நமது நிருபரை கடத்திய தி.மு.க.வினர்
மீட்டுக் கொடுத்த ஸ்டாலின்!

தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர் என்ற கூடுதல் பெருமையுடன் முதல்வர் பதவியில் வீற்றிருக்கிறார் கலைஞர். அந்தப் பெருமைக்குப் பங்கம் விளைவிக்கும் முயற்சியில் தற்காலிகமாக வெற்றி பெற்றிருக்கிறார்கள் சிலர். அந்தச் சிலர், தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் என்பதுதான் வெட்கப்பட வேண்டிய விஷயம்.
நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில், ‘ரித்தீஷ் உயிருக்கு ஆபத்து’ என்ற தலைப்பில் நாம் வெளியிட்ட கட்டுரை தொடர்பாக, அக்கட்டுரையை எழுதிய நமது ராமநாதபுரம் மாவட்ட நிருபர் கிஷோருக்கு, ராமநாதபுரம் நகர தி.மு.க. செயலாளர் ஆர்.ஜி.ரத்தினம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்த வண்ணம் இருந்தனர். ஒரு கட்டத்தில் ரித்தீஷும் அதுபோன்ற மிரட்டல் செயல்களில் ஈடுபட்டதையும் சேர்த்து 18-06-2009 தேதியிட்ட நமது இதழில் கவர் ஸ்டோரி வெளியிட்டோம்.
அந்த இதழ் வெளிவருவதற்கு முதல் நாளே (11-06-09) கிஷோரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ள சூழ்நிலைகளை விளக்கி தமிழக முதல்வருக்கும், போலீஸ் டி.ஜி.பி., ஏ.டி.ஜி.பி. (சட்டம்- ஒழுங்கு) உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கும் கடிதங்கள் அனுப்பப்பட்டதுடன், முறைப்படி புகாரும் தரப்பட்டது.
இதையடுத்து 14-06-09 அன்று நம்மைச் சந்தித்துப் பேசினார் ரித்தீஷ். ‘கொலை மிரட்டல் தொனியில் நான் பேசவில்லை. வன்முறையில் எனக்கு எப்போதும் நம்பிக்கை இருந்ததில்லை. வன்முறையாளர்களை நான் ஆதரிப்பதுமில்லை’ என்று சொன்னதுடன், ‘கவலைப்படாதீர்கள்... என் மூலமாகவோ, ரத்தினம் மூலமாகவோ உங்கள் நிருபருக்கு எந்தத் தீங்கும் வராது’ என்று உத்தரவாதம் அளித்தார். யதார்த்தத்தை உணர்ந்து நாமும் ரித்தீஷுக்கு உள்ள வருத்தங்களை புரிந்துகொண்டு விடைபெற்றோம். இதுகுறித்த செய்தியையும் கடந்த இதழில் (25-06-09) வெளியிட்டிருந்தோம்.
இந்த உறுதிமொழியைத் தொடர்ந்து, நமது நிருபர் கிஷோருக்கும் சில அறிவுரைகளைச் சொல்லி யிருந்தோம். இந்த நிலை-யில் 21-06-09 ஞாயிற்றுக் கிழமையன்று காலை 10.15 மணியளவில் ராமநாதபுரம் புதிய பஸ் நிலையம் எதிரேயுள்ள கடையில் கிஷோரும், ‘நக்கீரன்’ நிருபர் சல்மானும் டீ குடித்துக் கொண்டி ருந்தார்கள். அப்போது அங்கே வந்த ‘மாலைமுரசு’ நிருபர் மாரிமுத்துவும், ‘தினச் சூரியன்’ நிருபர் குகனும், ‘நீ எழுதிய செய்தி தொடர்பாக விசாரிக்க அண்ணன் (ஆர்.ஜி.ரத்தினம்) இப்ப வருவார்’ என்று சொல்லிக் கொண்டே ரத்தினத்திற்கு போன் போட, அடுத்த சில நிமிடங்களில் ஒரு ஸ்கார்பியோ காரில் வந்தார் ரத்தினம். அவருடன் நாகநாத சேதுபதி, முஜிபுர் ரகுமான் உள்ளிட்ட ஆறு ரவுடிகளும் வந்தார்கள்.
