முதல் பக்கம் | ஆசிரியருக்கு மடல் | முந்தைய இதழ்கள் | தேவதை | திரிசக்தி | முகவரி

 Untitled Document


நெஞ்சம் மறப்பதில்லை - 15
சந்திரபாபுவை நிமிர வைத்த வாலி!



“அழகிய

தமிழ் மகள் இவள்

இரு

விழிகளில்

எழுதிய மடல்

மெல்ல

மொழிவது

உறவெனும் குரல்..”

வார்த்தைக்குச் சிறகுமுளைத்து வானொலி வழியாகப் பறந்து வந்தது. செவிகளில் பதிந்தது. பாடலைக்கேட்டு சிந்தனையில் ஆழ்ந்தார் அவர். உணர்ச்சிப் பிரவாகத்தில் சலசலத்தது அவரது பேச்சு.

“...முத்தையான்னா முத்தையாதான். இந்த உலகத்துலேயே அவன் ஒருத்தன்தான் கவிஞன். எந்தக் கொம்பனாலயும் இப்படி எழுத முடியாது.”

இந்தப் புகழுரைக்-குச் சொந்தக்-காரர் திரை-யுலக மேதை நடிகர் ஜெ.பி.சந்திர-பாபு. இந்தப் பதிவின் இடம் சென்னை ஆழ்வார்-பேட்டை பீமண்ண முதலி-தோட்டத் தெருவின் மாடி இல்லம். அரசனாக வாழ்ந்ததும், ஆண்டி-யாகத் தாழ்ந்ததும் அந்த இல்லத்தில்தான். வாழ்க்கையின் வசதி-களையும் அசதி-களை-யும் சந்தித்ததும் அங்கே-தான். ‘மாடிவீட்டு ஏழை’ என்ற தலைப்பில் பொறுத்தமானதும் அதேதான்.

கவியரசர் கண்ணதாசன் இயற்பெயர் முத்தையா. கண்ணதாசன் தவிர, வேறு எவரையும் கவிஞராக ஏற்றுக் கொள்ளக் கூடிய மனப் பக்குவம் பாபுவிடம் இல்லாமல் இருந்தது ஒரு பெரியகுறை. கவியரசு கண்ணதாசன் தயாரித்து, கதாநாயகனாக பாபு நடித்த ‘கவலையில்லாத மனிதன்’ என்ற திரைப்படத்தால் கவிஞருக்கும் பாபுவுக்கும் ஒரு சில மனஸ்தாபங்கள் அமைந்தது. “தன் குணத்-தா-லேயே தன்னைக் கெடுத்-துக் கொண்ட சந்திரபாபு, என் படத்தையும் கெடுத்து-விட்டார்.”



இவ்வாறு தன் சுய சரிதையில் கவியரசு கண்ணதாசன் பாபுவைப் பற்றி குறிப்பிட்டதற்கு தன்னிலை விளக்கம் ஒன்றை அன்றைய சினிமாப் பத்திரிகையான ‘பிலிமாலயா’வில் பாபு ஒரு கட்டுரையாக எழுதியிருந்தார்.

“கண்ணதாசன் என் இதயத்தைச் சுட்டிருக்கிறார். இந்த வேதனை என்றும் மறையாது. அதற்காக நான் கண்ணதாச-னுக்குப் பாட்டெழுதத் தெரியாது. புத்தகங்-களைப் படித்துவிட்டு திருடி எழுதுகிறார். கவித்துவமே அவருக்குத் தெரியாது என்று சாட மாட்டேன். அந்தத் தமிழுக்கு நான் அடிமை.

இல்லாத கொடுமையில் உன்னிடம் சில சமயங்களில் விஸ்கி கேட்டேன். இவன் தொடர்ந்து நச்சரிப்பானோ என்று நினைக்-கிறாய். அப்படித்தானே முத்து? இந்த அற்புதத் தமிழை, நீ திட்டித் தீர்க்க பயன்-படுத்துகிறாய். அந்தத் தமிழ் இந்த மீனவனுக்-கும் சொந்தமப்பா! நானும் திட்டமுடியும்.

‘தட்டுங்கள் திறக்கப்படும்’ படம் முடிவடையும் போது நீ என்னென்ன செய்தாய்? நான் உனக்கு நண்பர்களாக்கிய ஒரு பிலிம்சாரின் இன்றைய நிலை என்ன? உன்னைப் பற்றி எழுதுவதென்றால் ஆயிரம் கதைகள், ஆயிரம் நிகழ்ச்சிகள் உண்டப்பா. ஆனால் நான் எழுத மாட்டேன்.

