முதல் பக்கம் | ஆசிரியருக்கு மடல் | முந்தைய இதழ்கள் | தேவதை | திரிசக்தி | முகவரி

 Untitled Document


இது எந்தவகை ஜனநாயகம்?




மரத்துக்குப் பின் மறைவாக வசதியாக ஒளிந்துகொண்டு ஏதோ வேட்டையாடுவதுபோல குறிபார்த்து சுடுகிறார் ஒருவர். தொலைக்-காட்சிகளில் இந்தக் காட்சி தெரிகிறது. யாரைச் சுடுகிறார். காட்டு விலங்குகளையா? இல்லை. மாவோயிஸ்ட்களையாம். மத்திய ரிசர்வ் போலீஸார்தான் இப்படிப் படுத்துக் கிடந்து, மறைந்திருந்து குறிபார்த்துச் சுடுகின்றனர்.

2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 3 -ம் தேதி. மேற்கு வங்க மாநில முதல்வர் புத்ததேவும் அப்போதைய மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானும் கண்ணிவெடி விபத்திலிருந்து உயிர்த் தப்பினர். இவர்களுடன் வந்த பாதுகாப்புப் படையினர் பலரும் படுகாய-மடைந்தனர். இதை வழக்கமான செய்தி-யாகப் பத்திரிகைகள் வெளியிட்டுவிட்டு அடுத்த செய்திக்குப் போய்விட்டன.

இப்போது பரபரப்-பாகப் பேசப்படுகிறது லால்கார். மேற்கு வங்க மாநிலம் வடக்கு மிட்னாபூர் பகுதியில் உள்ள லால்காருக்கு அருகில் ஷால்போனி என்ற இடத்தில் ‘ஜிந்தால் ஸ்டீல் பிளான்ட்’ என்ற நிறுவனத்திற்கு அடிக்கல் நாட்டிவிட்டு இருவரும் திரும்பும் வழியில் காளிசந்தி என்ற பாலத்தில் வந்து கொண்டிருக்கும்போதுதான், இந்தச் சக்திவாய்ந்த கண்ணிவெடி விபத்து நடந்தது. கண்ணிவெடி வைத்தது யார் என்றெல்லாம் யோசிக்கவில்லை அரசாங்கம். அடுத்தநாளே இப்பகுதியில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்தது போலீஸ். கண்ணில் கண்டவர்களை எல்லாம் அடித்து துவைத்து எடுத்தது. ஓர் அப்பாவிப் பெண்ணின் ஒரு பக்கக் கண்ணே பறிபோனது கொடுமையின் உச்சம்.

ஏற்கெனவே நந்திகிராமில் பட்ட அடியால், ஜிண்டால் நிறுவன விஷயத்தை கமுக்கமாகச் செய்து முடிக்கப் பார்த்தார் புத்ததேவ். ஜிண்டால் ஸ்டீல் பிளான்ட் என்ற நிறுவனத்திற்காக, ஐயாயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படுவதற்கு மாவோயிஸ்ட்டுகள் காட்டிய எதிர்ப்பே கண்ணிவெடி எச்சரிக்கை. அதைத் தொடர்ந்து போலீஸாரும், ஆளும் சி.பி.எம். கட்சியின் உள்ளூர் தெனாவெட்டுகளும் லால்காரில் ஆடிய ஆட்டம், அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டது.

ஒவ்வொரு வீட்டிலும் ஒரு மாவோயிஸ்ட் இருப்பதாகக் கூறி வீடுகளை திடீர் திடீரென ரெய்டு நடத்துவது, அதிகாலை வேளையில் வீடுகளின் கதவுகளை உடைத்து உள்ளே இருக்கும் பெண்களை, குழந்தைகளை துன்புறுத்துவது, அந்த எளிய மக்களின் அற்ப உடைமைகளான சைக்கிள்கள், பாத்திரங்கள் ஆகியவற்றை தெருவில் வீசி உடைத்து நாசமாக்குவது என மூன்றுநாட்களுக்கு போலீஸார் ருத்ரதாண்டவம் ஆடிவிட்டனர். அம்மாவட்டமே பீதியில் உறைந்தது.

பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் இந்தப் பகுதியில் தொழிலே விவசாயம்தான். பெரும்பாலும் குத்தகை விவசாயம்தான். தவிர, இலைகளைக் கொண்டே ‘டிஸ்போஸ-பிள் பிளேட்’ எனப்படும் உணவு சாப்பிடும் இலைத் தட்டுகளை செய்துகொடுக்கும் தொழிலில் இம்மக்கள் பெரிதும் ஈடு-பட்டுள்ளனர். எல்லோருமே வறுமைக்கோட்டிற்கும் கீழே வசிப்பவர்கள். இவர்களின் வாழ்க்கை மிகவும் பரிதாப-கரமானது. மின்சாரம் கிடையாது. சாலை வசதி கிடையாது. குடிக்க நல்ல தண்ணீர் கிடையாது. மஞ்சள் கலரில் உள்ள தண்ணீர்தான் பயன்படுத்த முடியும். எந்த வேலை வாய்ப்பும் கிடையாது. அரசின் எந்த நலத் திட்டங்களும் இந்த மக்களுக்குச் சென்றடையவில்லை. வறுமை வறுமை வறுமைதான் இந்த மக்களுக்கு. உள்ளூர் சி.பி.எம். தாதாக்-களின் அட்டூழியம் ஒருபுறம். இவர்கள் மீது புகார் கொடுக்கச் சென்றால் அதைவிட போலீஸின் அராஜகம் மறுபுறம்.

பொறுமை இழந்த இந்தப் பழங்-குடியின மக்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள முடிவெடுத்து போலீஸுக்கு எதிரான குழுக்களை அமைத்தனர். அந்தக் குழுவினர்தான் போலீஸ் - சி.பி.எம். கூட்டணிக்கு எதிராகப் போராடத் தொடங்கினர். பழங்குடியின மக்களின் குமுறல்களை அருகில் உள்ள ஜார்க்கண்ட் மாநில காடுகளில் திரியும் மாவோயிஸ்ட் இயக்கங்கள் ஏற்கெனவே மோப்பம் பிடித்து வந்தனர். போலீஸ் மற்றும் சி.பி.எம். தாதாக்களின் அச்சுறுத்தல்களை கேட்க நாதியற்றுப்போய் இருந்த நிலையில்தான், மாவோயிஸ்ட்களும் பழங்குடியின மக்களுக்குக் கை கொடுக்கவே நிலைமை சூடாகிப்போனது.

அதாவது அடி வாங்கிக் கொண்டே இருந்தவன் தொடர்ந்து அடிவாங்கிக் கொண்டிருந்தால் அது செய்தி அல்ல. அடி வாங்கியவன் திருப்பி அடித்ததும்தான் பரபரப்பான செய்தியாக நமது மீடியாக்கள் நாட்டு மக்களுக்கு அதைச் சொல்ல ஆரம்பிக்கின்றன. அதுதான் இப்போது நடக்கிறது.

அந்த மக்களின் பிரச்னைகள் கடந்த பல மாதங்களாகவே பற்றி எரிகிறது. நாடாளுமன்றத் தேர்தலைக்கூட அப்பகுதியில் நடத்த முடியவில்லை. ஒரு போலீஸ்காரன்கூட உள்ளே வரக் கூடாது என்று தடை விதித்துவிட்டனர். மாவட்ட நிர்வாகமும் கெஞ்சி பார்த்துவிட்டு கடைசியில் மத்திய பாதுகாப்புப் படை போலீஸை மட்டும் வைத்து தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. இம்மக்களின் கோபத்திற்கு தாக்குப்பிடிக்க முடியாமல் நாற்பதுக்கும் மேற்பட்ட ஓட்டுச்சாவடிகள் அமைக்க வேண்டிய இடத்தில், வெறும் நான்கே நான்கு ஓட்டுச் சாவடிகளை மட்டும் வைத்து தேர்தல் சடங்கு நிறைவேற்றப்பட்டது.

