முதல் பக்கம் | ஆசிரியருக்கு மடல் | முந்தைய இதழ்கள் | தேவதை | திரிசக்தி | முகவரி

 Untitled Document


நெல்லை சித்த மருத்துவ மூலிகை ஆராய்ச்சிப் பிரிவு:
தனியாருக்கு தாரை வார்க்க முடிவு!



தமிழர்களின் மருத்துவமான சித்த மருத்துவத்தை தமிழகத்தில் கற்றுத் தர இரண்டே சித்த மருத்துவக் கல்லூரிகள்தான் உள்ளன. ஒன்று சென்னையிலும், மற்றொன்று பாளையங்-கோட்டையிலும் இருக்கிறது. தற்பொழுது பாளையங்கோட்டையில் உள்ள சித்த மருத்துவக் கல்லூரியில் உள்ள மூலிகை ஆராய்ச்சிப் பிரிவு மற்றும் சித்த மருத்துவ ஆராய்ச்சிப் பிரிவு ஆகியவற்றை வேறு இடங்களுக்கு மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்கள் இதை எதிர்க்க, 24 மாணவர்களை சஸ்பெண்ட் செய்தது நிர்வாகம். அவர்களை சஸ்பெண்ட் செய்தது தவறு என்று பட்ட மேற்படிப்பு மாணவர்களும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில் சித்த மருத்துவக் கல்லூரி மாணவர் சங்கத் தலைவர் திருவள்ளுவனைச் சந்தித்துப் பேசினோம்.

“சித்த மருத்துவக் கல்லூரி மாணவர்-களுக்கு மட்டுமல்லாது தாவரவியல் மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், விவசாயிகள் போன்றவர்களுக்குப் பயன்படும் மூலிகை ஆராய்ச்சிப் பிரிவு மற்றும் சித்த மருத்துவ ஆராய்ச்சிப் பிரிவு (இவை இரண்டும் மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் கீழ் வருபவை) ஆகியவற்றை தனியார் பல்கலைக் கழகத்திற்கு மாற்றக் கூடாது.

25 ஆண்டுகளுக்கு மேலாக சித்த மருத்துவக் கல்லூரி வளாகத்திற்குள் செயல்பட்டு வரும் இப்பிரிவில், ஏறத்தாழ 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உலர் தாவர தொகுப்புகளும் (ஹெர்பேரியம்) இரண்டாயிரம் தாவர மாதிரிகளும் சேகரிக்கப்-பட்டுள்ளன. கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்திற்குப் பெருமை சேர்க்கும் பொதிகை மலையிலுள்ள ஆயிரக்கணக்கான தாவர வகைகளை இனம் கண்டறிந்து, பதிவு செய்துள்ளனர். இதுபோன்ற பல சிறப்புக்களை உடைய பிரிவை ஒரு சிலரின் சுய லாபத்திற்காகத் தனியார் கல்லூரிக்குத் தாரை வார்க்கின்றனர். இதைத் தடுக்கப் போராடி வருகிறோம்.

மேலும் தமிழ்-நாட்டில் சித்த மருத்துவத்-திற்கென்று தனியாக ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் கிடையாது. தமிழ்நாட்டிலுள்ள ஆயிரத்திற்கும் மேலான ஆரம்ப சுகாதார நிலையங்களில் 390 ஆரம்ப சுகாதார நிலையங்களில் மட்டுமே சித்த மருத்துவப் பிரிவு உள்ளது. இதனால் தமிழர்களின் மருத்துவ முறையான சித்த மருத்துவத்தைத் தமிழ் மக்கள் பெற முடியாத நிலைமை உள்ளது. இந்நிலையை மாற்றத்தான் நாங்கள் போராடி வருகிறோம். இந்நிலையில் விடுதியை மூடி, எங்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி வருகின்றனர். ஆனாலும் எங்கள் போராட்டம் தொடரும்” என்றார்.

இதுகுறித்து கல்லூரி முதல்வர் (பொறுப்பு) டாக்டர் சௌந்திர ராஜனிடம் பேசினோம்.

“மாணவர்களின் போராட்டம் காரணமாக கல்லூரி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. முறையான அனுமதி பெறாமல் கல்லூரி வளாகத்திற்குள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 24 மாணவர்களை சஸ்பெண்ட் செய்துள்ளோம். இங்கு நடக்கும் விஷயங்கள் அனைத்தும், அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அரசின் உத்தரவிற்கு ஏற்ப செயல்படுவோம்” என்றார்.

இவர்களின் போராட்டத்திற்கு, ஆதரவு தெரிவித்து வரும் நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் ராமசுப்புவிடம் பேசினோம்.