உணர்ச்சிகளுக்கிடையே போராடும் உன்மேல், களங்கத்தை ஏற்படுத்த நான் விரும்பவில்லை. நீ திட்டிக் கொண்டே இரு. நான் கேட்டுக்-கொண்டே இருக்கிறேன். இந்த பாபுவின் கதை ஒரு நாள் முடியும். அன்று எனக்காக நீ இரண்டு வரிகள் பாடு. என் ஆத்மா சாந்தியடையும்.

கவியரசு கண்ணதாசனின் அற்புதத் தமிழ் மீது அன்பு கொண்டபாபு, கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் மீது காதலாய் கசிந்தார். கவியரசரின் அபிமான நண்பர் பட்டுக்கோட்டை. அவரது அகால மரணம், கவியரசரின் அகத்தில் ஆறாத வடுவாக அமைந்தது. மனம் உடைந்த நிலையில் இருந்த கவியரசருக்கு பாபுவின் வார்த்தைகளில் ஆதரவாக பிறந்தது.

“ பட்டுக்கோட்டை ஒரு பெரிய மேதை. நல்ல புகழோடு இருக்கும்போதே மறைந்து-விட்டார். இப்ப அவர் போயிட்டாரு. நாம போக வேண்டிய நாளும் வரும். ஆனால் நம்ம மறைவிற்கு பிறகு எல்லாரும் வருந்தி அழ வேண்டும்; நாம் இறந்ததற்காக யாரும் நிம்மதியடையக் கூடாது.”

பாபுவின் இந்தப் பதிவில் இருந்துதான் அருமை-யான தத்துவப் பாடல் ஒன்றை ‘கவலையில்லாத மனிதன்’ படத்திற்காகக் கவியரசரிடம் இருந்து அவதரித்தது.

“ பிறக்கும்போதும் அழுகின்றாய்!

இறக்கும்போதும் அழுகின்றாய்!

ஒரு நாளேனும் கவலையில்லாமல்

சிரிக்க மறந்தாய் மானிடனே”

இந்தப் பாடல்தான் பாபுவின் ஆத்மா சாந்தி-யடைய அன்றே தீர்க்கதரிசனமாக அமைந்து-விட்டதாகத் தோன்றுகிறது. கவியரசர் மீது பதிந்த மதிப்பினால் வானொலியில் ஒலித்த, ‘அழகிய தமிழ் மகள் இவள்...’ என்ற பாடலையும் கவியரசர்தான் எழுதியிருப்பார் என்று நினைத்துப் பேசிய பாபுவின் வார்த்தைகளுக்கு மறுப்புத் தெரிவித்தவன் நான். இருவருக்கும் சற்றே வாக்குவாதம் நீண்டது. ஒலித்த பாடலை படைத்தவர் குறித்து புகழ்ந்தேன். சற்றே மௌனத்தின் பிடியில் பாபு.

அந்தப் பாடலை எழுதியவர் கவிஞர் வாலி என்பதனை என் வாயிலாக அறிந்துகொண்ட பாபுவின் முகத்தில் ஆச்சர்யரேகைகள்.

ஒருமுறை பாபுவே கவிஞர் வாலியின் திறமை குறித்து மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரத்திடம், கவிஞர் வாலியின் திறமையைப் பற்றி தெரிவித்ததற்கு சாட்சியாக அமைவது, கவிஞர் வாலி எழுதிய ‘நானும் இந்த நூற்றாண்டும்’ என்ற வாழ்வியல் நூல்.

கமால் பிரதர்ஸ் என்ற நிறுவனம் தயாரித்த படம் ‘நிமிர்ந்து நில்’ ஏற்கெனவே தயாரித்த ‘புதையல்’ என்ற படத்தில் நடித்திருந்தார் பாபு. அவருக்காகக் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அற்புதமான ஒரு பாடலை அமைத்திருந்தார். பட்டிதொட்டிகளில் எல்லாம் கொட்டி முழக்கிய பாடல் அது.

‘உனக்காக - எல்லாம்

உனக்காக - இந்த

உடலும் உயிரும்

ஒட்டியிருப்பது

உனக்காக...’

பாபுவிடம் இல்லாதது கள்ளம், கபடம். இருந்தது திறமை தீர்க்கம். உள்ளத்துள் உள்ளதை உள்ளபடி சொல்வதுதான் அவருக்கு உடன்பாடு. என்றுமே நிமிர்ந்து நிற்பவர் எவருக்கும் வளைந்து கொடுக்காதவர். ஆனால், மற்றவரிடம் பொதிந்துள்ள திறமையைப் புரிந்து கொண்டால் உள-மாறப் பாராட்டத் தெரிந்த-வர். அந்தப் பாராட்டு எவரெஸ்ட் சிகரத்தின் உச்சிக்குக் கொண்டு-போகும். இவ்வா-றான குணாதிசயங்களை பிறவியிலேயே பெற்ற பாபுவிற்கு ஒரு பாடலைப் படைத்திருந்தார் கவிஞர் வாலி.