அங்குள்ள மக்கள் கேட்பதெல்லாம் தங்களது அடிப்படை வாழ்வாதார உரிமைகளைத்தான். அதைக் கூட எந்த அரசும் நிறைவேற்றித்தராமல் இருந்-து-உள்ளன. பொறுமை இழந்து போய்தான் போலீஸுக்கு எதிரான குழுக்களோடு மாவோயிஸ்ட்களும் இணைந்து உள்ளூர் அரசியல் ரவுடிகளையும் அராஜக போலீஸாரையும் அடித்து துவைத்து எடுக்க ஆரம்பித்தனர். யாரும் எங்களுக்கு எதுவும் தரத் தேவையில்லை.நாங்களே எங்களைப் பார்த்துக் கொள்கிறோம் என்று கூறிவிட்டு, தங்களது பகுதிகளை ‘விடுதலை பெற்று-விட்ட பகுதி’களாக அறிவித்துவிட்டனர்.

அட்டூழியம் செய்து கொண்டிருந்த ஒருசில உள்ளூர் சி.பி.எம். அரசியல்-வாதிகளை கடத்திக் கொண்டுபோய் கொலை செய்ததும், பிரச்னை மேலும் வீரியமானது. மாநில அரசுக்கு நெருக்கடி. மேற்கு வங்கத்தில் 32 ஆண்டுகளாகத் தனிக்காட்டு ராஜாவாக வலம் வந்து கொண்டிருந்த சி.பி.எம். கட்சியினர், இந்தப் பொதுத்தேர்தலில் பெற்ற தோல்வியின் போது அடைந்த பயத்தைவிட, தற்போது கொத்துக் கொத்தாய் கொலை செய்வோம் என்று மாவோயிஸ்ட்கள் கிளம்பியவுடன் பீதியில் உறைந்துள்ளனர். ‘மேற்குவங்க முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்-சார்யாவை கொலை செய்வோம்’ என்று பகிரங்க-மாகவே மாவோயிஸ்ட் தலைவர் கூறினார். ஒரு மாநிலத்தின் முதல்வருக்கே இதுபோன்ற சவால் என்றால், நிலைமை எந்த லட்சணம் என்பதை விரிவாகச் சொல்லத் தேவை-யில்லை. கவர்னர் மாளிகையின் வாசலைக்கூட இதுவரை மிதிக்காமல் சட்டாம் பிள்ளையாய்த் திரிந்த சி.பி.எம். கட்சி எம்.எல்.ஏ.க்கள் பலரும், தங்களுக்குப் பாதுகாப்பு வேண்டுமென வலியுறுத்தி கவர்னரை முதல்முறையாகச் சந்தித்து முறையிட்டுள்ளனர்.

டெல்லி ஜவஹர்லால் பல்கலைக்கழக மாணவர்-கள் ஒன்பதுபேர் லால்காருக்குச் சென்று நேரடியாக நிலைமைகளை ஆராய்ந்து அறிக்கை தயார் செய்துள்ளனர். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளவை களைப் பார்ததால், கரையாத நெஞ்சமும் கரையும். கல்லுக்குக்கூட கண்ணீர் வரும். அத்தனை கொடுமை-களை அம்மக்கள் மீது அரசாங்கம், போலீஸ், அரசியல்வாதிகள் என மூன்று தரப்புமே செய்துள்ளது பட்டவர்த்தனமாகத் தெரிகிறது.

பழங்குடியின மக்களே தங்களுக்குள் குழுக்களை அமைத்துக்கொண்டு போலீஸ் நிலையங்கள், சி.பி.எம். கட்சி அலுவலகங்களை அடித்து நொறுக்கிய-போது, பல உண்மைகள் அம்பலமாயின. போலீஸ் நிலையங்களிலாவது ஆயுதங்கள் துப்பாக்கிகள் இருக்கலாம். ஆனால், அரசியல் கட்சி அலுவலகத்-திலுமா? ஆம். சி.பி.எம். கட்சி அலுவலகங்கள் பலவற்றிலும் துப்பாக்கிகள், பயங்கர ஆயுதங்கள் போன்றவற்றை மக்கள் கைப்பற்றியுள்ளனர்.

