“கட்சி சொத்தை கைமாற்றிவிட்டார்!”
-தி.மு.க. ஒன்றியச் செயலாளர் மீது பகிரங்கப் புகார்

ஒவ்வோர் அரசியல் கட்சியும் தங்களுக்கென்று தலைமை அலுவலகம் மாவட்ட அளவில், நகர அளவில், ஒன்றிய அளவில் அலுவலகம் வைத்து செயல்படுவது தெரிந்த விஷயம்தான். அதில் பல அரசியல் கட்சிகள் நன்கொடை வசூலித்து இடம் வாங்கி பெரிய அளவிலோ சிறிய அளவிலோ தங்கள் கட்சிக்கு அலுவலகம் கட்டி அலுவலகத்தைச் சார்ந்து சில கடைகளையும் கட்டி வாடகைக்கு விட்டு கட்சி வளர்ச்சிக்குப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
இடம் வாங்குவது, அலுவலகம், கடைகள் கட்டுவது கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் பொறுப்பு. ஆனால், இடமும் கட்டப்பட்ட கட்டடமும் கட்சிக்குச் சொந்தமாகிவிடும். அதில், தமிழகத்தின் பிரதான கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க.வில் ஆங்காங்கே கட்சி அலுவலகம் கட்டும் விஷயத்திற்கு முக்கியத்தும் அதிகமாக இருக்கும். இப்படி கட்சி அலுவலகம் கட்ட வாங்கிய இடத்தை, தலைமை கழகத்திற்கும், மாவட்ட கழகத்திற்கும் தெரியாமல் விற்பனை செய்ய ஒப்பந்தம் போட்டு பணம் வாங்கிவிட்டார் என்று ஒன்றியச் செயலாளர் மீது சொந்தக் கட்சியினரே புகார் வாசிக்கின்றனர். ஆளுங்கட்சியான தி.மு.க.-விலிருந்துதான் இந்தப் புகார்!
விழுப்புரம் மாவட்டம் மயிலம் ஒன்றிய தி.மு.க. செயலாளர் மலர்மன்னன். மயிலம் ஒன்றியக் குழுத் தலைவரும் இவர்தான். முன்னாள் ஒன்றியச் செயலாளர் பெருமாளும், இளைஞரணியைச் சேர்ந்த அன்சாரியும் இவர் மீதான குற்றச்சாட்டு பற்றி நம்மிடம் விளக்கினார்கள்.
“கூட்டேரிப்பட்டு தேசிய நெடுஞ்சாலை வள்ளிமேடு பேட்டை நெடுஞ்சாலையை அணைத்-தாற்போல் பத்திற்கு அறுபது (10 து 60) அளவில். பழைய கட்சிக்காரரான ரியல் எஸ்டேட் ஓனர் தேவராஜ் என்பவர் கட்சி அலுவலகம் கட்டுவதற்கு இலவச-மாக இடம் கொடுத்தார். பத்தொன்பது வருடங்-களுக்கு முன்பு இடத்தோட மதிப்பு வெறும் மூவாயிரம் ரூபாய். இன்னிக்கு பத்து லட்ச ரூபாயைத் தாண்டும். இதற்கு அப்போதைய மாவட்ட பிரதிநிதி கிருஷ்ணன், நெடி ராமதாஸ், சின்ன நற்குணம் கிளைச் செயலாளர் சக்கரவர்த்தி, தற்போது ம.தி.மு.க. மாநில பொருளாளராக உள்ள டாக்டர் மாசிலாமணி உள்ளிட்டவர்கள் சாட்சி. கட்சியின் சட்டதிட்டத்தின்படி, பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் பெயரிலும், அப்போதும் மயிலம் ஒன்றியச் செயலாளராக இருந்த மலர்மன்னன் பெயரிலும் வாங்கப்பட்டது. அதற்குப் பிறகு மலர்மன்னன் ம.தி.மு.க.வுக்குப் போயிட்டார். தலைமை என்னை (பெருமாள்) ஒன்றிய பொறுப்பாள-ராக நியமித்தது, அலுவலகம், கடைகள் கட்ட பிளான் அப்ரூவல் வாங்கிக்கிட்டு தலைமைக்கு அனுமதி கேட்டு போய் வந்துக்கிட்டு இருந்தேன். இந்நிலை-யில் ம.தி.மு.க.வுக்குப் போன மலர்மன்னன், திரும்-பவும் தி.மு.க.வுக்கு வந்துட்டாரு. அன்றைய சூழ்-நிலையில நாங்க இரண்டு பேரும் தி.மு.க.-விலிருந்து அ.தி.மு.க.வுக்குப் போயிட்டோம். இப்ப செஞ்சி ராமச்சந்திரன், எல்.கணேசன் ஆகியோர் தி.மு.க.வுல இணைஞ்சப்ப நாங்களும் இணைஞ்சுட்டோம்.