கார் வந்து நின்றதும் அதிலிருந்து இறங்கிய ரத்தினம், கிஷோரின் கையை முறுக்கியபடியே காரில் ஏற்றிக்கொள்ள, கார் கிளம்பியது. ‘நக்கீரன்’ நிருபர் சல்மானை இன்னொரு ரவுடி தனது பைக்கில் மிரட்டி உட்கார வைத்து காருக்குப் பின்னாலேயே போயிருக்கிறான். சிறிது தூரத்தில் சல்மானை மிரட்டி திருப்பி அனுப்பிவிட்டார்கள். ஆனால், கிஷோரை ஏற்றிக்கொண்டு போன கார், நயினார் கோயில் ரோட்டில் தனது பயணத்தைத் தொடர்ந்தது.
ராமநாதபுரம் நகர எல்லையைத் தாண்டியதும் காருக்குள் வைத்து கிஷோரை அடிக்க ஆரம்பித்திருக்கிறார் ரத்தினம். ‘இன்னிக்கு உனக்கு சமாதிதாண்டா’ என்று சொல்லிக் கொண்டே கிஷோரின் முகத்தில் ஓங்கிக் குத்த, அவரது உதடு கிழிந்து, ரத்தம் கொட்டியிருக்கிறது. அண்ணனே அடிக்கும்போது அடிவருடிகள் சும்மா இருப்பார்களா? காருக்குள் இருந்த மற்ற ஆறு ரவுடிகளும் தங்கள் பங்குக்கு மாறி மாறி அடிக்க வலி தாளாமல் கதறித் துடித்திருக்கிறார் கிஷோர்.
ராமநாதபுரத்தில் இருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பாண்டியூர் கண்மாய் பகுதிக்குப் போகும் வரை ரத்தினம் தலைமையிலான கொலை வெறிக்கும்பலின் இந்தத் தாக்குதல் தொடர்ந்திருக்கிறது. இதனால் நைந்துபோன நிலையில் இருந்த கிஷோரை, அந்தக் கண்மாய்ப் பகுதியில் காரிலிருந்து இறக்கி, தங்களது அடுத்த கட்ட வெறிச் செயலை அரங்கேற்றியது ரத்தினம் டீம். தனது இடுப்புப் பகுதியில் இருந்த ஒரு பிஸ்டலை எடுத்த ரத்தினம், அதை கிஷோரின் தலையில் வைத்தபடி, “நான் இப்ப ஒருத்தரை மொபைல் போனில் கூப்பிடுவேன். அவரிடம், ரித்தீஷ் பற்றிய செய்தியை எழுதச் சொன்னது பெருநாழி போஸும், எம்.ஏ.சேக்கும்தான் (இருவரும் தி.மு.க. பிரபலங்கள்) என்று சொல்ல வேண்டும்” என்று மிரட்டி, அதன்படியே பேச வைத்திருக்கிறார். அப்படி அவர் அழைத்தது முதலில் ஓர் அமைச்சருக்கும், பின்பு ரித்தீஷுக்கும் என்பது பின்னால் நமக்கு தெரியவந்தது.
கிஷோரை இப்படி மிரட்டி வாக்குமூலம் (மாதிரி) வாங்கியதை நாகநாத சேதுபதி என்பவன் தனது மொபைலில் வீடியோ பதிவு செய்திருக்கிறான். இது முடிந்ததும், அங்கே இரண்டு பேர் பெட்ரோல் கேனுடன் வந்திருக்கிறார்கள். “இவனை இங்கேயே எரித்து விடலாமா?” என்று அதில் ஒருவன் கேட்க, “நாம் விரும்பிய வாக்குமூலத்தைக் கொடுத்துவிட்டான். இனியும் இவன் எழுதினால் அதன் பின்பு இதே இடத்திற்குத் தூக்கி வந்து அப்புறம் எரித்து விடலாம்” என்று சொல்லியிருக்கிறார் ரத்தினம். இந்த நிகழ்வுகள் நடக்கும்போது மணி பிற்பகல் சுமார் 12.30.