தவிர, உள்ளூர் சி.பி.எம். கட்சியைச் சேர்ந்த தாதா வீட்டை மக்களே ரெய்டு செய்தபோது, அங்கு ஏராளமான அரசு ஆவணங்கள் சிக்கின. கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் ஏராளமான பழங்குடியின மக்களின் பெயரைப் போட்டு அந்த ஆளே அனைத்து நிதியையும் சுருட்டியுள்ளார். இந்தத் திட்டத்-துக்கான அடையாள அட்டைகள் ஏராளமாகச் சிக்கியது. ஏராளமான ரேஷன் அட்டைகளும் சிக்கின. இதே-போல, மதிய உணவு திட்டத்-துக்கு வரக்கூடிய பொருள்கள் மற்றும் நிதியுதவி என அனைத்தை-யும் மக்களின் பெயரால் சி.பி.எம். ஆட்களே கொள்ளை-யடித்-துள்ளதும் அம்பலமானது. அரசாங்க அலுவல-கத்தில் இருக்க வேண்டிய அரசு ஆவணங்கள் எல்லாம் உள்ளூர் அரசியல் கட்சி அலுவலகத்-துக்குள் எப்படி வந்தது?

மக்களின் கிளர்ச்சி பெரிதான-வுடன் மாநில போலீஸோடு சேர்ந்து மத்திய அரசின் ரிசர்வ் படையினர் குவிக்கப்பட்டனர். லால்காருக்குள் நுழையவே இரண்டு நாட்கள் பிடித்தன. பதுங்கிப் பதுங்கி உள்ளே போய் பார்த்தால் மாவோயிஸ்டகள் யாரும் இல்லை. எல்லோரும் காடுகளுக்குள் தப்பிவிட்டனர். கடைசியில் யார் அகப்படுவர்? சாதாரண மக்கள்தான். மாவோயிஸ்ட்-களுக்கு ஆதரவு தெரிவித்தது யார்? என்று சல்லடை போட்டு சாமானிய மக்களை துளைத்தெடுத்தனர். மத்தளத்துக்கு இருபக்கம் அடிபோல, ஒருபுறம் போலீஸ், மறுபுறம் மாவோயிஸ்ட் என சாதாரண மக்கள் துன்புறுகின்றனர் என்பதே நிதர்சனம். இத்தனை நாட்களாக அங்கு நடக்கும் பஞ்சம், பசி போன்றவற்றை கண்டு-கொள்ளாத அரசாங்கம், இப்போது பாதிக்கப்பட்ட பகுதிகளில் இலவச அரிசி அளிக்க ஆரம்பித்துள்ளது. அரிசியாய் கூட தராமல் சோறு பொங்கி குழம்பும் சேர்த்து பல இடங்களில் பரிமாறப்படுகின்றது.

