முதல் பக்கம் | ஆசிரியருக்கு மடல் | முந்தைய இதழ்கள் | தேவதை | திரிசக்தி | முகவரி

 Untitled Document


நாளெல்லாம் வெடிச்சத்தம்
சிக்கித் தவிக்கும் சித்தேரி!




வேலூரிலிருந்து ஆறு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது சித்தேரி கிராமம். அந்த ஊரில் ஒரு இரவு தங்கி, நிம்மதியாகத் தூங்கினால் ஆயிரம் ரூபாய் பரிசு என்றார் வேலூர் கலெக்டர் அலுவலக நண்பர் ஒருவர்.

அன்று மாலையே கிராமத்திற்கு நாம் விஜயம் செய்தோம். ஊருக்குள் நுழையும் போதே பள்ளியை விட்டு வரும் மாணவர்கள் மூக்கைப் பொத்தியபடி தூசுமண்டலத்தில் ஊடுருவியபடி ஊருக்குள் நுழைந்தனர். சாலையோரம் இருந்த மரங்கள் வெள்ளையடித்ததுபோல் வித்தியாசமாக நிறம் மாறியிருந்தது. ஜல்லி அரவை இயந்திரங்களின் சப்தமும் காதுக்குள் நுழைந்து ரீங்காரமிட்டபடியே இருந்தது.

ஊர் நாட்டாமை கண்ணனை சந்தித்து, ‘ஊருக்குள் என்ன பிரச்னை? ராத்திரியில் தூங்க முடியவில்லை-யாமே? ஏதாவது பேய் பிசாசு இருக்கிறதா?’ என்று சிரித்தபடியே கேட்டோம்.

“நல்லா கேட்டீங்க. இந்த ஊர்ப் பிரச்னைய பற்றி, நான் தனியாகக் கூற முடியாது. ஊர் மக்களைக் கூட்டி தான் பேசமுடியும். இந்த ஊர் எல்லையில இருக்கற குவாரியில காலையில இருந்து நடு ராத்திரி வரைக்கும் வெடி வைப்பாங்க. அதுல வீடுங்க அதிரும். மண்டைக்-குள்ள ரயிலு ஓடுற மாதிரி இருக்கும். அந்த இம்சைதான் இந்த மக்களுக்கு” என்றார்.

மெல்ல நாம் ஊருக்குள் நடந்தோம். எதிரில் வந்த ராமமூர்த்தி என்பவரிடம் குவாரிகளில் வெடி வைப்பதைப் பற்றி கேட்டபோது, நம்மை அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்றார். “நாங்க இப்ப இருக்கிறது புது வீடு. அதோ அதுதான் பழைய வீடு. இப்ப நாங்க இருக்க முடியாத அளவுக்கு மிகவும் மோசமா விரிசல் விட்டுடுச்சு. தினமும் சாயந்தரம் ஆறு மணிக்கு மேல் ஊரே அதிர ஆரம்பிக்கும். சில நேரம் ராத்திரி பன்னிரண்டு மணிவரை தொடரும். ராத்திரியில்கூட நிறைய லோடு லாரிகள் போய்க்கிட்டே இருக்கிறதால ரோடெல்லாம் எப்பவுமே குண்டும் குழியுமாத்தான் இருக்கும்” என்றார்.

தொடர்ந்து நம்மை ஊருக்குள் இருந்த இந்திரா குடியிருப்புப் பகுதிக்கு அழைத்துச் சென்று, “அருகாமையில்தான் குவாரிகள் உள்ளன, அதன் பாதிப்புகளை இப்பகுதியில் வசிப்பவர்களிடம் நீங்களே கேளுங்கள்” என்றும் கூறினார்.

அங்கிருந்த 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அனைவரும் நம்மை சூழ்ந்துகொண்டு “எவ்வளவோ பேர் வந்து படமெடுத்துக்கொண்டு போகிறார்கள். ஆனால் விடிவுதான் இல்லை. உங்கள் மூலமாக நல்லது நடக்குமா?” என்று ஏக்கத்துடன் கேட்டார்கள்.

ஊருக்குள் எல்லா வீடுகளிலும் கூரை உதிர்ந்து, சுவர்கள் விரிசல் விட்டு பார்க்கவே மிகவும் மோசமாகக் காட்சியளித்தது.

