முதல் பக்கம் | ஆசிரியருக்கு மடல் | முந்தைய இதழ்கள் | தேவதை | திரிசக்தி | முகவரி

 Untitled Document

தூத்துக்குடியில்
புத்துயிர் பெறுமா உப்புத் தொழில்?
-எதிர்பர்ப்பில் உற்பத்தியாள்ர்கள்



உப்பில்லாப் பண்டம் குப்பையிலே” என்பது பழமொழி. எவ்வளவு சுவையான உணவானாலும் அதற்கு உயிர் கொடுப்பது உப்புதான். தற்போது குஜராத் உப்பு தூத்துக்குடிக்கு இறக்குமதியாவதால் இங்கு உப்புத் தொழிலே உயிரற்றுப் போகும் நிலை ஏற்பட்டுள்ளதுதான் வேதனைக்குரியது.

தற்போது போதுமான அளவு உ

ற்பத்தி இல்லாததாலும் உற்பத்தியான உப்புக்கு நல்ல விலை கிடைக்காததாலும், இத்தொழில் நலிவடைந்து வருகிறது. இந்தியாவிலேயே குஜராத்திற்கு அடுத்தபடியாக தூத்துக்குடியில்தான் உப்பு அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 25ஆயிரம் ஏக்கர் பரப்பில் உப்பளங்கள் உள்ளன. இங்கு ஆண்டொன்றிற்கு முப்பது லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.

இத்தொழிலின் மூலம் நேரடியாக இருபத்தைந்தாயிரம் தொழிலாளர்-களும் மறைமுகமாக ஐம்பதாயிரம் தொழிலாளர்களும் பயன்பெற்று வருகின்றனர். மேலும் தூத்துக்குடியில் துறைமுகம் உள்ளதால் இங்கு உற்பத்தியாகும் உப்பு இந்தோனேசியா, மலேசியா, இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்குக் கப்பல் மூலம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த அளவிற்கு உற்பத்தி இருந்த போதும், தற்போது குஜராத்திலிருந்து தூத்துக்குடி துறைமுகத்தில் கப்பல் மூலம் உப்பு இறக்குமதி செய்யப்படுகிறது. கடந்த 31-ம் தேதி இருபத்துநான்காயிரம் டன் உப்பு கப்பல், தூத்துக்குடி துறைமுகத்தின் 8-வது கப்பல் தளத்திற்கு வந்து சேர்ந்தது. தூத்துக்குடி என்றாலே உப்புதான். ஆனால் ஏன் வெளிமாநிலத்தில் இருந்து இங்கு இறக்குமதியாகிறது? இதற்கான காரணம் என்ன? விசாரித்தோம்.

காந்தி இர்வின் உப்பு உற்பத்தியாளர்கள் சங்கத்தலைவர் எம்.எஸ்.ஏ.பீட்டர் ஜெபராஜைச் சந்தித்தோம். “கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு குஜராத்தில் இருந்து உப்பு இறக்குமதி செய்யப்பட்டது. நீண்ட இடைவெளிக்குப் பின் தற்போது குஜராத்திலிருந்து உப்பு இறக்குமதியாகி உள்ளது. இந்த உப்பு இறக்குமதியாகும்போது தூத்துக்குடியில் தேவையான அளவு உப்பு உற்பத்தி செய்யப்பட்டு விட்டதால், இங்கு உற்பத்தியாகும் உப்பின் விலை ஒரு டன்னுக்கு ஆயிரத்து ஐநூறு ரூபாயாக ஆகிவிட்டது. இதனால் குஜராத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உப்பினால் பெரிய அளவில் பாதிப்பு ஒன்றும் கிடையாது. மேலும் தூத்துக்குடியில் இயங்கிவரும் டாக் தொழிற்சாலைக்கு ஆண்டொன்றிற்கு 2.5 லட்சம் டன் உப்பு தேவைப்படும். ஆனால் தற்போது இத் தொழிற்சாலை இயங்காததால் உற்பத்தி-யாளர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் மழை, தொழிலாளர்கள் பற்றாக்குறை, தொழிலாளர்கள் வேலை நிறுத்தம், உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இத்தொழில் தொடர்ந்து நலிவடைந்து வருகிறது.

உப்பு உற்பத்தியாகும் விளை நிலங்களின் மதிப்பு அதிகமானதால், ஒருசில உப்பு உற்பத்தியாளர்கள் தங்களது நிலத்தில் குடோன், சேமிப்புக் கிடங்கு உள்ளிட்டவைகளை அமைத்துவிடுகின்றனர். ஒருசிலர் நிலங்களை விற்பனை செய்துவிடுகின்றனர்.

எனவே, இத்தொழிலை ஊக்குவிப்பதற்கு மத்திய அரசின் உப்பு இலாகாவின் கீழ் உள்ள இடங்கள் எங்கு உள்ளது என்று சர்வே எடுத்து, பத்திரிகை வாயிலாக விளம்பரம் செய்து உப்பு உற்பத்தி செய்ய அந்த நிலத்தை குத்தகை அடிப்படையில் உப்பு உற்பத்தியாளர்களுக்கு வழங்க வேண்டும். மேலும் தமிழக அரசு விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்குவதுபோல், உப்பு உற்பத்தியாளர்களுக்கும் இலவச மின்சாரம் வழங்க வேண்டும். எங்களது கோரிக்கையை ஏற்கெனவே தமிழக முதல்வருக்குத் தெரிவித்துவிட்டோம். இந்த ஆண்டிற்குள் உப்பு உற்பத்தியாளர்களுக்குத் தமிழக முதல்வர் இலவச மின்சாரம் வழங்குவார் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறோம்” என்றார் அவர்.