அதற்கு அரை மணி-நேரத்திற்கு முன்புதான் ரத்தினத்தின் ஆட்களால் கிஷோர் கடத்தப்பட்ட தகவல் நமது சென்னை அலுவலகத்-திற்குத் தெரியவந்தது. சூழ்நிலையின் விபரீதத்தை உணர்ந்து இந்தத் தகவலை உடனடியாக உள்துறைச் செயலாளர், போலீஸ் டி.ஜி.பி., கூடுதல் டி.ஜி.பி., தென் மண்டல ஐ.ஜி., ராமநாதபுரம் எஸ்.பி., உளவுத்துறை எஸ்.பி. ஆகியோருக்குத் தெரியப்படுத்தினோம். ரத்தினத்தின் மூர்க்கத்தனத்தை உணர்ந்து துணை முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கும் இந்தக் கடத்தல் விஷயத்தைக் கொண்டு போனோம்.
அதிகாரிகள் ஒருபுறம் முழுவீச்சில் தேடுதல் வேட்டையில் இறங்க, விஷயத்தைக் கேள்விப்-பட்டு அதிர்ச்சியடைந்த ஸ்டாலின், அமைச்சர் சுப.தங்கவேலனையும், ஒரு கட்டத்தில் ரத்தினத்தையும் தொடர்பு கொண்டதாகத் தெரிகிறது. “இந்தச் செயல் எந்த வகையிலும் ஏற்கத்தக்கதல்ல. கடத்தப்பட்ட நிருபரை உடனடியாக, அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும்” என்று கடுமையான குரலில் அவர் விடுத்த எச்சரிக்கைக்குப் பலன் இருந்தது. இந்த நேரத்தில் ராமநாதபுரம் எஸ்.பி.செந்தில் வேலனும் ரத்தினத்தின் மொபைலில் தொடர்பு கொண்டு எச்சரிக்கை விடுத்தார். இதையடுத்து தங்களின் தாக்குதல் வேகத்தைக் குறைத்துக்கொண்டு, உயிருடன் கிஷோரை விட்டு-விட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தது ரத்தினம் டீம்.
உதடு கிழிந்ததால் கிஷோரின் சட்டையும், பேன்ட்டும் ரத்தத்தால் குளித்திருந்தது. இந்த நிலையில் அனுப்பினால் நம் தாக்குதலின் வேகம் வெளியே தெரிந்து விடும் என்று நினைத்து புது சட்டை, வேஷ்டி கொண்டு வரச் செய்து, வேறொரு காரில் ஏற்றிக் கொண்டு வந்து பிற்பகல் 1.45 மணிக்கு ராமநாதபுரம் பி-1 காவல் நிலையம் அருகே கீழே இறக்கிவிட்டுவிட்டு பறந்தது ரத்தினம் டீம்.
அந்தக் காவல் நிலையத்திலேயே நடந்த விஷயங்களை விளக்கி புகார் கொடுத்தார் கிஷோர். அடுத்த சில நிமிடங்-களில் எஸ்.பி.செந்தில்-வேலனும் அங்கு வந்து விசாரித்துவிட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தர-விட்டார். இதையடுத்து ரத்தினம், நாகநாத சேதுபதி, முஜிபுர் ரகுமான் உள்ளிட்ட பத்துப் பேர் மீது ஆள்கடத்தல், தாக்கு-தல் உள்ளிட்ட ஆறு-பிரிவுகள் மற்றும் ஆயுதச் சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
படுகாயமடைந்த கிஷோர், அன்று மாலையே ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்-பட்டு, மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். கடும் தாக்குதலில் அவரது இரண்டு காதுகளின் ஜவ்வும் பாதிக்கப்பட்டிருப்-பதாக டாக்டர்கள் சொல்லியிருக்கிறார்கள். சிகிச்சை தொடர்கிறது.
இந்த நேரத்தில் தமிழக முதல்வர் கலைஞருக்கும் வாசகர்களுக்கும் சில விஷயங்களை தெரிவிக்க வேண்டியது கடமை என்று நினைக்கிறோம்.
சம்பந்தப்பட்ட செய்தி தொடர்பாக ரித்தீஷுக்கோ, ரத்தினத்திற்கோ மாற்றுக் கருத்து இருந்தாலோ அவர்கள் சொல்ல விரும்பும் தகவல் வேறு எதுவும் இருந்தாலோ அதைப் பிரசுரிக்க நாம் தயாராக இருக்கிறோம் என்று பலமுறை அவர்களுக்கு எடுத்துச் சொன்னோம். அதை எதையும் மதிக்காமல் இப்படி வன்முறை வழியை கையாண்டதை ஜனநாயகத்-தின் மீது நம்பிக்கைக் கொண்ட யாரும் ஏற்கமாட்டார்கள்.