பழங்குடியின மக்களின் கிளர்ச்சி குறித்து சில வாரங்களுக்கு முன்புவரை அரசுக்கு எதிராகப் பழங்குடியின மக்கள் போராட்டம் நடத்துவதாகப் பத்திரிகைகள் எழுதின. ஆனால் பிரச்னை பெரிதாகி மத்திய, மாநில போலீஸ் படைகள் உள்ளே இறங்கியவுடன் மாவோயிஸ்ட், தீவிரவாதம் அது இது என்று எழுத ஆரம்பித்துவிட்டன. இத்தனை நாட்களாக கண்டுகொள்ளப்படாமல் இருக்கும் அடிப்படை பிரச்னைகளை பற்றியோ அராஜகங்-களைப் பற்றியோ தேசிய ஊடகங்கள் பேசவில்லை. மாறாக மக்களின் கிளர்ச்சியை சற்றுப் பெயர் மாற்றிப் போட்டு மாவோயிஸ்ட்களின் தீவிரவாதம் என்று பெயர் சூட்டின. மாவோயிஸ்ட்கள் பிரச்னையும் இதில் உள்ளது என்பதை மறுப்பதற்கு இல்லை. ஆனால் பரிதாபத்திற்கு உரிய அந்த மக்களின் அவல நிலையையோ அல்லது அவல நிலைக்குக் காரணமானவர்களையோ படம் பிடித்துக் காட்டவோ அவர்களை தண்டிக்கவோ யாருமே முன்வரவில்லை. இந்த நிமிடம் வரை மாவோயிஸ்ட் தீவிரவாதம் என்றுதான் அனைத்துத் திசைகளில் இருந்தும் கூச்சல் எழுகிறது. அடித்தட்டு மக்களின் அழுகுரல் இங்கு கொச்சை-யாக்கப்-பட்டு வேறுமாதிரியாகத் திரிக்கப்-பட்டு வருகிறது. ஜனநாயக நாட்டில் ஆயுதம் என்ற சொல்லே தீவிரவாதம்-தான் போலும். பழங்குடியின மக்களின் கைகளில் இருப்பதுகூட பீரங்கிகளோ துப்பாக்கிகளோ கனரக ஆயுதங்களோ இல்லை. வெறும் ஈட்டி, கோடாரி, அம்பு, அரிவாள் போன்ற பாரம்பரிய ஆயுதங்கள்தான். இவர்கள்தான் தற்போது தீவிர-வாதிகள். ஆயுதம் தாங்கி எதிர்-போராட்டம் செய்கிற யாரையுமே தீவிரவாதிகளாக மட்டுமே பார்க்க நமக்குக் கற்றுக்கொடுக்கப் பட்டுள்ளது. ஏன் ஆயுதம், எதற்காக போராட்டம், அவர்கள் பிரச்னைதான் என்ன? என்பது பற்றியெல்லாம் ஆராய கற்றுக் கொடுக்கப்-பட-வில்லை.

தற்போது மத்திய அரசு கூறிவிட்டதால், மாவோயிஸ்ட் இயக்கத்தைத் தடை செய்வதாக மாநில அரசும் கூறுகிறது. இதுபோன்ற தடை நடவடிக்கைகள் மட்டுமே எந்தப் பயனையும் தராது. லால்காரில் நடப்பது ஒன்றும் தீவிரவாதமோ பயங்கரவாதமோ கிடையாது. அங்கு உண்மையில் நிலவுவது சமூகப் பொருளாதார அடிப்படை பிரச்னைதான்.

அதைத் தீர்க்க நினைக்காமல் லத்தியையும் துப்பாக்கியையும் தூக்கிக்கொண்டு பழங்குடியின மக்களுக்குத் தீர்வு சொல்ல புறப்படுவது எந்த வகை ஜனநாயகமோ புரியவில்லை!

*





டெல்லியிலிருந்து இராவணா



Comments:

No Comments

Post a Comment
User Name:
E-mail:
Comments:
நமது நிருபரை கடத்திய தி.மு.க.வினர் மீட்டுக் கொடுத்த ஸ்டாலின்!
இது எந்தவகை ஜனநாயகம்?
மீண்டும்திறக்கப்படுமா ‘டன்லப்’ தொழிற்சாலை!
யானையின் மரணமூம் சாமானியனின் சாவும்!
கன்னியாகுமரி கண்ணீர்விடும் சுற்றுலாப் பயணிகள்!
பிரபாகரன் திராவிடர் கழகம் உருவாகும்!
காணாமல் போகும் வைகை!
“கட்சி சொத்தை கைமாற்றிவிட்டார்!”
எண்ணத்தைச் சொல்கிறேன்
“ஓய்வு பெற்றவர்களுக்கே மீண்டும் வேலையா?”
நெல்லை சித்த மருத்துவ மூலிகை ஆராய்ச்சிப் பிரிவு:
விடுதலைப் புலிகளின் இடத்தை நிரப்புவது யார்?
தூங்கும்போது கணவரை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய மனைவி!
தூத்துக்குடியில் புத்துயிர் பெறுமா உப்புத் தொழில்?
கல்லூரிகளை பல்கலைக்கழகங்களாக மாற்றும் திட்டம்: ஏழைகளின் உயர்வல்விக்கு வேட்டு?
நாளெல்லாம் வெடிச்சத்தம் சிக்கித் தவிக்கும் சித்தேரி!
நடவடிக்கை எடுத்த விருது நகர் கலெக்டர்!