அப்பகுதியின் கவுன்சிலர் லலிதா நம்மிடம் பேச முன் வந்தார். “இங்கு அரசாங்கம்-தான் எங்களுக்கு வீடுகளை வழங்கியது. அதே அரசாங்கம்-தான் தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் குவாரிகளை அமைத்துக்-கொள்ள வழி செய்துள்ளது. சிலசமயம் பகலில் வெடி வைத்தும், எல்லா நாட்களிலும் இரவு நேரங்களில் வெடி வைத்து ஊரையே கிடு கிடுக்க வைக்கிறார்கள் குவாரி நடத்து-கிறவர்கள். உறக்கம் என்பது பகலில் நேரம் கிடைக்கும்போது உறங்கினால் தான். இரவு நேர உறக்கம் என்பது எங்களுக்கு இல்லை. பலமுறை அதிகாரிகளுக்கு நாங்கள் இப்பிரச்-னையை புகாராகக் கொடுத்தும்கூட பலனில்லை. எப்பதான் எங்களுக்கு விடிவு வருமோ?” என்றார் வேதனையுடன்.

அடுத்ததாக நம்மிடம் பேசிய ஊரின் மூத்த குடிமகன் கே.கே.பெருமாள் என்பவர், “நாங்கள் பெரும் போராட்டத்தை நடத்தித்தான் இந்த இடத்தில் வீடு கிடைத்தது. அதற்குப் பிறகு மெல்ல இப்பகுதிக்குள் நுழைந்த குவாரி முதலாளிகள், குத்தகை என்ற பெயரில் தனி ராஜாங்கமே நடத்தி, எங்கள் சித்தேரி கிராமத்தையே சீரழித்து வருகின்றனர். யாராவது எதிர்த்துக் கேட்டால் அவர்களுக்கு மிரட்டல் வரும், அல்லது அடி கிடைக்கும். அந்த அளவுக்கு குவாரிகாரர்கள் பெரும் ரவுடித்தனம் செய்து வருகின்றனர். கடைசி காலத்தை அமைதியாகக் கழிக்க ஆசை. செத்த பிறகுதான் வெடி போடுவார்கள். ஆனால், உயிருடன் இருக்கும் போதே, வெடிச் சத்தங்களைக் கேட்டுக் கேட்டு சாக வேண்டி இருக்கிறது” என்று அழாத குறையாகப் பேசினார்.

“குவாரியில் வெடிவைத்தால் வெடித்துச் சிதறும் கற்கள் எங்கள் வீடுகளின் மேல் வந்து விழுகிறது. ராத்திரி நேரங்களில் வெடிகள் வெடிப்பதால் குழந்தைகள் அலறுகின்றனர்.(நாம் பேசிக்கொண்டிருக்-கும் போதே வெடித்துச் சிதறிய பாறைத்துண்டு ஒன்று அருகிலுள்ள தண்டவாளத்தில் விழுந்த சப்தம் கேட்டது) சாப்பாடு செய்யும்போது பாத்திரங்கள் ஆடும். கதவுகள் கிடுகிடுக்கும். அந்தளவுக்குப் பயங்கரமாக வெடி வைக்கிறார்கள். இது எல்லா-வற்றையும் விட சொந்தக்-காரர்கள் எங்கள் ஊருக்கு வரவே பயப்படு-கிறார்-கள். அப்படியே வந்தாலும் இரவு தங்காமல் மாலையானதும் பறந்து விடுகிறார்கள். காரணம், வெடிச் சத்தம்தான்” என்றனர் அங்கிருந்த பெண்கள்.

மெதுவாக குவாரிப்-பகுதிக்-குள் நுழைந்தோம். முதலில் நம்மை வரவேற்றது ஜல்லி அரவை இயந்திரங்கள்தான். அவை எழுப்பும் பெரும் சத்தத்-தையும் தூசு மண்டலத்-தையும் கடந்து சென்றபின் திடீரென திரைப்படமாக நம் முன் விரிந்தது படு பயங்கரமான ராட்சத குவாரி பள்ளங்கள். பெரும் மலைகளை கொண்டுவந்து போட்டாலும் அதை மூட முடியாதுபோல் தோற்றம் கொண்ட பள்ளங்களில் நின்றிருந்த லாரிகளில் பாறை சக்கைகளை சிலர் ஏற்றிக் கொண்டிருந்தனர்.