மேற்படி இடைவெளியில அக்கம் பக்கம் பிளாட்காரர்கள் கட்சி இடத்தை ஆக்கிரமித்திருக்-கிறார்கள். இது தலைமைக்குத் தெரியாது. மாவட்டச் செயலாளருக்கும் தெரியாது. அரிகிருஷ்ணன் என்பவருக்கு இந்த இடத்தை விற்பதற்கு ஒப்பந்தம் போட்டு நான்கு லட்ச ரூபாய் வாங்கிவிட்டார் மலர்மன்னன். இரண்டு நாட்களுக்கு முன்புதான் திண்டிவனத்தில் நடந்த ஜமாபந்தியில் எங்களுக்கு இடத்தை அளந்து தரவேண்டும் என்றும் அரிகிருஷ்ண-னுக்கு பட்டா தரக் கூடாது என்றும் புகார் கொடுத்திருக்-கிறோம். அடுத்து ஒன்றிய நிர்வாகிகள், கிளை கழகச் செயலாளர்களை கூட்டிக்கிட்டு போய் அமைச்சர் பொன்முடியிடமும், தளபதி மு.க.ஸ்டாலினிடமும் புகார் செய்யப்போகிறோம்” என்றார்கள் இருவரும்.
இவர்களின் குற்றச்சாட்டு பற்றி மலர்மன்னனிடம் கேட்டோம்... “என்னுடைய சொந்தப்பணம் பத்தாயிரம் ரூபாய் கொடுத்து அந்த இடத்தை நான் வாங்கினேன். கொஞ்ச நாள் பொறுத்து பணம் கட்டி அளந்தேன். வருவாய்த்துறை ரெக்கார்ட்ல எங்க இடம் இல்ல. அந்த இடத்தை அரிகிருஷ்ணன் என்பவர் ஆக்கிரமிப்புச் செய்திருந்தார். அதனால மீதி இருந்த இடத்தைச் சேர்த்து அக்ரிமென்ட் போட்டுக் கொடுத்துட்டு நான்கு லட்ச ரூபாய் வாங்கிட்டேன். அந்த இடத்துக்குப் பதிலா யூனியன் அலுவலகம் பக்கத்துல வேற இடம் வாங்கி அங்கே கட்சி ஆபீஸ் பெருசா கட்டப்போறேன் இடத்தோட மதிப்பே பதிமூன்று லட்ச ரூபாய். பத்து பைசாவுக்குப் புண்ணியம் இல்லாதவனுங்க என்மேல புகார் தர்றானுங்க. அதை நம்பாதீங்க. சொந்தப் பணத்தைக் கட்சிக்கு செலவு பண்றவன் நான்.
கட்சி இடத்தை ஆக்கிரமிப்புப் பண்ணதுக்கு தண்டனையா அரிகிருஷ்ணன்-கிட்ட இன்னும் ஒரு லட்சமோ இரண்டு லட்சமோ கேட்டா குடுப்பாரு. வாங்கின இடத்தை ஆரம்பத்துல இருந்து சரியா கவனிக்காம விட்டதால எங்கே தப்பு நடந்ததுன்னே தெரியல. புதுசா இடம் வாங்கி கட்சி அலுவலகம் கட்டப்போற விஷயத்தை அமைச்சர் பொன்-முடிகிட்டகூட சொல்லிட்டேன் நான் எந்தத் தப்பும் பண்ணல” என்றார் உறுதியுடன்.
ஆலகிராமத்தைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் அரிகிருஷ்ணன் என்ன சொல்கிறார்? “மலர் மன்னனுடன் அக்ரிமென்ட் போட்டு இந்த இடத்துக்குப் பதிலா வேற இடம் வாங்கி குடுத்துட்டோம். கட்சி அலுவலகம் கட்ட இரண்டரை லட்ச ரூபாயும், அதுபோக நான்கு லட்ச ரூபாயும், மொத்தமா ஆறரை லட்ச ரூபாய் வாங்கி இருக்காங்க. எண்பதாயிரம் ரூபாய் தனியா வாங்கிக்-கிட்டாங்க. ஒன்றியச் செயலாளர் மலர்மன்னனுக்கும் அவங்க கட்சிக்காரங்களுக்கும் ஒற்றுமை இல்லை. கோஷ்டி சண்டை நடக்குது. அதில் என்னை பலி கொடுத்துடலாம்னு நினைக்கிறாங்க அடாவடி பண்ணி பணம் வாங்கித் தின்னலாம்னு நினைக்-கறாங்க. இனிமே எனக்குத் தொல்லை வந்தா நானே புகார் தரலாம்னு இருக்கேன்” என்றார் அதிரடியாக.
கட்சி அலுவலகம் கட்ட வாங்கிய இடத்தை தலைமையின் அனுமதி இல்லாமல் ஒப்பந்தம் போட்டு பணம் வாங்கிய விவகாரம் அப்பட்டமாய் தெரிகிறது, உடன்பிறப்புகளுக்கு மத்தியில் உற்சாகமாய் நடக்கும் கோஷ்டி சண்டையில் விஷயம் வீதிக்கு வந்துவிட்டது.
*
‘
இனியவன்
|