“இந்த ஆராய்ச்சிப் பிரிவுகள் மத்திய சுகாதாரத் துறையின் கீழ் வருவதால் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் மற்றும் தேசிய சுகாதாரத் துறை செயலரிடம் இதுகுறித்து பேசியுள்ளேன். முறைப்படி கடிதங்களையும் அனுப்பியுள்ளேன். நிச்சயம் நல்ல முடிவு கிடைக்கும். அதுவரை என் முயற்சிகள் தொடரும்” என்றார்.

பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினரும் தமிழக சுற்றுச் சூழல் அமைச்சருமான டி.பி.எம்.மைதீன் கானிடம் பேசினோம்.

“பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் இந்த ஆராய்ச்சி மையங்களை மாற்றம் செய்யக்கூடாது என்று சித்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள், சித்த மருத்துவர்கள், பொதுமக்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர். இதை மத்திய சுகாதாரத் துறை அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளேன். பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரியில் விரிவாக்கம் செய்ய போதிய இட வசதி இல்லை. மாணவர்கள் விடுதி, வண்ணார்-பேட்டை பகுதியில் உள்ளது. ஒருங்கிணைந்த சித்த மருத்துவக் கல்லூரி வளாகம் உருவாக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையிலே குறிப்பிட்டிருந்-தோம். சித்த மருத்துவம் நமது மருத்துவம். அதனை கட்டிக் காப்பது நமது கடமை. அதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்” என்றார்.

சித்த மருத்துவக் கல்லூரி மாணவர்களின் போராட்டத்திற்கு, வழக்கறிஞர்கள் சங்கம், தே.மு.தி.க. போன்றவை ஆதரவு தெரிவித்து, களத்தில் குதித்துள்ளன. தே.மு.தி.க.வின் கிழக்கு மாவட்டச் செயலாளர் கணேஷ்குமார் ஆதித்தன் நம்மிடம் பேசினார். “சித்த மருத்துவம், நம்முடைய மருத்துவமுறை. இதற்கு உலக அளவிலான அங்கீகாரம் இன்றுவரை வழங்கப்படவில்லை. இதனை மாற்றி, உலக அளவில் அங்கீகாரம் பெற்ற மருத்துவ முறையாக, சித்த மருத்துவ முறையையும் உருவாக்கவேண்டும். சித்த மருத்துவத்திற்குக் கூடுதலாகக் கல்லூரிகள் வேண்டும். சித்த மருத்துவர்களுக்கு உடனடியாக வேலைவாய்ப்-பையும் வழங்கவேண்டும். ஏழை, எளிய மக்களுக்கு சித்த மருத்துவத்தின் பலன் கிடைக்கவேண்டும். இதையெல்லாம் செய்வதை விட்டுவிட்டு, பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் ஆராய்ச்சிப் பிரிவை தனியாருக்குத் தாரைவார்ப்பது, எவ்வகையில் நியாயம்? இதைக் கண்டித்து விரைவில் தே.மு.தி.க.வின் சார்பில் போராட்டம் நடக்கும்” என்றார்.

ஆங்கிலத்தை ஏற்றுக்கொண்டோம். பக்க விளைவுகளைத் தரும் ஆங்கில மருத்துவ முறையை பக்காவாக ஏற்றுக் கொண்டோம். எவ்வித பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாத, நமது பாரம்பரிய சித்த மருத்துவ முறைக்கு என்ன செய்யப் போகிறோம்?



*





பாலா



Comments:

No Comments

Post a Comment
User Name:
E-mail:
Comments:
நமது நிருபரை கடத்திய தி.மு.க.வினர் மீட்டுக் கொடுத்த ஸ்டாலின்!
இது எந்தவகை ஜனநாயகம்?
மீண்டும்திறக்கப்படுமா ‘டன்லப்’ தொழிற்சாலை!
யானையின் மரணமூம் சாமானியனின் சாவும்!
கன்னியாகுமரி கண்ணீர்விடும் சுற்றுலாப் பயணிகள்!
பிரபாகரன் திராவிடர் கழகம் உருவாகும்!
காணாமல் போகும் வைகை!
“கட்சி சொத்தை கைமாற்றிவிட்டார்!”
எண்ணத்தைச் சொல்கிறேன்
“ஓய்வு பெற்றவர்களுக்கே மீண்டும் வேலையா?”
நெல்லை சித்த மருத்துவ மூலிகை ஆராய்ச்சிப் பிரிவு:
விடுதலைப் புலிகளின் இடத்தை நிரப்புவது யார்?
தூங்கும்போது கணவரை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய மனைவி!
தூத்துக்குடியில் புத்துயிர் பெறுமா உப்புத் தொழில்?
கல்லூரிகளை பல்கலைக்கழகங்களாக மாற்றும் திட்டம்: ஏழைகளின் உயர்வல்விக்கு வேட்டு?
நாளெல்லாம் வெடிச்சத்தம் சிக்கித் தவிக்கும் சித்தேரி!
நடவடிக்கை எடுத்த விருது நகர் கலெக்டர்!