பத்திரிகைகளை தொடர்ந்து படிக்கும் முதல்வர், நமது நிருபருக்கு விடப்பட்ட கொலை மிரட்டல் செய்தியை அட்டைப்பட கட்டுரை-யாகத் தாங்கி வந்த இதழையும் படித்திருப்பார். இவர் படித்திருப்பார் என்பது ரித்தீஷ், ரத்தினம் போன்ற-வர்களுக்கும் தெரியும். இத்தனைக்கும் பிறகு இவர்களுக்குப் பத்திரிகை-யாளரை கடத்தும் அளவுக்குத் தைரியம் வருகிறது என்றால் அந்தத் தைரியத்தை இவர்களுக்கு அளித்தது யார்?
தனி மனித சுதந்திரம், பத்திரிகை சுதந்திரம், ஜனநாயக உரிமை, கட்சித் தலைமை, சட்ட திட்டம் என எதையுமே மதிக்காமல் தன் போக்கில் தனி ராஜ்ஜியத்தை ராமநாதபுரத்தில் நிறுவி, நடத்திவரும் சலுகையை ரத்தினத்திற்கு அளித்தது யார்?
துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, கொடூரமாகத் தாக்கி, அரசு, சட்டம் என எதற்கும் பயப்படாமல் காட்டுமிராண்டித்தனத்தைத் துணிச்சலாக அரங்-கேற்றியுள்ள ரத்தினம் போன்ற நாலாந்தரப் பேர்-வழிகள் நகரச் செய-லாளர் பொறுப்பில் நீடிப்-பதை எப்படி கலைஞர் அனுமதிக்கிறார்?
நடந்து முடிந்த சம்பவத்தில் ரித்தீஷுக்கு நேரடித் தொடர்பு இல்லை என்றாலும், கிஷோரை கடத்தத் திட்ட-மிட்டது முதல் ஒவ்வொரு நொடி நிகழ்வையும் ரித்தீஷுக்குத் தெரியப்-படுத்திக் கொண்டே இருந்தார்கள் ரத்தினமும், நாகநாத சேதுபதியும். அப்படியானால் நாடாளு-மன்ற உறுப்பினர் என்ற மாண்புமிக்க பதவியைப் பெற்ற பின்பும் இதுபோன்ற சட்ட விரோதச் செயலுக்குத் துணை போன ரித்தீஷின் செயலை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. கலைஞரும் இதைச் சகிக்க மாட்டார் என்று நம்புகிறோம்.
அடுத்து, ‘என்னாலோ, ரத்தினத்தாலோ உங்கள் நிருபருக்கு எந்தத் தீங்கும் விளையாது’ என்று சொன்ன ரித்தீஷின் வாக்குறுதியை நாம் மனப்பூர்வமாக நம்பினோம். வாசகர்-களுக்கும் அதைத் தெரியப்-படுத்தினோம். ஆனால் தனது வாக்குறுதிக்கு மாறாக, இந்தக் காரியத்-திற்கு மறைமுகமாகத் துணைபோன ரித்தீஷின் நேர்மை(?) நம்மை வியக்க வைக்கிறது.
இதையெல்லாம் தூக்கிச் சாப்பிடும் விதமாக நம்மைத் தாக்கியது இன்னொரு அதிர்ச்சி. கடத்தல் சம்பவத்தையே உங்களுக்காகத்தான், உங்கள் நன்மைக்-காகத்-தான்(!) செய்கிறோம் என்று சொல்லி ஓர் அமைச்சரை மூளைச் சலவைசெய்து அவரது ஒத்துழைப்-பையும், இந்த சட்ட விரோதச் செயலுக்குப் பெற்றிருக்-கிறது ரத்தினம் டீம். சட்டமன்றம் நடக்கும் நாட்களில் தனது லிமிட்டுக்-குள் ஒரு சின்ன அசம்பா-விதம் கூட நடக்காமல் போலீஸ் அதிகாரிகள் பார்த்துக்-கொள்-வார்கள். ஏட்டய்யா கூட இதில் கவனமா இருப்பார். ஆக, ஒரு ஏட்டய்யாவிற்கு இருக்கும் பொறுப்பு கூட ஓர் அமைச்சருக்கு இல்லாமல் போனது நிச்சயம் துரதிர்ஷ்டமான ஒன்றுதான்.