தொடர்ந்து உப்பு உற்பத்தியாளர் பேச்சிமுத்துவைச் சந்தித்தோம். “தூத்துக்குடியில் உற்பத்தி செய்யப்படும் உப்பு டன் ஒன்று இரண்டாயிரத்து நாநூறு ரூபாய் ஆனால் குஜராத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பு, கப்பல் மூலம் இறக்குமதி செய்யப்பட்டு டன் ஒன்று இரண்டாயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இந்த உப்பைக்கொண்டு தயாரிக்கப்படும் ‘ப்ரிப்ளோர் உப்பு’, ‘பவுடர் உப்பு’ போன்றவை தயாரிக்க, தூத்துக்குடி உப்பைவிட குஜராத் பருமணி உப்பு நல்ல தரமாக இருப்பதாலும், டன் ஒன்றுக்கு நாநூறு ரூபாய் வரை விலை குறைவாக இருப்பதாலும் குஜராத் உப்பை அனைத்து உப்பு வியாபாரிகளும் விரும்பி வாங்குகின்றனர். குஜராத்தில் உப்பு விலை மிகவும் குறைவாக இருப்பதாலும் குறைந்த கப்பல் கட்டணத்தாலும் குஜராத் துறைமுகத்திலிருந்து மிக எளிதாக தூத்துக்குடிக்கு உப்பு கொண்டு வரமுடிகிறது.

உப்பு உற்பத்தி செய்வதற்கு குஜராத்தில் நவீன கருவிகள் உள்ளன. அதேசமயம் அந்தக் கருவிகளை தூத்துக்குடியில் பயன்படுத்த முடியாது. காரணம், குஜராத்தில் உப்பளங்கள் பல நூறு ஏக்கர் பரப்பளவில் உள்ளது. அதனால் இயந்திரங்கள் பயன்படுத்துவது சாத்திய-மாகிறது. அதேசமயம் தூத்துக்குடியில் உள்ள உப்பளங்கள் சிறிய பரப்பளவை கொண்டுள்ளது. இதனால் இங்கு நவீன இயந்திரங்கள் பயன்படுத்துவது சாத்தியமாகாது முழுக்க முழுக்க வேலையாட்களை நம்பித்தான் இருக்க வேண்டும். முந்தைய காலத்தைப் போன்று வேலைக்கு ஆட்கள் போதுமான அளவு கிடைப்பதில்லை. காரணம், இத்தொழிலில் ஈடுபட்டு வந்தவர்களின் அடுத்த தலைமுறையினர் கல்வி கற்று வேறு வேலைக்குச் சென்று-விடுகின்றனர். கல்வி இல்லாதவர்கள்கூட டிரைவர், தொழிற்சாலையில் ஒப்பந்தத் தொழிலாளர் போன்ற வேலைக்குச் சென்று விட்டனர். இதனால் சில நேரங்களில் உப்புக்கு நல்ல விலை இருந்தும் உற்பத்தி செய்ய ஆள் இல்லாமல் நஷ்டமாகி விடுகிறது.

வருடத்திற்கு நான்கு மாதம் மழையின் காரணமாக உற்பத்தி பாதிக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு எட்டு மாதம் மழை வாட்டி வதைத்துவிட்டது. இதன் காரணமாகப் போதுமான அளவு உப்பு உற்பத்தி செய்யமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டோம். இதனால் எங்கள் தொழில் நலிவடைந்து வருகிறது. அரசு, பொறியியல் கல்லூரி மாணவர்களை தூத்துக்குடியில் உள்ள உப்பளங்களுக்கு அனுப்பி இந்த நில வடிவமைப்பிற்கு ஏற்ப நவீன இயந்திரங்களை கண்டுபிடித்து சந்தைபடுத்தவேண்டும்” என்றார் நம்மிடம்.

படிப்படியாக நலிவடைந்து வரும் இத்தொழிலை நவீனமயமாக்கினால் மட்டுமே புத்துயிர் பெறும். மத்திய மாநில அரசுகள் அதற்கு நடவடிக்கை எடுக்குமா? என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள் உப்பு உற்பத்தி-யாளர்களும், இத்தொழில் சார்ந்த தொழிலாளர்களும்.

*





பி.எம்.கணேஷ்



Comments:

No Comments

Post a Comment
User Name:
E-mail:
Comments:
நமது நிருபரை கடத்திய தி.மு.க.வினர் மீட்டுக் கொடுத்த ஸ்டாலின்!
இது எந்தவகை ஜனநாயகம்?
மீண்டும்திறக்கப்படுமா ‘டன்லப்’ தொழிற்சாலை!
யானையின் மரணமூம் சாமானியனின் சாவும்!
கன்னியாகுமரி கண்ணீர்விடும் சுற்றுலாப் பயணிகள்!
பிரபாகரன் திராவிடர் கழகம் உருவாகும்!
காணாமல் போகும் வைகை!
“கட்சி சொத்தை கைமாற்றிவிட்டார்!”
எண்ணத்தைச் சொல்கிறேன்
“ஓய்வு பெற்றவர்களுக்கே மீண்டும் வேலையா?”
நெல்லை சித்த மருத்துவ மூலிகை ஆராய்ச்சிப் பிரிவு:
விடுதலைப் புலிகளின் இடத்தை நிரப்புவது யார்?
தூங்கும்போது கணவரை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய மனைவி!
தூத்துக்குடியில் புத்துயிர் பெறுமா உப்புத் தொழில்?
கல்லூரிகளை பல்கலைக்கழகங்களாக மாற்றும் திட்டம்: ஏழைகளின் உயர்வல்விக்கு வேட்டு?
நாளெல்லாம் வெடிச்சத்தம் சிக்கித் தவிக்கும் சித்தேரி!
நடவடிக்கை எடுத்த விருது நகர் கலெக்டர்!