கண்ணில் கண்டவற்றை படமெடுக்க முயன்றபோது, திடீரென ஐந்தாறு பேர் சூழ்ந்துகொண்டு கேள்வி-யால் துளைத்து, முதலாளி அனுமதியின்றி உள்ளே வந்து படமெடுப்பது தவறு எனவும், மீறினால் முதலாளியிடம் இழுத்துப் போவோம் என மிரட்டும் தொனியில் பேசினர். படம் எடுக்கவேயில்லை என்று சொல்லி சமாளித்து வெளியேறினோம்.

இதுகுறித்து மாவட்ட சுரங்கம் மற்றும் புவியியல் துறை இணை இயக்குனர் அய்யாத்துரையைச் சந்தித்தோம்.

‘பொது மக்களுக்கு இடையூறு தரும் வகையில் குவாரி முதலாளிகள் வெடி வைப்பதால், சித்தேரி கிராமமே மக்கள் வாழத் தகுதியிழந்த கிராமமாகி வருவதாகச் சொல்கிறார்களே?’ என்று கேட்டோம். “நீங்கள் கூறுவதுபோல் அங்கு பிரச்னை ஏதுமில்லை. வெடி வைப்பது பற்றி புகார் வந்துள்ளது. வெடி வைக்கக் குறிப்பிட்ட அளவுக்குள் மருந்தைப் பயன் படுத்துகிறார்களா என கண்காணிக்க அதிகாரிகள் உள்ளனர். அதேபோல் மாலை 6- 8 மணிக்குள் வெடி வைக்கிறார்கள். இரவு முழுதும் வெடி வைப்ப-தில்லை. காவல் துறையும் அவர்களை அவ்வப்போது சென்று சோதனை செய்கின்றனர். குறிப்பிட்ட இருபதுமீட்டர் அளவு மட்டுமே குவாரி எடுத்து பாறையை உடைக்கின்றனர். வீடுகள் பழையது. அதனால்தான் கூரைகள் பெயர்ந்து போகிறது. மற்ற ஊர்களைவிட இங்கு குறைந்த அளவுதான் பள்ளம் எடுத்துள்ளனர்” என்றார் அய்யாத்துரை.

நாம் விசாரித்த வரையில், சித்தேரி கிராமத்துக்கு அதிகாரிகளும் செல்வதில்லை. ஊர் மக்களுக்கும் எதிர்த்து கேட்க பயம். யாருமே கேட்க ஆளில்லாத-தால்-தான், குவாரிகாரர்கள் வைத்ததுதான் சட்டம் என சித்தேரி கிராமம் சீரழிகிறது. பகலில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் வெடி வைக்க அதிகாரிகள் அனுமதித்தால் சித்தேரிக்கு ஒரு சிரமம் இல்லை. மாலை நேரத்தில் சித்தேரிக்கு அதிகாரிகள் தைரியமாகச் சென்றால் போதும்... பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும் !

*





பி.ஆர்.ஆனந்த்ராஜ்



Comments:

No Comments

Post a Comment
User Name:
E-mail:
Comments:
நமது நிருபரை கடத்திய தி.மு.க.வினர் மீட்டுக் கொடுத்த ஸ்டாலின்!
இது எந்தவகை ஜனநாயகம்?
மீண்டும்திறக்கப்படுமா ‘டன்லப்’ தொழிற்சாலை!
யானையின் மரணமூம் சாமானியனின் சாவும்!
கன்னியாகுமரி கண்ணீர்விடும் சுற்றுலாப் பயணிகள்!
பிரபாகரன் திராவிடர் கழகம் உருவாகும்!
காணாமல் போகும் வைகை!
“கட்சி சொத்தை கைமாற்றிவிட்டார்!”
எண்ணத்தைச் சொல்கிறேன்
“ஓய்வு பெற்றவர்களுக்கே மீண்டும் வேலையா?”
நெல்லை சித்த மருத்துவ மூலிகை ஆராய்ச்சிப் பிரிவு:
விடுதலைப் புலிகளின் இடத்தை நிரப்புவது யார்?
தூங்கும்போது கணவரை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய மனைவி!
தூத்துக்குடியில் புத்துயிர் பெறுமா உப்புத் தொழில்?
கல்லூரிகளை பல்கலைக்கழகங்களாக மாற்றும் திட்டம்: ஏழைகளின் உயர்வல்விக்கு வேட்டு?
நாளெல்லாம் வெடிச்சத்தம் சிக்கித் தவிக்கும் சித்தேரி!
நடவடிக்கை எடுத்த விருது நகர் கலெக்டர்!