“ஓய்வு பெற்றவர்களுக்கே மீண்டும் வேலையா?”
-வேலை இல்லா பட்டதாரிகளின் கொதிப்பு

கடந்த மாதம் தமிழக அரசிடமிருந்து வேலை இல்லா பட்டதாரிகளுக்குக் கசப்பான செய்தி ஒன்று வெளியானது. அதுவே மிக இனிப்பான செய்தியாக ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு அமைந்துவிட்டது. ஒரே நேரத்தில் கசப்பை ஒரு சாரார்க்கும், இனிப்பை இன்னொரு சாராருக்கும் வழங்கி அதிர்ச்சியையும், மகிழ்ச்சியையும் உண்டாக்கியது தமிழக அரசின் அந்த அறிவிப்பு. ‘தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் பணியாளர்களாக இனி ஓய்வு பெற்றவர்களே நியமிக்கப்படுவார்கள்!’ என்பதுதான் அந்த அறிவிப்பின் முக்கிய அம்சம்.
தமிழகத்தில் ஏற்கெனவே வேலை இல்லா பட்டதாரிகள் சுமார் அறுபது லட்சம் பேர் வருமானம் ஏதும் இல்லாமல் வறுமையில் உழலும் நிலையில், அரசின் அறிவிப்பு எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றி விட்டதாக, பட்டதாரிகள் கருதுகிறார்கள். தவிர, இனி வேலையில் சேரும் ஓய்வுபெற்ற பட்டதாரிகளும் எந்த ஓர் அரசு ஊழியர் சங்கங்களிலும் சேரக் கூடாது என அரசு தடுப்பது, அடிமை நிலையை நோக்கிப்போவதுதான் என்ற கருத்தும் நிலவுகிறது.
இதுபற்றிய மேலும் சில விளக்கங்களை அறிய தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில பொதுச்-செயலாளர் முத்துசுந்தரத்தைச் சந்தித்துக் கேட்டோம். “தமிழக அரசில் துறை தொகுப்பூதியம், மதிப்பூதியம், ஒழிக்கப்படும் என்றும், ஒப்பந்த நியமன முறை கைவிடப்படும் என்றும், தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. அரசுத் துறைகளில் வேலை வழங்கப்படாத நபர்களுக்குத் தேர்வுகள் நடத்தி, நபர்களை தேர்வு செய்வதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 103 காலியிடங்-களில் ஓய்வு பெற்றவர்களை, தொகுப்-பூதிய முறையில் நியமனம் செய்துகொள்ள தமிழக அரசு அனுமதித்துள்ளது. இதனை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. ஏனெனில் லட்சக்கணக்கான படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்புகளை எதிர்நோக்கி காத்திருக்கும் நிலையில் அவர்கள் வாழ்வாதாரத்திற்கான வேலை வாய்ப்பை வழங்கா-மல், ஏற்கெனவே பணியாற்றி ஓய்வு-பெற்றவர்-களை நியமனம் செய்வ தென்பது எந்த விதத்திலும் நியாயமானதல்ல!
இரண்டாவதாக, ஓய்வுபெற்றவர்கள் பணியமர்த்தப் படும் நிலையில் அவர்களைவிட, பல்லாண்டுகாலம் பணியில் இளையவர்களிடம் வேலை செய்யும் நிலை உருவாகும்போது, அலுவலக நடைமுறையில் அது பல்வேறு சிக்கல்களை உருவாக்கும். மேலும், அளித்த வாக்குறுதிக்கு மாறாக அரசுப்பணியில் ஒப்பந்த நியமனத்தையும், கொத்தடிமை கூலி முறையான தொகுப்பூதியத்தையும் தொடர்வது என்பதும், ஏற்கத்தக்கது அல்ல. ஆகவே,அரசு அந்த அனுமதியை திரும்பப் பெற்றுக்கொண்டு தமிழ்நாடு அரசுப் பணி-யாளர் தேர்வாணையம் உள்ளிட்ட அரசுத் துறை-களில் காலியாக உள்ள அனைத்துப் பணியிடங்-களிலும் முறை-யான ஊழியர்களை நியமனம் செய்ய வேண்டுமென அரசு ஊழியர் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்” என்றார் அவர்.
நாம் இது குறித்து டி.என்.பி.எஸ்.சி. சேர்மன் காசிவிஸ்வநாதனை சந்தித்து விளக்கம் பெற, சென்னை அரசினர் தோட்டத்திலுள்ள அவரது அலுவலகம் சென்றோம். அவர் வெளியூர் சென்றிருப்பதாகத் தகவல் சொன்னார்கள்.
வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து-விட்டு அறுபத்தோரு லட்சம் பேர் வருமான-மில்லாமல் காத்திருக்கிறார்கள். ஆனால் வேலை பார்த்து, ஓய்வு பெற்று, மீதி வாழ்க்கையை நடத்து-வதற்கு ஓய்வூதியம் என்ற பெயரில் ஒரு வருமானத்-தைப் பெற்றுக் கொண்டிருப்பவர்களுக்கு மீண்டும் வேலை வழங்கு-வது, வேலை வழங்கப்படாதவர்களின் எதிர்-காலத்தை இருட்டாக்கிவிடும். அரசு ஊழியர்கள் மேல் எப்-போதும் அளவற்ற கரிசனம் காட்டும் தி.மு.க. அரசு, அரசுப் பணியாளர் தேர்வாணைய விஷயத்தில் மட்டும் நேர்மாறாக நடந்துகொண்டது ஆச்சரியமான விஷயம்தான்!
*
‘
ஜி குமரகுரு
|