‘புடிச்சாலும் புடிச்சேன்-நான்

புளியங்ககொம்பா புடிச்சேன்

நெனைச்சாலும் நெனைச்சேன்-நல்ல

நேரம்பார்த்து நினைச்சேன்

ஒடிச்சாலும் ஒடியாதடி- இது

வளைச்சாலும் வளையாதடி...’

‘நிமிர்ந்து நில்’ படத்தில் பாபுவை காவிய வரிகளால் நிமிர வைத்தவர் கவிஞர் வாலி. பாடல் ஒலிப்பதிவு நடைபெற்ற அன்று மாலை நேரம். ‘ஆனந்த சாந்தி’யில் ஆழ்ந்திருந்தார் பாபு. அப்போது பாபுவிடம் இருந்து உன்னதமான ஓர் வெளிப்பாடு உருவானது.

“...மாபெரும் கவிஞன்தான் வாலி. எப்படிப்பட்ட பல்லவி! சரணத்துலகூட எனக்குத் தகுந்த வார்த்தை-களை போட்டு அசத்-திட்டான். ஆமா, உனக்கு வாலி பழக்கமா?”

பாபு விடுத்த வினாவிற்கு விளைந்தது விடையாக ஒரு புன்னகை என்னிட-மிருந்து. அந்தப் புன்னகைக்-கான பொருளை பாபுவிற்குப் புரிய வைத்தேன். ஆழ்வார்களின் நாலாயிர திவ்யபிரபந்த பாசுரங்களை பாராயணம் செய்ததபோல், கவிஞர் வாலியின் காவிய வரிகள் என்றும் என் சிந்தையிலே, சந்தங்களாகப் பதிவு செய்யப்பட்டிருக்-கிறது. பல்லவிகள் பலவற்றை பாபுவுக்-குப் பாடி காண்பித்தேன். பாபுவின் பார்வை எங்கோ நிலைத்து பின்னர் என் மீது பதிந்தது.

‘...மடக்கவிஞா... நீ எப்போ இப்படியெல்லாம் எழுதப்போற?’

‘கற்பகம்’ படப்பாடல்களை கேட்டு கவிஞர் வாலியை பாராட்டி ஓர் ரசிகனாக இருந்து நான் எழுதி அனுப்பிவைத்த ஒரு கடிதம், அந்த ஒரே கடிதம், அந்தக் கடிதத்தைப் படித்துவிட்டு கவிஞர் வாலி எனக்கு எழுதி அனுப்பிவைத்த ஓர் ‘அஞ்சல் அட்டை’தான் இன்றைய நிலையில் ‘என் முகவரிக்கு’ முத்தாய்ப்பாக அமைந்தது!

*





கலைமாமணி ஸ்ரீ கவி



Comments:

No Comments

Post a Comment
User Name:
E-mail:
Comments:
நமது நிருபரை கடத்திய தி.மு.க.வினர் மீட்டுக் கொடுத்த ஸ்டாலின்!
இது எந்தவகை ஜனநாயகம்?
மீண்டும்திறக்கப்படுமா ‘டன்லப்’ தொழிற்சாலை!
யானையின் மரணமூம் சாமானியனின் சாவும்!
கன்னியாகுமரி கண்ணீர்விடும் சுற்றுலாப் பயணிகள்!
பிரபாகரன் திராவிடர் கழகம் உருவாகும்!
காணாமல் போகும் வைகை!
“கட்சி சொத்தை கைமாற்றிவிட்டார்!”
எண்ணத்தைச் சொல்கிறேன்
“ஓய்வு பெற்றவர்களுக்கே மீண்டும் வேலையா?”
நெல்லை சித்த மருத்துவ மூலிகை ஆராய்ச்சிப் பிரிவு:
விடுதலைப் புலிகளின் இடத்தை நிரப்புவது யார்?
தூங்கும்போது கணவரை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய மனைவி!
தூத்துக்குடியில் புத்துயிர் பெறுமா உப்புத் தொழில்?
கல்லூரிகளை பல்கலைக்கழகங்களாக மாற்றும் திட்டம்: ஏழைகளின் உயர்வல்விக்கு வேட்டு?
நாளெல்லாம் வெடிச்சத்தம் சிக்கித் தவிக்கும் சித்தேரி!
நடவடிக்கை எடுத்த விருது நகர் கலெக்டர்!