சரி... ஏதோ சொன்னார்கள், தவறாகப் புரிந்து கொண்டு இவர்களின் செயல்பாட்டுக்குத் தலையாட்டி-விட்டேன் என்று நினைத்தாரா அந்த அமைச்சர்? இல்லை. இந்தத் தாக்குதல் மற்றும் கடத்தல் சம்பவத்தில் நேரடியாக ஈடுபட்ட முக்கியமான நால்வரை தனது அரவணைப்பிலேயே சென்னைக்கு அழைத்து வந்து தனது வீட்டில் பத்திரமாகத் தங்க வைத்திருப்பதாக நமக்கு ஒரு தகவல் இருக்கிறது. இதை எந்த வகையில் அவரால் நியாயப்படுத்த முடியும்? இப்படி யதார்த்-தங்கள் புரியாத, சட்டத்தை மதிக்காத, ஒருவர் தன் அமைச்ச-ரவையில் நீடிக்க வேண்டுமா என்பதை கலைஞர் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இத்தகைய நபர்களையும் மீறி, உரிய நேரத்தில் செயல்-பட்டு, நிருபர் கிஷோரை உயிருடன் மீட்க உதவிய துணை முதல்வர் ஸ்டாலின் அவர்-களுக்கும், இந்தக் கும்பலுக்கு எதிராகச் சட்டத்தைக் கடுமையாக அமல்படுத்தியே தீருவோம் என்பதில் உறுதியாக இருந்த உள்துறை செயலர் மாலதி மற்றும் எஸ்.பி.செந்தில் வேலன் ஆகியோருக்கும் நமது பத்திரிகை சார்பிலும், வாசகர்கள் சார்பிலும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். ரத்தினம் போன்ற நபர்கள் மீது கட்சி ரீதியாக உரிய நடவடிக்கை எடுப்பதன் மூலமும், சட்டம் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிப்பதன் மூலமும்தான் கட்சிக்கும், ஆட்சிக்குமான நற்பெயரை தக்க வைக்க முடியும் என்ற வேண்டுகோளை முதல்வர் கலைஞரின் முன்பாக வைக்கிறோம்.
ஜனநாயகத்தின் மீதும், சட்டத்தின் மீதும் முழு நம்பிக்கை வைத்து, வாசகர்-களின் உளப்பூர்வமான ஆதரவுடன் நமது பணி தொடரும்.
*நன்றிகள் பல..!
கிஷோர் கடத்தப்பட்ட பதற்றத்தில், அடுத்து ஆகவேண்டிய பணிகளை அவசரகதியில் நாம் செய்து கொண்டிருந்தபோது, அதே பதற்றத்துடன், ஆனால் குரலில் உறுதியுடன் நம்மை தொடர்பு கொண்டவர் நக்கீரன் ஆசிரியர் கோபால். “கிஷோர் எந்தப் பத்திரிகையில் வேலை பார்க்கிறார் என்ப-தெல்லாம் இரண்டாம்பட்சம். பத்திரிகை சுதந்திரத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இந்தச் சட்ட விரோதச் செயலை நாம் அனுமதிக்கக் கூடாது. உறுதியுடன் இதை எதிர்கொள்ள வேண்டும். அதற்கு எங்கள் ஆதரவு உண்டு!” என்று சொல்லி நமது தைரியத்தையும், நம்பிக்கையையும் அதிகரிக்கச் செய்தார் நக்கீரன் கோபால். அவருக்கு நமது உளம்நிறைந்த நன்றிகள்!
இச்சம்பவத்தைக் கேள்விப்பட்டது முதல் நமது உணர்வுகளில் பங்கெடுத்து, உரிய வகையில் ஆதரவு தந்த சக பத்திரிகையாளர்களுக்கு எங்கள் நன்றி. சென்னை மட்டுமின்றி, ஆங்காங்கே மாவட்டங்களில் இச்சம்பவத்திற்கான தங்கள் கண்டனத்தை பல்வேறு வடிவங்களில் வெளிப்படுத்திய பத்திரிகையாளர் சங்கங்களுக்கும், சென்னை பத்திரிகையாளர் மன்றத்திற்கும் எங்கள் நன்றிகள் பல!
‘
-‘தமிழக அரசியல்’ நிர்வாகம்