிலைய வித்வான் என கூறுகின்றனர். நல்ல சங்கீதத்துக்கு நிலைய வித்வானாக இருப்பதில் என்ன தவறு?’’ என தன்னைப் பற்றி அப்படி எழுதிய பத்திரிகையின் அதிபரை மேடையில் வைத்துக் கொண்டே பதிலும் கொடுத்துவிட்டார்.

‘‘இங்கே அனைத்து பத்திரிகை அதிபர்களும் மு.க.ஸ்டாலினைப் புகழ்ந்து பேசுவதை கேட்கும்போது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. அதைவிட இந்த உரைகள் பதிவு செய்யப்படுவது மேலும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஏனென்றால் இவற்றை நாங்கள் தேவைப்படும்போது பயன்படுத்திக் கொள்வோம்’’ என கி.வீரமணி தன் கருத்தைப் ‘பதிவு’ செய்தபோது மேடையில் இருந்த பத்திரிகை அதிபர்களே ஆடித்தான் போனார்கள்.

வரவேற்புரையுடன் விழாவைத் தொகுத்து வழங்கிய கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியன், ஒவ்வொரு பேச்சாளரும் பேசும் முன்பாக ஸ்டாலின் பற்றிய கடந்த கால சுவையான நிகழ்வுகளைச் சொல்லி ரசிக்க வைத்தார்.

கலைஞர் தன் வீட்டில் இருந்தபடி ‘கலைஞர் டி.வி.லைவ்’ வில் விழாவை ரசிக்க... விழா நாயகர் ஸ்டாலினோ, கலைஞர் வீட்டு வசதி திட்ட விழா ஏற்பாட்டுக்காக திருச்சி சென்றிருந்ததால் அங்கிருந்தே தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தார்.

வியக்க வைத்த ஸ்டாலின்!

மார்ச் 3 அன்று திருச்சியில் ‘கலைஞர் வீட்டு வசதி திட்ட’ தொடக்க விழாவுக்கு தி.மு.க.வின் தற்போதைய கூட்டணிக் கட்சி தலைவர்களுடன் பா.ம.க. தலைவர் கோ.க.மணியும் வந்திருந்து தி-.மு-.க.வினரைத் திரும்பி பார்க்க வைத்தார். விழா தொடங்கும் முன்பாக கலைஞரும், ஸ்டாலினும் அவருடன் சகஜமாக பேசியதைப் பார்த்து மீண்டும் தி.மு.க. & பா.ம.க. கூட்டணி வருமோ? என்ற முணுமுணுப்பு கூட்டத்தில் எழுந்தது.

இந்த விழாவுக்கான அழைப்பிதழை எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதாவுக்கு அனுப்பியதையும், ‘எனக்கு சொந்த வேலைகள் இருப்பதால் விழாவுக்கு வரமுடியவில்லை’ என்று ஜெயலலிதா பதில் கடிதம் அனுப்பியதையும் நிகழ்ச்சியில் பேசும்போது குறிப்பிட்ட ஸ்டாலின், இதற்காக அரசின் சார்பில் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் சொன்னபோது கூட்டத்தினர் மட்டுமின்றி மேடையில் இருந்தவர்களும் ஒருகணம் வியக்கவே செய்தார்கள்.

காத்திருக்கும் ஓமந்தூரார் வாரிசுகள்!

திண்டிவனத்துக்கு அருகில் உள்ளது ஓமந்தூர். 1947&49 காலகட்டத்தில் தமிழக முதல்வரக இருந்த ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரின் சொந்த ஊரான இங்கே பீமேஸ்வரர் கோயில் என்ற கோயிலை அவரது குடும்பத்தினர் பராமரித்து வருகிறார்கள். 1954&ல் ஓமந்தூரார் இந்த கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தினார். ஆனால்... அதன் பின் போதுமான பொருளாதார வசதி இல்லாததால், அவரது குடும்பத்தினரால் கோயிலை சிறப்பாக பராமரிக்க முடியவில்லை.

ஓமந்தூரார் பெயரைத் தாங்கிய அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகம் பிரமாண்டமாக எழும்பியிருக்கும் இந்த நேரத்தில்... ‘எங்கள் குடும்பத்தின் பராமரிப்பில் உள்ள இந்த கோயிலை புதுப்பித்து பராமரிக்க, தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை உதவி செய்யவேண்டும். பகுத்தறிவுக்குத் தரும் முக்கியத்துவத்தை மத உணர்வுகளுக்கும் தருபவராயிற்றே நம் முதல்வர்’ என உருக்கமாகச் சொல்லி அரசின் பங்களிப்பை இந்த விஷயத்தில் எதிர்பார்க்கிறார்கள் ஓமந்தூராரின் வாரிசுகள்.



பாமரன்


Comments:

No Comments

Post a Comment
User Name:
E-mail:
Comments:
நிர்மூலமான நித்யானந்தா
கமிஷன்... கடத்தில்... பலாத்காரம்..!
தி.மு.க. vs காங்கிரஸ்
அடுத்த என்கவுன்ட்டர் ‘அட்டாக்’ பாண்டி-
தேர் திருவிழாவில் ஹீரோவான பி.ஜே.பி., எம்.எல்.ஏ.!
‘ஒரு ரூபாய் நாணய’ வேட்டைக் கும்பல்!
தோடடக் கலைத் தொழிலாளர்கள்!
குறைவான நிறைகள்; நிறைவான குறைகள்
கலைஞர் கட்டளை:
தென்னவனுக்கு வலைவீசும் அ.தி.மு.க.!
அமைச்சர்கள்... அங்கே அப்படி.!
பயத்தில் பயணகள்; பரிதவிப்பில் தொழிலாளர்கள்!
நிதியில்லாமல் நீதியில்லை!